59 ஆண்டுகளுக்குப் பின் தமிழகத்தில் ஊழலற்ற அரசியல் உருவாகியுள்ளது;ஒருவர் செய்யும் தவறை வைத்து ஒட்டுமொத்தத் தலைவரின் உயர்ந்த கொள்கையோடு ஒப்பிடக் கூடாது, தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்-விருதுநகரில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி மாணிக்கம் தாகூர் பேட்டி
பெருந்தலைவர் காமராஜரின் 124-ஆவது பிறந்த நாளான கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு, விருதுநகரில் உள்ள அவரது நினைவில்லத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் எம்.பி மாணிக்கம் தாகூர் மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் ஆகியோர் அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்துத் மரியாதையை செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து, விருதுநகர் நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு எதிரே, “லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்! என்ற தலைப்பிலான மக்கள் விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை கரும்பலகையில் வெள்ளை நிறத்தில் கை அச்சு வைத்து வரைந்து, “எங்களுடைய கரங்கள் என்றைக்கும் கரைபடியாத கரங்கள்” என்பதை சுட்டிக்காட்டி இப்பிரச்சாரத்தைத் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எம்.பி மாணிக்கம் தாகூர், “பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளில், தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற பிரச்சாரத்தை மக்கள் இயக்கமாகத் தொடங்கியுள்ளதாகவும்.
காமராஜர் காலத்தில் லஞ்சமோ, ஊழலோ இல்லாத நேர்மையான நிர்வாகம் இருந்தது, அதன் பிறகு வந்த காலங்களில் கமிஷன் கலாசாரம் பெருகிவிட்டது என்றார். தற்போது 59 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் ஊழலற்ற ஒரு நேர்மையான அரசியலை தமிழகத்தில் பேசுவதற்கான நல்வாய்ப்பு தற்போதைய புதிய த.வெ.க அரசின் மூலம் உருவாகியுள்ளது என்றார். லஞ்சமில்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான தொடக்கப் பணிகளை முதலமைச்சர் விஜய் அவர்களின் தலைமையிலான இந்த அரசு மிகச் சிறப்பாக முன்னெடுத்துள்ளது.
இப்பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, வரும் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்களின் முன்பாக, ‘லஞ்சம் தவிர்; நெஞ்சம் நிமிர்’ என்ற வாசகம் அடங்கிய மக்கள் கையெழுத்து இயக்கம் நடைபெற உள்ளதாகவும்,லஞ்சத்தை ஒழிக்க வேண்டும், நேர்மையாக வாழ வேண்டும் என்று நினைக்கும் அத்தனை சாமானிய பொதுமக்களும், காங்கிரஸாரும் இதில் கலந்துகொண்டு கையெழுத்திட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
தமிழக காங்கிரஸில் நிலவும் உட்கட்சிப் பூசல்கள் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ‘காங்கிரஸ் என்பது ஒரு பெரிய குடும்பம். குடும்பத்திற்குள் தினசரி பேச்சுவார்த்தை இல்லை என்றால் சண்டைகள் நீதிமன்றம் வரை செல்வது இயல்பு. அதேபோல்தான் நாங்களும் மூத்த தலைவர்களை நேரில் அழைத்து, கருத்துக்களைக் கேட்டுப் பேசி வருகிறோம் என்றும் பத்திரிகைகள் வாயிலாகத் தெரிந்து கொள்வதை விட, பர்சனலாகப் பேசி கன்சல்டேட்டிவ் பிராசஸ் (Consultative Process) செய்வதே காங்கிரஸின் பலம் என்றும்ஙஇளைஞர்களாகிய தாங்கள் மூத்தவர்களின் அறிவுரைகளைக் கேட்டு, மரியாதையோடு செயல்பட்டால் பாதிப் பிரச்சினைகள் தீர்ந்துவிடும்’ என்றார்.
தமிழகத்தில் த.வெ.க ஆட்சி குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளது பற்றிக் கேட்டபோது, ‘எம்.ஜி.ஆர் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கம் அதிமுக. ஜெயலலிதா அவர்களும் பல சோதனைகளைக் கடந்து அந்த இயக்கத்தைக் காப்பாற்றினார். ஆனால், அப்படிப்பட்ட ஒரு மாபெரும் பேரியக்கத்தை எப்படி எல்லாம் சிதைத்து, ஒட்டுமொத்தமாக அழிக்க முடியும் என்பதற்கு ஒரு ‘கிளாசிக் எக்ஸாம்பிள்’ (Classic Example) தான் எடப்பாடி பழனிசாமி என்றும் 2016-ல் தொடங்கி 2026 தேர்தல் வரை அதிமுகவை 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட் இழக்கச் செய்த பெருமை அவரையே சாரும். ஒரு கட்சியை எப்படி அழிக்க வேண்டும் என்று யாராவது பிஎச்.டி (PhD) ஆராய்ச்சி செய்தால், அதில் எடப்பாடி பழனிசாமிதான் முதன்மை கதாபாத்திரமாக இருப்பார்.
அவர் அடுத்தவர்களை விமர்சிப்பதை விடுத்து, முதலில் தன் கட்சியை பிழைக்க வைக்கும் வழியைப் பார்க்கட்டும்’ என்று காரசாரமாகச் சாடினார்.செங்கல்பட்டு பகுதியில் த.வெ.க ஆதரவாளர் ஒருவர் அரசு ஒப்பந்ததாரரிடம் ₹3.5 லட்சம் லஞ்சம் வாங்கிய வீடியோ மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சப் புகார் எழுந்துள்ளதே என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு, ‘தற்போதைய புதிய அரசு அமைந்து 60, 70 நாட்கள்தான் ஆகிறது. மாற்றுத் திறனுள்ள தூய்மையான நிர்வாகத்தைக் கொண்டுவர முதலமைச்சர் விஜய் மிக உயர்ந்த லட்சியத்தோடு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
எலெக்ஷனுக்கு முன்பும் பின்பும் பல கட்சிகளில் இருந்தும் ஆட்கள் உள்ளே வந்திருப்பதால், அவர்களின் பழைய லஞ்சப் பழக்கவழக்கங்கள் மாறுவதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். அதற்காகக் கீழ்மட்ட நிர்வாகி ஒருவர் செய்யும் தவறை, ஒட்டுமொத்தத் தலைவரின் உயர்ந்த கொள்கையோடு ஒப்பிடக் கூடாது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும்’ என்று விளக்கமளித்தார்.மத்தியில் ஆளும் பாஜக அரசு ஏப்ரல் 17-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்ட உயர்கல்வித் துறை தொடர்பான மசோதாவை (2025 புதிய சட்டம்), மீண்டும் குளிர்காலக் கூட்டத்தொடரில் கொண்டுவர சதி செய்கிறது.
இதற்காகச் சிபிஐ, அமலாக்கத்துறை (ED) போன்ற அமைப்புகளைப் பயன்படுத்தித் திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா போன்ற எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ-க்களை அமித்ஷா விலைக்கு வாங்கி வருகிறார். மாநிலங்களின் உயர்கல்வி அதிகாரங்களைப் பறிக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க-வின் இந்தச் சதித்திட்டத்தை இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக மற்றும் தவெக போன்ற கட்சிகள் நாடாளுமன்றத்தில் ஒன்றிணைந்து கடுமையாக எதிர்த்துத் தோற்கடிக்கும்” என்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.