2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பல்வேறு புதிய சம்பவங்களைத் தமிழ்நாடு பார்க்க நேர்ந்தது. அதில் குறிப்பிடத்தக்கவை, வென்ற எம்.எல்.ஏக்கள் சுடச்சுட தங்கள் பதவிகளை விட்டு விலகி, தவெகவில் சேர்ந்ததும் மீண்டும் அதே தொகுதியில்
2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பல்வேறு புதிய சம்பவங்களைத் தமிழ்நாடு பார்க்க நேர்ந்தது. அதில் குறிப்பிடத்தக்கவை, வென்ற எம்.எல்.ஏக்கள் சுடச்சுட தங்கள் பதவிகளை விட்டு விலகி, தவெகவில் சேர்ந்ததும் மீண்டும் அதே தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடக் காத்திருப்பதும் தான்.
இந்த நிலையில், அக்டோபர் 6 ஆம் தேதி மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தனித் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன? திருப்பூர் மாவட்டம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராக போட்டியிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் சத்யபாமா. அதேபோல மதுராந்தகம் தொகுதியில் வென்றவர் மரகதம் குமரவேல். மே 4ஆம் தேதி முடிவுகள் வெளியாகி, ஜூன் 12ஆம் தேதிதான் தவெக ஆட்சியமைத்தது. ஆனால், அதற்கு முன்பாக மே 25ஆம் தேதியே தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வதாக சபாநாயகரைச் சந்தித்து கடிதம் கொடுத்தனர். இவர்களுடன் ஈரோடு பெருந்துறை தொகுதியில் வென்ற ஜெயக்குமாரும் பதவி விலகினார். இம்முவரும் அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்றவர்கள் தான்.
வெற்றி பெற்றபின் தொகுதி மக்களுக்கு நன்றி சொல்லவும் இல்லை. முதல் சட்டமன்றக் கூட்டம் கூட வரவில்லை. அதற்கு முன்பாகவே பதவி விலகி தவெகவில் இணைந்தனர்.
நடக்கப்போகும் தேர்தலில் வேட்பாளர்கள் யார் என்ற கேள்விக்கே இடமில்லை என்னும்படிக்கு முந்தையகால நிகழ்வுகள் உள்ளன. அதனைத் திரும்பப் பார்ப்போம்.
அப்போது என்ன சொன்னார்கள் தெரியுமா?
“முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா வழிநடத்திய அதிமுக, திமுக உடன் இணைந்து ஆட்சி அமைக்க எங்கள் மனம் விரும்பவில்லை. அதனால் இந்த முடிவை எடுத்துள்ளோம்.
கடந்த 2021 தேர்தலில் நாங்கள் சட்டப்பேரவை உறுப்பினர்களாக செயல்பட்டுள்ளோம். இருந்தும் எங்களால் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற முடியவில்லை. அப்போது திமுக ஆட்சியில் இருந்தது. இந்த முறையும் எங்களால் எதிர்க்கட்சி உறுப்பினர்களாக செயல்பட முடியாது. ஏனெனில், 2026 தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்களை சந்தித்தோம். ‘எங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்’ என அப்போது மக்கள் எங்களிடம் தெரிவித்தனர். இந்த முறையும் வெற்றி பெற வைப்பதாக மக்கள் தெரிவித்தார்கள்.
இந்த சூழலில் எங்கள் தொகுதி மக்களின் நலனுக்காக இந்த முடிவை எடுத்துள்ளோம். இது சுய நலன் சார்ந்தது அல்ல. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக ஆட்சி மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. அவர் நல்லாட்சி கொடுப்பார் என நம்புகிறோம். அதனால் இந்த நிலைப்பாட்டை நாங்கள் எடுத்துள்ளோம். தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது குறித்து தவெக தலைமை முடிவு செய்யும். அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம்” என்று தெரிவித்தார்.
மிகத்தெளிவாக, தங்கள் தொகுதி மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியாக இல்லாமல் அதைச் செய்ய முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். இது தவெகவில் இவர்கள் இணைந்ததன் நோக்கத்தைத் தெளிவுபடுத்துகிறது.
தற்போது இரண்டு தொகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களாக தவெக சார்பில் இருவரும் களமிறக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.