அரியலூர்: TASMAC போராட்டம்- மாணவிகள் மீது தாக்குதலா? நடந்தது என்ன?
July 12, 2026
0
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் 11.07.2026 சனிக்கிழமை நடத்திய போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டதும் காவல்துறை நடத்திய தடியடியில் குழந்தைகள் தாக்கப்பட்டதாகவும் காணொளிகள் பரவி வருகின்றன. முதலில்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கோடாலி என்ற கிராமத்தில் டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் 11.07.2026 சனிக்கிழமை நடத்திய போராட்டத்தில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டதும் காவல்துறை நடத்திய தடியடியில் குழந்தைகள் தாக்கப்பட்டதாகவும் காணொளிகள் பரவி வருகின்றன.
முதலில் அடிப்படையான சில கேள்விகளைப் பார்ப்போம்.
புதிய போராட்டமா? அல்லது நீண்ட நாள் கோரிக்கையா? ஆம் எனில் இப்போது இப்படி ஒரு பெரிய போராட்டம் ஏன்? அண்மையில் ஏதும் சம்வங்கள் நடந்ததா?
பொதுமக்கள் போராட்டம் என்றால், இதில் சீருடையோடு பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டது எப்படி? பின்னணி என்ன?
போராட்டத்தில் எங்கு மோதல் வெடித்தது?
குழந்தைகளை அடித்தார்களா?
பள்ளிக் குழந்தைகள் வந்தது எப்படி?
நீண்டநாள் போராட்டமாக இது தொடரும் நிலையில், ஊர்மக்கள் கூடிப்பேசி பள்ளி மாணவர்களைப் ஓராட்டத்தில் ஈடுபடுத்தியுள்ளனர். இந்தப் போராட்டத்தின்போதுதான் கடை திறந்திருப்பதாக ஒரு செய்தி பரவியது. அதன் அடிப்படையில் மக்கள் கூட்டம் கடையை நோக்கி ஓடவே, பதற்றம் நிலவத் தொடங்கியது.
காவல்துறை மறுப்பு
தடியடி நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், காவல்துறை இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அறிக்கையில் குறிப்பிடப்பட்டதாவது, ”உள்நோக்கத்துடன் கூடிய தவறான தகவலை பரப்பி வரும் நபர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
அரியலூர் மாவட்டம், தா.பழூர் காவல் நிலையம், கோடாலி கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் (கடை எண்-6471)-ஐ அகற்றக்கோரி 11-07-2026 ஆம் தேதி நடந்த சாலை மறியலின் போது டாஸ்மாக் கடையை அடியுங்கள் என்று பொது மக்களை தூண்டி விடவே, பொது மக்களும் பள்ளி மாணவ மாணவிகளும் டாஸ்மாக் கடையை நோக்கி அனைவரும் கண்மண் தெரியாமல் ஓடியபோது அங்கு பணியில் இருந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்கள் அவர்களை ஓடாதீர்கள் என்று தடுக்க முற்பட்டபோது அதில் சிலர் தடுமாறி விழுந்தனர்.
காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி ஒன்றும் நடத்தவும் இல்லை, தாக்கவும் இல்லை என்று அரியலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
அதற்கு பின்னரும் காவல்துறை தாக்கியதாகவும் தடியடி நடத்தியதாகவும் வேண்டுமென்றே ஏதோ உள்நோக்கத்துடன் தவறான தகவலை பரப்பி வரும் நபர்களை கண்டிப்பது மட்டுமல்லாமல் அவர்கள் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று இதன்மூலம் அரியலூர் மாவட்ட காவல்துறை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.”
மாணவர்கள் மீது கைவைக்க யார் அதிகாரம் தந்தது?
ஆனால், மாணவிகள் கீழே மயங்கிக் கிடப்பது போன்ற சங்கடமளிக்கும் காட்சிகள் வெளியாயின. அதில், “எங்களை எப்படி அடிக்கலாம். ஸ்டூடண்ட்ஸ் மேல கைவைக்க போலீசுக்கு என்ன ரைட்ஸ் இருக்கு” என்று மாணவிகள் கேட்பது பதிவாகியிருக்கிறது. அதே காட்சியில், மாணவி ஒருவரின் கைகளில் காயமாகியிருப்பதும் காட்டப்படுகிறது. இதுகுறித்தும் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
எந்தவிதமான தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று காவல்துறை மறுத்த நிலையில், மாணவியின் காயத்துக்குக் காவல்துறைதான் காரணம் என்றும் குற்றம் சாட்டப்படுகிறது. இதற்கு முறையான விளக்கத்தைக் காவல்துறை தரவேண்டும்.
மேலும், போலீஸ் அராஜகம் ஒழிக என்று முழக்கமிட , மாணவிகளைத் தூண்டும் விதமாக ஒருவர் பேசுவதையும் அதே காணொளியில் கவனிக்க முடிகிறது. இதுகுறித்து விசாரிப்பதன் மூலம் பள்ளி மாணவர்கள் தூண்டப்பட்டார்களா என்ற கோணத்தையும் தெளிவு பெற முடியும்.
அமைச்சர் சொல்வது என்ன?
இது குறித்து மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ், “எதிர்க்கட்சி தூண்டுதலில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் நடத்துகின்றனர். தொழிலாளர்கள் சூழ்ச்சிக்கு பலியாக வேண்டாம். பின்விளைவுகளை ஏற்படுத்தும் போராட்டங்களை கைவிட்டு அரசுக்கு தொழிலாளர்கள் ஒத்துழைக்க வேண்டும். டாஸ்மாக் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு வசதியை வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த அரசு தொழிலாளர்களின் நலனுக்காக சம்பள உயர்வு, ESI உள்ளிட்ட பல முன்னெடுப்புகளை எடுத்திருக்கிறது. அரசின் மீது நம்பிக்கை வைத்து, இந்தத் துறையை நாமெல்லாம் சேர்ந்து சீரமைப்போம்.” என்றார்.”
கடை நிரந்தரமாக மூடல்:
மக்கள் போராட்டத்தின் எதிரொலியாக, இன்று 12.07.2026 முதல் கோடாலி டாஸ்மாக் கடை நிரந்தரமாக மூடப்படும் என்று டாஸ்மாக் மேலாளர் அறிவித்துள்ளார்.
அவசர அவசரமாகத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், பென் பாய்ண்ட் வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள். சமூக ஊடகங்களில் வரும் உடனடி கருத்துரைகளுக்கும் (Opinions) கதாவாதங்களுக்கும் (Narratives) இரையாகிவிட வேண்டாம். இதுவரை வெளிவந்த காட்சிகள் சங்கடமளிப்பவையாக உள்ளன. இந்தச் சம்பவம் குறித்து இதுவரை அரசு ஏதும் சொல்லாத நிலையில், பல்வேறு பதிலளிக்கப்படாத கேள்விகள் இதில் தொக்கி நிற்கின்றன.