ஊடகமும் ஊடகவியலும் 2026 – சில புரிதல்கள்
- July 11, 2026
- 0
நாம் பார்ப்பவை அனைத்தும் செய்திகளா? செய்தியாகத் தோன்றுபவை அனைத்தும் ஊடகவியலா? சிந்திப்போம்
நாம் பார்ப்பவை அனைத்தும் செய்திகளா? செய்தியாகத் தோன்றுபவை அனைத்தும் ஊடகவியலா? சிந்திப்போம்
காலையில் வீட்டு வாசலில் விழும் நாளிதழ், மாலை ஒலிக்கும் வானொலிச் செய்தி, இரவு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சிச் செய்தி ஆகியவையே பெரும்பாலான மக்களுக்கு உலகத்தைத் திறக்கும் சாளரங்களாக இருந்தன. இன்று அந்தச் சாளரம் கைகளுக்குள் வந்துவிட்டது. கைப்பேசித் திரையை மேலிருந்து கீழாக நகர்த்தும் சில நொடிகளில் போர், தேர்தல், பங்குச்சந்தை, திரைப்படம், வானிலை, வதந்தி, விளம்பரம், தனிநபர் கருத்து என அனைத்தும் ஒரே செய்தியோட்டத்தில் நம்மை வந்தடைகின்றன.
இந்த மாற்றத்தின் மையத்தில் ஓர் அடிப்படைக் கேள்வி இருக்கிறது: நாம் பார்ப்பவை அனைத்தும் செய்திகளா? செய்தியாகத் தோன்றுபவை அனைத்தும் ஊடகவியலா?
அல்ல.
‘ஊடகம்’ என்பது தகவலை ஒருவரிடமிருந்து மற்றொருவரிடம் கொண்டு செல்லும் வழி அல்லது அமைப்பு. நாளிதழ், வானொலி, தொலைக்காட்சி, இணையதளம், யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்றவை ஊடகங்கள்.
ஆனால் ஊடகவியல் என்பது தகவலை வெறுமனே பரப்புவது அல்ல. ஒரு நிகழ்வைப் பற்றிய தகவல்களைத் திரட்டுதல், அவற்றின் உண்மைத்தன்மையைச் சரிபார்த்தல், சம்பந்தப்பட்ட தரப்புகளின் கருத்தைப் பெறுதல், பின்னணியுடன் விளக்குதல், பொதுநலக் கண்ணோட்டத்தில் மக்களிடம் கொண்டு சேர்த்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய தொழில்முறைச் செயல் தான் ஊடகவியல்.
இந்தியப் பத்திரிகைக் கவுன்சிலின் ஊடகவியல் நடத்தை நெறிமுறைகளின்படி, பொதுநலன் சார்ந்த செய்திகள், கருத்துகள் மற்றும் தகவல்களை நியாயமான, துல்லியமான, பக்கச்சார்பற்ற, கண்ணியமான முறையில் மக்களுக்கு வழங்குவதே ஊடகவியலின் அடிப்படை நோக்கம். செய்தியாளர் செய்தியைத் திரட்டி, உரிய பின்னணியில் வைக்க வேண்டுமே தவிர, தானே செய்தியை உருவாக்கக் கூடாது என்றும் அந்த நெறிமுறை வலியுறுத்துகிறது.
எனவே, ஒரு கைப்பேசியில் பதிவு செய்யப்பட்ட காணொளி ஒரு தகவலாக இருக்கலாம். அதைப் பகிரும் பதிவு ஓர் ஊடகச் செயலாக இருக்கலாம். ஆனால் அந்தக் காணொளி எப்போது எடுக்கப்பட்டது, எங்கு எடுக்கப்பட்டது, அதில் இருப்பவர்கள் யார், அதற்கு முன்பும் பின்பும் என்ன நடந்தது, தொடர்புடையவர்களின் பதில் என்ன என்பவற்றைச் சரிபார்த்து வெளியிடும்போதுதான் அது ஊடகவியலாக மாறுகிறது.
2025ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகையில் சுமார் 74 விழுக்காட்டினர், அதாவது 600 கோடி மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவதாக சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம் மதிப்பிட்டுள்ளது. அதே நேரத்தில் சுமார் 220 கோடி மக்கள் இன்னும் இணையத்திற்கு வெளியே உள்ளனர். 15 முதல் 24 வயதுடைய இளைஞர்களில் இணையப் பயன்பாடு 82 விழுக்காடாக உள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சி மேலும் வேகமாகியுள்ளது. இணையம் மற்றும் கைப்பேசி சங்கத்தின் 2025ஆம் ஆண்டுக்கான மதிப்பீட்டின்படி, நாட்டில் 95.8 கோடி செயலில் உள்ள இணையப் பயனர்கள் உள்ளனர்; அவர்களில் 57 விழுக்காட்டினர் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள்.
2024ஆம் ஆண்டிலேயே இந்தியாவில் 88.6 கோடி செயலில் உள்ள இணையப் பயனர்கள் இருந்தனர். அவர்களில் சுமார் 65.5 கோடி பேர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தியதாகக் காந்தார்–இந்திய இணையம் மற்றும் கைப்பேசி சங்க ஆய்வு கூறுகிறது.
இது ஒரு தொழில்நுட்ப மாற்றம் மட்டுமல்ல. அதிகாரம் சார்ந்த மாற்றமும் ஆகும். முன்பு எந்தத் தகவல் செய்தியாக வேண்டும் என்பதை ஆசிரியர்களும் செய்தி நிறுவனங்களும் முதன்மையாகத் தீர்மானித்தன. இன்று செய்தி நிறுவனங்களுடன் சேர்ந்து சமூக ஊடக நிறுவனங்கள், தேடுபொறிகள், காணொளித் தளங்கள், செல்வாக்காளர்கள், அரசியல் பிரமுகர்கள், செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் ஆகியவையும் பொதுமக்கள் எதைப் பார்க்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கின்றன.
2026ஆம் ஆண்டுக்கான ராய்ட்டர்ஸ் இன்ஸ்டிட்யூட் டிஜிட்டல் செய்தி ஆய்வு, 48 ஊடகச் சந்தைகளில் மக்களின் செய்திப் பழக்கங்களையும் நம்பிக்கையையும் ஆராய்ந்துள்ளது. அந்த ஆய்வின்படி, “பெரும்பாலான நேரங்களில் செய்திகளை நம்புகிறோம்” என்று கூறியவர்களின் சராசரி 37 விழுக்காடு மட்டுமே. 2015ஆம் ஆண்டு இந்தக் கேள்வி அளவிடத் தொடங்கியதிலிருந்து பதிவான மிகக் குறைந்த அளவு இதுவாகும். ஆய்வில் இடம்பெற்ற 48 சந்தைகளில் 29 இடங்களில் செய்தி மீதான நம்பிக்கை குறைந்துள்ளது.
இந்தியாவில் செய்தி மீதான மொத்த நம்பிக்கை 39 விழுக்காடாகப் பதிவாகியுள்ளது. இது உலகச் சந்தைகளின் சராசரியைவிட இரண்டு விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம் என்றாலும், முந்தைய ஆண்டைவிட நான்கு புள்ளிகள் குறைவாகும். இந்தியாவில் பாரம்பரிய அச்சு ஊடக நிறுவனங்களும் பொதுச் சேவை ஒளிபரப்பாளர்களும் ஒப்பீட்டளவில் அதிக நம்பிக்கையைத் தக்க வைத்திருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
ஆனால் இந்த இந்தியத் தரவு நாட்டின் ஒட்டுமொத்த மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துவதில்லை. முக்கியமாக ஆங்கிலம் அறிந்த, இணையத்தில் செய்தி பயன்படுத்தும் பயனர்களிடையே நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பாகும். தொலைக்காட்சி, நாளிதழ் மற்றும் மாநில மொழி ஊடகங்களை மட்டுமே சார்ந்திருக்கும் பெரும் மக்கள்தொகையின் பார்வை இதில் முழுமையாகப் பதிவாகவில்லை என்று ஆய்வு அமைப்பே எச்சரிக்கிறது.
டிஜிட்டல் யுகத்தின் மிகப்பெரிய முரண்பாடு இதுதான்: மக்கள் நம்பாத தளங்களையே அதிகமாகப் பயன்படுத்துகிறார்கள்.
2026 ஆய்வில் இடம்பெற்ற சந்தைகளின் சராசரிப்படி, 54 விழுக்காட்டினர் சமூக ஊடகங்கள் மற்றும் காணொளித் தளங்கள் மூலம் செய்திகளைப் பெறுகின்றனர். செயற்கை நுண்ணறிவு உரையாடல் சேவைகளையும் சேர்த்தால் இந்த அளவு 56 விழுக்காடாகிறது. தொலைக்காட்சி செய்திகளை வாரந்தோறும் பயன்படுத்துவோர் 52 விழுக்காடாகவும், செய்தி நிறுவனங்களின் இணையதளங்கள் மற்றும் செயலிகளைப் பயன்படுத்துவோர் 51 விழுக்காடாகவும் குறைந்துள்ளனர்.
சமூக ஊடகங்களையும் காணொளித் தளங்களையும் தங்களது முக்கிய செய்தி ஆதாரம் என்று கூறுவோர் 2021இல் 22 விழுக்காடாக இருந்த நிலையில், 2026இல் 30 விழுக்காடாக உயர்ந்துள்ளனர். செய்திகளுக்காக சமூக ஊடகங்கள் மற்றும் காணொளித் தளங்களை மட்டுமே சார்ந்திருப்போர் 6 விழுக்காட்டிலிருந்து 12 விழுக்காடாக இரட்டிப்பாகியுள்ளனர்.
ஆனால் அதே சமூக ஊடகங்களில் கிடைக்கும் செய்தியை நம்புவதாகக் கூறுவோர் 22 விழுக்காடு மட்டுமே. செயற்கை நுண்ணறிவு அமைப்புகள் வழங்கும் செய்தி பதில்களை நம்புவோர் 20 விழுக்காடு. இது செய்திகளின் மீதான ஒட்டுமொத்த நம்பிக்கையான 37 விழுக்காட்டைவிட மிகவும் குறைவு.
இதனை “வசதி–நம்பிக்கை இடைவெளி” என்று புரிந்துகொள்ளலாம். மக்கள் அதிகம் நம்புவதால் சமூக ஊடகங்களுக்குச் செல்வதில்லை; அவை எப்போதும் கையில் இருப்பதால், இலவசமாக இருப்பதால், வேகமாகப் புதுப்பிக்கப்படுவதால், காணொளியாக எளிதில் புரிவதால் அங்கே செல்கிறார்கள்.
தொலைக்காட்சியை இயக்குவது அல்லது நாளிதழைத் திறப்பது ஒரு திட்டமிட்ட செய்திச் செயலாக இருந்தது. சமூக ஊடகங்களில் நிலைமை வேறுபட்டது. மக்கள் நண்பர்களின் பதிவுகளைப் பார்க்கவோ, பொழுதுபோக்குக் காணொளிகளை ரசிக்கவோ, உரையாடவோ செல்லும் போது இடையில் செய்திகளை எதிர்கொள்கிறார்கள்.
ராய்ட்டர்ஸ் ஆய்வின்படி, யூடியூப் மற்றும் எக்ஸ் தளங்களைப் பயன்படுத்துவோரில் பாதிக்கும் மேற்பட்டோர் அவற்றைச் செய்திகளைப் பெற உதவும் தளங்களாகக் கருதுகின்றனர். ஆனால் முகநூல், இன்ஸ்டாகிராம், டிக்டாக் ஆகிய தளங்களில் பெரும்பாலானோர் வேறு காரணங்களுக்காகச் சென்றிருக்கும்போது தற்செயலாகச் செய்திகளைப் பார்க்கின்றனர்.
இதனால் செய்தி என்பது மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒன்றாக மட்டுமில்லாமல், கணினி வழிமுறைகள் தேர்ந்தெடுத்து மக்கள் முன் வைக்கும் ஒன்றாகவும் மாறியுள்ளது. நாம் ஏற்கெனவே விரும்பிய பதிவுகள், பார்த்த காணொளிகள், தேடிய சொற்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அடுத்த தகவல்கள் வரிசைப்படுத்தப்படுகின்றன. இதனால் ஒரே நிகழ்வைப் பற்றிய முற்றிலும் மாறுபட்ட தகவல் உலகங்களுக்குள் இரு நபர்கள் வாழக்கூடிய சூழல் உருவாகிறது.
இணையத்தில் எது உண்மை, எது பொய் என்பதைத் தீர்மானிப்பது குறித்து கவலைப்படுவதாக 62 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். இது முந்தைய ஆண்டைவிட நான்கு விழுக்காட்டுப் புள்ளிகள் அதிகம். செயற்கையாக உருவாக்கப்பட்ட காணொளிகள், அரசியல் நோக்கமுடைய தவறான தகவல்கள், செயற்கை நுண்ணறிவால் பெருமளவில் உருவாக்கப்படும் தரமற்ற உள்ளடக்கங்கள் போன்றவை இந்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
இங்கு பொய்ச் செய்தி என்பது முழுவதும் கற்பனையாக உருவாக்கப்பட்ட தகவல் மட்டுமல்ல. பழைய படத்தைப் புதிய சம்பவத்துடன் இணைத்தல், காணொளியின் ஒரு பகுதியை மட்டும் வெளியிடுதல், உண்மையான தரவைத் தவறான பின்னணியில் பயன்படுத்துதல், கருத்தைச் செய்திபோல வெளியிடுதல், விளம்பரத்தைச் செய்தியாகக் காட்டுதல், தலைப்பில் மிகைப்படுத்தி உள்ளடக்கத்தில் வேறு தகவல் வழங்குதல் ஆகியவையும் மக்களின் நம்பிக்கையைச் சிதைக்கின்றன.
அதனால்தான் பத்திரிகைக் கவுன்சில், அடிப்படையற்ற, தவறான, திரிக்கப்பட்ட செய்திகளைத் தவிர்க்கவும், ஒரு பிரச்சினையின் முக்கியத் தரப்புகள் அனைத்தையும் பதிவு செய்யவும், வதந்திகளை உண்மைகளாக வெளியிடக்கூடாது என்றும் கூறுகிறது.
மக்கள் செய்திகளை நம்பாமல் இருப்பதுடன், சிலர் அவற்றிலிருந்து விலகவும் தொடங்கியுள்ளனர். ராய்ட்டர்ஸ் ஆய்வில், செய்திகளைச் சில நேரங்களிலாவது வேண்டுமென்றே தவிர்ப்பதாக 42 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர். 2017இல் இந்த அளவு 29 விழுக்காடு மட்டுமே. செய்திகளில் மிகவும் அல்லது தீவிரமாக ஆர்வம் இருப்பதாகக் கூறியவர்களின் சராசரி 2021இல் 59 விழுக்காடாக இருந்த நிலையில், 2026இல் 46 விழுக்காட்டுக்கும் கீழாகக் குறைந்துள்ளது.
இந்தியாவுக்கான இணையவழிக் கருத்துக்கணிப்பில் செய்திகளைச் சில நேரங்களிலாவது தவிர்ப்பதாகக் கூறியவர்கள் 52 விழுக்காடு. அதே நேரத்தில், செய்திகளை சமூக ஊடகம், செய்தியிடல் செயலி அல்லது மின்னஞ்சல் மூலம் பகிர்வோர் 47 விழுக்காடு.
அதாவது மக்கள் செய்தியிலிருந்து முழுமையாக விலகவில்லை. அதிகமான எதிர்மறைச் செய்திகள், மீண்டும் மீண்டும் ஒளிபரப்பப்படும் விவாதங்கள், அரசியல் மோதல்கள், பரபரப்பூட்டும் தலைப்புகள் ஆகியவற்றால் சோர்வடைந்தாலும், தங்களுக்கு முக்கியமாகத் தோன்றும் தகவல்களைத் தொடர்ந்து பகிர்கின்றனர்.
மக்களின் எண்ணம் இவ்வாறு இரண்டுபட்டுள்ளது: “செய்தி தேவை; ஆனால் இந்த அளவு இரைச்சல் தேவையில்லை.”
சமூக ஊடகப் பிரபலங்களும் தனிநபர் செய்தி உருவாக்குநர்களும் இன்றைய ஊடகத்தின் புதிய முகங்களாக வளர்ந்துள்ளனர். ஆய்வில் 27 விழுக்காட்டினர், முதன்மையாகச் செய்திகளை உருவாக்கும் தனிநபர்களின் உள்ளடக்கங்களை முந்தைய வாரத்தில் பார்த்ததாகக் கூறினர். பொழுதுபோக்கு உள்ளடக்கத்துடன் அவ்வப்போது நடப்பு நிகழ்வுகளைப் பேசும் உருவாக்குநர்களையும் சேர்த்தால் இந்த அளவு 46 விழுக்காடாகிறது.
மக்கள் இவர்களை பாரம்பரிய ஊடகங்களைவிட உரையாடல் பாணியில் பேசுபவர்கள், எளிதாகப் புரிய வைப்பவர்கள், சுவாரசியமாக விளக்குபவர்கள் என்று கருதுகின்றனர். அதே நேரத்தில் நம்பகத்தன்மை மற்றும் பக்கச்சார்பின்மை போன்ற அடிப்படைச் செய்தி மதிப்புகளில் பாரம்பரிய ஊடகங்களே வலுவாக இருப்பதாகப் பொதுமக்கள் கருதுகின்றனர். ஆனாலும், தனிநபர்களின் பார்வையாளர்களே அதிகரித்து வருகின்றனர்
இதனால் யார் வேண்டுமானாலும் செய்தி வெளியிட முடியும் என்ற வாய்ப்பு உருவாகியுள்ளது. ஆனால் செய்தியாளர், விமர்சகர், அரசியல் பிரசாரகர், விளம்பரத் தூதர் ஆகியோருக்கிடையேயான வேறுபாடும் மங்கியுள்ளது. ஒரே நபர் காலையில் செய்தி விளக்கம் வழங்கி, மதியம் ஒரு கட்சியின் கருத்தை ஆதரித்து, மாலையில் ஒரு வணிகப் பொருளை விளம்பரப்படுத்தும் சூழலில், அவர் எந்தப் பொறுப்பில் பேசுகிறார் என்பதைப் பார்வையாளர் அறிய முடியாமல் போகிறது.
செயற்கை நுண்ணறிவு உரையாடல் அமைப்புகளை வாரந்தோறும் செய்திகளுக்காகப் பயன்படுத்துவோர் 2025இல் 7 விழுக்காடாக இருந்த நிலையில், 2026இல் 10 விழுக்காடாக உயர்ந்துள்ளனர். 18 முதல் 24 வயதுடையவர்களில் சமூக ஊடகங்கள், காணொளித் தளங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு அமைப்புகளே முக்கிய செய்தி வழி என்று கூறுவோர் 52 விழுக்காடு.
செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான காரணங்களாகப் பல ஊடகங்களின் தகவல்களை ஒரே பதிலில் தொகுத்துப் பெறுதல், தொடர்ச்சியாகக் கேள்விகள் கேட்டு விளக்கம் பெறுதல், பிற மொழிச் செய்திகளை மொழிபெயர்த்துப் படித்தல் ஆகியவற்றை மக்கள் குறிப்பிடுகின்றனர். அதே நேரத்தில் அதன் செய்திப் பதில்களை நம்புவோர் 20 விழுக்காடு மட்டுமே. செயற்கை நுண்ணறிவின் மூலம் செய்தி பெறுவோரில் 42 விழுக்காட்டினர் அடிக்கடி அல்லது எப்போதும் மூலச் செய்தித் தளத்திற்குச் செல்வதாகக் கூறுகின்றனர்.
செயற்கை நுண்ணறிவு செய்தியாளரை உடனடியாக மாற்றிவிடாது. ஆனால் சுருக்கம், மொழிபெயர்ப்பு, தலைப்பு உருவாக்கம், தரவுப் பகுப்பாய்வு போன்ற பணிகளை மாற்றும். இந்த நிலையில் செய்தியாளரின் தனித்துவமான மதிப்பு, தகவலை விரைவாகக் கூறுவதில் அல்ல; களத்திற்குச் செல்வது, ஆதாரத்தைச் சரிபார்ப்பது, அதிகாரத்திடம் கேள்வி எழுப்புவது, மறைக்கப்பட்டதை வெளிக்கொணர்வது ஆகியவற்றில்தான் இருக்கும்.
இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சியை ஆங்கில உள்ளடக்கம் மட்டும் இயக்கவில்லை. 2024ஆம் ஆண்டில் 87 கோடி இணையப் பயனர்கள் இந்திய மொழிகளில் இணையத்தை அணுகியுள்ளனர். இது அப்போதைய இணையப் பயனர்களில் 98 விழுக்காடு. நகர்ப்புறப் பயனர்களில் 57 விழுக்காட்டினர் இந்திய மொழி உள்ளடக்கத்தை விரும்புவதாகக் கூறியுள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உள்ளடக்கத்தைப் பார்த்தவர்கள் அந்த மொழியையே முதன்மையாகப் பயன்படுத்தும் விகிதம் உயர்வாக இருப்பதாக ஆய்வு குறிப்பிடுகிறது.
இது தமிழ் ஊடகங்களுக்கு எண்ணிக்கையின் வாய்ப்பு மட்டுமல்ல; தரத்தின் பொறுப்பும் ஆகும். ஆங்கிலத்தில் வெளியான செய்தியை மொழிபெயர்த்து வழங்குவது மட்டும் தமிழ் ஊடகவியல் அல்ல. தமிழ்நாட்டின் ஊரகப் பிரச்சினைகள், மீனவர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள், பட்டியலின மக்கள், பழங்குடியினர், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் அனுபவங்களை அவர்களின் மொழியிலும் பார்வையிலும் பதிவு செய்வதே வலுவான மொழி ஊடகவியல்.
நம்பிக்கை சரிவடைந்தாலும், பக்கச்சார்பற்ற செய்திக்கான ஆதரவு மறைந்துவிடவில்லை. 2026 ஆய்வில் 45 விழுக்காட்டினர் எந்தத் தரப்பையும் சாராத செய்தியைத் தாங்கள் விரும்புவதாகவும், 46 விழுக்காட்டினர் அத்தகைய செய்தியே சமூகத்திற்குச் சிறந்தது என்றும் தெரிவித்துள்ளனர். ஒரு குறிப்பிட்ட கருத்தை ஆதரிக்கும் செய்தியை விரும்புவோரைவிட, சார்பற்ற செய்தியை விரும்புவோர் இரு மடங்குக்கும் அதிகமாக உள்ளனர்.
இதிலிருந்து மக்கள் எதிர்பார்ப்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளலாம். அவர்கள் மெதுவான ஊடகத்தை விரும்பவில்லை; ஆனால் வேகத்திற்காக உண்மையைப் பலியிடாத ஊடகத்தை விரும்புகிறார்கள். சலிப்பூட்டும் மொழியை விரும்பவில்லை; ஆனால் பரபரப்புக்காகத் தகவலைத் திரிக்காத ஊடகத்தை விரும்புகிறார்கள். கருத்துகள் இல்லாத ஊடகத்தை எதிர்பார்க்கவில்லை; ஆனால் செய்தி, கருத்து, விளம்பரம் ஆகியவற்றைத் தெளிவாகப் பிரித்துக் காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
தவறு நேர்ந்தால் அமைதியாகப் பதிவை நீக்கிவிடாமல், என்ன தவறு நடந்தது என்று விளக்கித் திருத்தம் வெளியிட வேண்டும். செய்தியாளர் எந்த ஆதாரத்தைப் பயன்படுத்தினார், எந்தத் தரப்பு பதில் அளிக்கவில்லை, எந்தத் தகவல் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை வெளிப்படையாகக் கூற வேண்டும். நம்பிக்கையை விளம்பரத்தின் மூலம் உருவாக்க முடியாது; தொடர்ச்சியான நேர்மை மூலமே உருவாக்க முடியும்.
டிஜிட்டல் யுகத்தில் ஊடகங்களின் அதிகாரம் குறையவில்லை; அது பலரிடமும் பரவியுள்ளது. முன்பு சில நிறுவனங்கள் மட்டுமே தகவலை வெளியிட்டன. இன்று ஒவ்வொருவரும் தகவலைப் பதிவு செய்து, தொகுத்து, பகிர்ந்து, கருத்துரைக்க முடிகிறது. இது கருத்துச் சுதந்திரத்தையும் குடிமக்கள் பங்கேற்பையும் விரிவுபடுத்தியுள்ளது. அதே நேரத்தில் உண்மை, கருத்து, பிரசாரம், வதந்தி, விளம்பரம் ஆகியவற்றுக்கிடையேயான எல்லைகளையும் மங்கச் செய்துள்ளது.
இந்தச் சூழலில் ஊடகவியலின் தேவை குறையவில்லை; மாறாக அதிகரித்துள்ளது.
எது நடந்தது என்று கூறுவது தகவல்.
அது உண்மையா என்று கண்டறிவது ஊடகவியல்.
அது மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்று விளக்குவது பொறுப்புள்ள ஊடகவியல்.
மக்கள் ஊடகங்களை முற்றிலும் நிராகரிக்கவில்லை. அவர்கள் ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள், பகிர்கிறார்கள், விமர்சிக்கிறார்கள்; அதே நேரத்தில் அவற்றைச் சந்தேகிக்கவும் செய்கிறார்கள். இந்தச் சந்தேகம் ஊடகங்களுக்கு எதிரானதல்ல. சிறந்த ஊடகவியலுக்கான மக்களின் மறைமுகக் கோரிக்கை அது.