இந்தியாவின் தேசிய மலர் தாமரை அல்ல என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. மாணவி ஒருவர் (ஆர்.டி.ஐ) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு இந்தியாவின் தேசிய மலர் தாமரை அல்ல என்பதோடு இந்தியாவுக்கென்று தேசிய மலரே இல்லை
இன்னும் எத்தனை காலத்துக்கு இதை நம்பிக்கொண்டிருப்போம் என்று தெரியவில்லை. இந்தியாவின் தேசியமலர் தாமரை இல்லை என்று தெரியவந்து ஆதாரங்களும் வெளியாகி ஏறக்குறைய 10 ஆண்டுகளாகிறது.
ஆனால், நெடுங்காலமாக நாம் உண்மை என்று நம்பியதும் ஏராளமான ஆசிரியர்கள் இன்னும் நம்புவதாலும் இந்தப் ‘பொய்’ பாடம் வடிவில் இன்னும் கடத்தப்படுகிறது.
ஆனால், உண்மையில் இந்தியாவின் தேசிய மலர் தாமரை அல்ல என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது. மாணவி ஒருவர் (ஆர்.டி.ஐ) தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பினார். அதற்கு, இந்தியாவின் தேசியமலர் தாமரை அல்ல என்று பதிலளித்துள்ளது. மேலும், இந்தியாவுக்கென்று தேசிய மலரே இல்லை என்றும் ( ஆதாரம் ) பதிலளித்து தெளிவுபடுத்தியுள்ளது.
இதனை, மாநிலங்களவை உறுப்பினர் பிரசன்ன ஆச்சார்யா, கடந்த ஜூலை 10 ஆம் தேதியன்று இந்திய உள்துறை இணை அமைச்சர் நித்யாந்த் ராய் அவர்களிடம் நாடாளுமன்ற மாநிலங்களைவியில் கேள்வியாக எழுப்பினார்.
அதற்கு “ஆம். இந்தியாவின் தேசியமலர் தாமரை அல்ல. அதுமட்டுமன்றி இந்தியாவுக்கு தேசிய மலரே கிடையாது” என்றும் இந்திய நாடாளுமன்ற உள்துறை சார்பில் பதிலளித்தார்.
“அப்படியானால் பாடங்களில் நாங்கள் படித்தோமே. அது பொய்யா?” என்று கேள்வி எழுவது நியாயம் தான். ஆம், நீண்டகாலமாக எந்தக் கேள்வியும் கேட்கப்படாததால் தொடர்ந்த பொய் அது. அந்தப் பொய்யைத்தான் படித்து வந்தோம்.
தமிழ்நாடு அரசின் பாடப்புத்தகத்தில் தாமரை தேசிய சின்னங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிட்டது. இயற்கை சின்னங்கள் என்று மாற்றப்பட்டுவிட்டது என்பதும் நாம் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்.
சில வெளிநாட்டு தூதரகங்களின் இணையதளங்களில் இன்னும் இந்தத் தகவல் மாற்றப்படாமல் இருப்பதால் இணையத்திலும் பதில்கள் “தாமரை இந்தியாவின் தேசிய மலர்” என்று வருகிறது. எனவே, இணையத்தில் கிடைக்கும் பதில்களை சோதித்தறியாமல் நம்ப வேண்டாம்.
ஏனெனில், இந்தியாவின் தேசியச் சின்னங்கள் குறித்த இந்திய அரசின் அதிகாரப்பூர்வப் பக்கம் இதுதான். இதில் தாமரை, ஹாக்கி, காந்தி உள்ளிட்டவை சின்னங்களாக இடம்பெறவில்லை. (INDIA.GOV.IN – இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பக்கம்)
’தேசிய விளையாட்டு ஹாக்கி’ என்பதும் தாமரை விவகாரம் போலத்தான். ஒருவேளை தேசியச் சின்னமாக தாமரை இருந்தால் அதனை, அரசியல் கட்சிகளின் சின்னமாக வழங்கமாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், மீண்டும் மீண்டும் இவை சமூக வலைதளங்களில் உலவி வருகின்றன. குழந்தைகள் தொடர்ந்து பள்ளிகளில் இதனைப் பாடமாகப் படித்து வந்தால், பொய்யை நம்பும் தலைமுறையை எளிமையாக உருவாக்கி வருகிறோம் என்றுதான் பொருள்.