மதுரையில் அரசு உதவிப்பெறும் பள்ளியொன்றில் மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை அளித்த வகுப்பாசிரியர் மீது புகார் அளித்தும், கண்டுக்கொள்ளாத தலைமை ஆசிரியர்.
காவல்துறையாவது நடவடிக்கை எடுக்கும் என போலீஸ் ஸ்டேசன் சென்ற பள்ளி மாணவிகள், வகுப்பாசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் மீது உரிய புகார் அளித்தும், இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்க அரசு அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில், மாணவிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்த SFI நிர்வாகிகளும் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி மாணவிகள் கொடுத்த பாலியல் புகாரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காப்பது எதனால்? பின்னணியில் யார் இருக்கிறார்கள்? என்பதை தான் இந்த இக்காணொளியில் பார்க்க உள்ளோம்.
மதுரையில் இயங்கிவரும் பள்ளியொன்றில், படிக்கும் மாணவிகளிடத்தில் வகுப்பாசிரியர் ஒருவர் தொடர்ச்சியாக தவறாக நடந்து வந்துள்ள தாகவும் இவர் குறித்து, பள்ளி மாணவிகள் தலைமை ஆசிரியர் மற்றும் துறை தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்காமல், வகுப்பறையிலுள்ள கேமராக்களை காரணமேயில்லாமல் வெளிய மாட்டி ஆதாரம் எதுவும் இனி சிக்காமல் இருக்க முயன்றுள்ளது பள்ளிக்குழு. மேற்கொண்டு, புகார் அளித்த மாணவிகளிடம், “உங்களுக்கு விருப்பம் இருந்தால் இங்கே படியுங்கள்” என எகத்தாளமாக பேசியுள்ளார் தலைமை ஆசிரியர்.
குற்றம் சாட்டப்பட்ட வகுப்பாசிரியர், வகுப்பறையில் எந்நேரமும் ஆபாச வார்த்தைகள் பேசுவது, மாணவிகளின் அனுமதியின்றி அவர்களை தொட்டு பேசுவது, ஆபாச படங்களை மாணவிகளிடம் காட்டுவது என தொடர்ச்சியாக குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.
தலைமை ஆசிரியரின் கணவர் பாஜகவில் முக்கிய பதவி வகிக்கிறார். புகார் தெரிவிக்கும் பெற்றோர்களையும், தனது கணவர் பெயரை சொல்லி மிரட்டி வந்துள்ளார் தலைமை ஆசிரியர். மாணவிகளுக்கு தொடர்ந்து மன உளைச்சல் தரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் துணை தலைமை ஆசிரியர்.
தங்களுக்கு நியாயம் வேண்டி, காவல்துறையினரை கடந்த 2025ம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தேதி அணுகியுள்ளனர் 7 பள்ளி மாணவிகள். தங்களது புகார் மனுவில், பாலியல் தொல்லை அளித்த வகுப்பாசிரியர், அவரின் குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த தலைமையாசிரியர் மற்றும் துணை தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.
மாணவிகளின் புகாரினை பெற்றுக்கொண்ட மதுரை மாநகர் திலகர்திடல் அனைத்து மகளிர் காவல்நிலைய சார்பு ஆய்வாளர், குற்றம்சாட்டப்பட்ட 3 பேர் மீதும் போக்சோ சட்டப் பிரிவில் வழக்கு பதிவு செய்தார்.
நீதிமன்றத்தில் வழக்கு நடைப்பெற்றுக் கொண்டிருக்கும் போது, புகாரளித்த மாணவிகளின் வீடுகளுக்கு சென்று காவல்துறை மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, வழக்கு விசாரணையின் போது 6 மாணவிகள் பிறழ்சாட்சி சொல்ல, வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
புகார் அளித்த மாணவிக்கு, டிசி தராமல் பள்ளி நிர்வாகம் தொடர்ச்சியாக அலைக்கழித்துள்ளது. இதுகுறித்து மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளித்த நிலையில், ஒரு குழு உருவாக்கப்பட்டு விசாரிக்கப்பட்டது. பள்ளி மாணவி, 8 ஆம் வகுப்பு வரை மலேசியாவில் பயின்றவர் என்பதால், டிசியானது மலாய் மொழியில் இருந்தது. இதன் உறுதித்தன்மையினை கண்டறிய உத்தரவிடப்பட்டது. பின்னர், தமிழ்மொழியில் மாற்றப்பட்ட மாற்றுச் சான்றிதழையும் சமர்ப்பித்துள்ளார் மாணவியின் அம்மா.
தற்போது, வேறு பள்ளிக்கு சென்று தனது கல்வியை தொடர மாணவி விரும்பும் நிலையில், தற்போது டிசி வழங்கப்படாமல் உள்ளது. அல்லது பள்ளியிலாவது தொடர விடுங்கள் என்பது பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு ஆதரவாக கடந்த 18 ஆம் தேதி மதுரை மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் SFI மற்றும் DYFI சேர்ந்த உறுப்பினர்கள்.
மாலை 3 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்களை, இரவு 9;40 மணியளவில் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளது காவல்துறை.
இதுகுறித்து, பள்ளி நிர்வாகத்திடம் பேசும்போது, மாற்றுச் சான்றிதழ் ஏற்கனவே வழங்கப்பட்டு விட்டது என்று தெரிவித்தனர். ஆனால், தரவில்லை என்று deo தெரிவித்ததாக SFI தரப்பு கூறுகிறது.
பள்ளி மாணவியின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு முறையாக விசாரித்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.