இன்றைய தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் என பட்டியலிடப்படும் பாலா, வெற்றி மாறன், ராம் போன்றோர் எல்லாம் பாலு மகேந்திராவின் பட்டறையில் தீட்டப்பட்ட வைரங்கள் தான். புகழையும், விமர்சனத்தையும் பாலுமகேந்திரா அளவிற்கு தன் வாழ்நாளில் சந்தித்த தமிழ் இயக்குநர்கள் எவருமில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
”Emotional Hitchcock” என வர்ணிக்கப்படும் பாலுமகேந்திராவின் பிறந்த தினம் இன்று (மே-20). அவர் மறைந்து ஏறத்தாழ 12 ஆண்டுகள் ஆகிவிட்டாலும், அவரைப் பற்றியும், அவரது படைப்புகளை பற்றி பேசுவதற்கும், சிலாகித்து எழுதுவதற்கும் ஆயிரம் ஆயிரம் கதைகள் இன்னும் மிச்சமிருக்கத் தான் செய்கிறது.
இலங்கையைச் சேர்ந்த தமிழ் குடும்பத்தில் பிறந்த பாலு மகேந்திரா, தனது 42 ஆண்டுக்கால சினிமா வாழ்வில் மொத்தமே 23 படங்கள் தான் இயக்கியுள்ளார். இதை விட வியப்பு என்னவென்றால், தனது மனதுக்கு திருப்தி தரும் வகையில் எடுத்த படங்கள் மொத்தமே 3 தான் ( வீடு, சந்தியாராகம், தலைமுறைகள்) என கூறி ஆச்சரியப்பட வைத்துள்ளார் பாலு மகேந்திரா.
திரையுலகிற்குள் வந்தது எப்படி?
சினிமாவின் மீது காதல் கொண்ட பாலுமகேந்திரா, புனேவிலுள்ள புகழ்பெற்ற திரைப்படக் கல்லூரியில் (FTII-Film and Television Institute of India) டைரக்ஷன் பிரிவில் பயில விண்ணப்பித்து இருந்தார். ஆனால், கல்லூரி நிர்வாகம் அவரே வலுக்கட்டாயமாக ஒளிப்பதிவு பிரிவில் பயிலுமாறு அறிவுறுத்தியது. உண்மையே சொல்லப் போனால், அதில் துளியும் விருப்பமில்லை பாலு மகேந்திராவுக்கு.
இதுக்குறித்து ஒரு நேர்க்காணலில் அவர் பேசுகையில், “நான் தெரிந்தோ, தெரியாமலோ செய்த ஒரு விஷயம், விண்ணப்பத்துடன் நான் ஏற்கெனவே எடுத்திருந்த 3 புகைப்படங்களை இணைத்து இருந்தேன். அந்த புகைப்படங்கள் முன்னணி ஊடகம் ஒன்றின் புகைப்படப் பிரிவிற்கான போட்டியில் வென்றவை. அதனால் தான் ஆசிரியர்கள் என்னை ஒளிப்பதிவு பிரிவில் பயிலுமாறு கூறினார்கள். எனக்கு சினிமா கற்றுக்கொள்ள வேண்டும். வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்டு பயிலத் தொடங்கினேன். முதல் 3 மாதங்கள் வெறுப்பாக இருந்தது, ஆனால் காலப்போக்கில் டைரக்ஷன், எடிட்டிங் போன்றவற்றையும் நண்பர்களின் உதவியோடு கற்கத் தொடங்கினேன்” என குறிப்பிட்டுள்ளார்.
திரைப்படக் கல்லூரியில், இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் குழுவாக இணைந்து டிப்ளமோ பிலிம் எடுப்பது வழக்கம். அந்த வகையில், கேரளாவினை சேர்ந்த கௌதமன் இயக்கிய குறும்படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றினார் பாலு மகேந்திரா. இவரின் சிறப்பான பங்களிப்பினை பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது. படிப்பினை முடித்த கையோடு சொந்த ஊருக்கு திரும்பிவிட்டார் பாலுமகேந்திரா. ஆனால், அவரை தேடி வந்தது வாய்ப்பு.
”செம்மீன்” படப்புகழ் இயக்குநர் ராமு காரியத், பாலுமகேந்திரா பணியாற்றிய குறும்படத்தினை பார்த்து வியந்து போனார். அன்றைய காலத்தில், சினிமா உலகில் புகழின் உச்சியில் இருந்த இயக்குநர்களுள் ஒருவராக திகழ்ந்த ராமு காரியத் பாலுமகேந்திராவினை நேரில் அழைத்து பேசினார்.
அந்த சமயம் தான் அடுத்து இயக்க இருந்த ‘நெல்லு’ படத்திற்கான முன்னோட பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார், ராமு காரியத். பாலுமகேந்திராவிடம், ”நான் அடுத்து இயக்கப் போகும் படத்திற்கு நீ தான் ஒளிப்பதிவாளர்” என, ராமு காரியத் தெரிவிக்கையில் அதிர்ச்சியுற்றார் பாலுமகேந்திரா. அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
முதல் முறை கலர் பிலிம்:
பாலுமகேந்திரா அதுவரை “White and Black” பிலிம் ரோலினை பயன்படுத்தி மட்டும் தான் ஒளிப்பதிவு செய்துள்ளார். அதனால், தயக்கமடைந்த பாலுமகேந்திரா வந்த வாய்ப்பினை நிராகரித்தார். திறமையினை கண்ணெதிரே கண்ட பிறகு, அப்படியே விடவா முடியும்? என பாலுமகேந்திராவினை காரில் ஏற்றுக்கொண்டு பிரசாத் கலர் பிலிம் லேப்பிற்குள் நுழைந்தார் காரியத். கலர் பிலிம் மற்றும் கேமராவினை பாலுமகேந்திராவிடம் கொடுத்து விட்டு, பிலிம் தீரும் வரை படம் பிடித்து விட்டு வா என கிளம்பி விட்டார் காரியத்.
சென்னைக்கு அப்போது தான் முதல் முறையாக வந்துள்ளார் பாலுமகேந்திரா. மழை வேறு. மனதுக்குள் எழுந்திருந்த பயத்தையும், தயக்கத்தையும் ஓரம் தள்ளிவிட்டு தனது பாணியில் மழையின் பிடியில் சென்னையினை கலர் பிலிம் பயன்படுத்தி காட்சிப்படுத்தினார் பாலுமகேந்திரா. பிறகு என்ன? வரலாறு தனது பிரத்யேக பக்கத்தில் பாலுமகேந்திராவின் பெயரை எழுதத் தொடங்கியது. இன்று காலத்தாலும் அழிக்க முடியாத வகையில் நிலைத்திருக்கச் செய்துவிட்டது.
ஒளிப்பதிவாளராக தனது திரை வாழ்வினை தொடங்கினாலும், தனது கனவினை நிறைவேற்றும் வகையில் கன்னட மொழியில் ‘கோகிலா’ என்கிற திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். மூன்றாம் பிறை, அழியாத கோலங்கள், வீடு, என 5 மொழிகளில் 23 படங்களை இயக்கியுள்ள பாலுமகேந்திரா ஒளிப்பதிவு, இயக்கம் போன்றவற்றிற்காக மொத்தம் 6 தேசிய விருதுகளை வென்றுள்ளார்.
திராவிட நிறமும்.. எண்ணெய் படிந்த முகமும்:
பாலுமகேந்திராவின் படைப்புகளும், ஒளிப்பதிவுகளும் மட்டும் தனித்து தெரியவில்லை. அவரது செயல்களும், பேச்சுகளுமே திரையுலகில் கூர்ந்து கவனிக்கப்பட்டது.
பாரதிராஜா, கமல் போன்றவர்களும் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக மற்றும் இயக்குநராக செயல்படும் தன்மையினை கண்டு வியந்து பலமுறை வெளிப்படையாக பேசியுள்ளனர். பாலுமகேந்திராவின் திரைப்படங்களில், இடம்பெறும் கதாப்பாத்திரங்களுக்கு பெரும்பாலும் ‘மேக்கப்’ என்பதை கிடையாது.
”திராவிட நிறமும், எண்ணெய் படிந்த முகமும், இயற்கையான வெளிச்சத்துடன் சேர்ந்து காட்சிப்படுத்துகையில் அது இயல்பாகவே அழகாகத் தெரியும்” என ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பாடமெடுத்தார் பாலு மகேந்திரா.
நூற்றுக்கணக்கான பணியாளர்களே கொண்டு தமிழ் திரையுலகம், திரைப்படங்களை உருவாக்கிக் கொண்டிருந்த போது, சொற்ப அளவில் நபர்களே கொண்டு காவியங்களை படைத்துக் கொண்டிருந்தார் பாலுமகேந்திரா. இதனால் அவர் எதிர்க்கொண்ட பிரச்னைகள் ஏராளம்.
Read more: AK ஆரம்பித்த YOUTUBE சேனல்… என்ன காரணம்..?
அவருடைய ஒளிப்பதிவு யாருக்கும் கட்டுப்பட்டதில்லை. அவரைப் பொறுத்த வரை, ஒரு காட்சியில் கேமரா நகர வேண்டுமெனில், அதற்கு ஒரு நோக்கம் இருக்க வேண்டும். படைப்பாளர் நிச்சயம் வாசிப்பு பழக்கத்தினை கொண்டவனாக இருத்தல் வேண்டும். புத்தக வாசிப்புத் தான் படைப்பாளனுக்குள் புதைந்திருக்கும் நுண்ணுணர்வுகளை காட்சிப்படுத்த உந்துக்கோலாக இருக்கும் என்பதில் உறுதியாக இருந்தவர். தினமும், குறைந்தது 100 பக்கங்களையாவது படிக்கவில்லை என்றால் எனக்கு தூக்கம் வராது என பேசியுள்ளார் பாலுமகேந்திரா.
கமர்ஷியல் சினிமாவில் கூட, பாட்டு, டூயட் டான்ஸ் தேவை தான? என கேள்வி எழுப்பி திரையுலகினரை திக்குமுக்காடச் செய்தார் பாலுமகேந்திரா. கோபிச் செட்டிப்பாளையத்தில் காதலிப்பவர்கள், சுவிட்சர்லாந்தில் ஏன் டான்ஸ் ஆட வேண்டும்? ஈரான், ஜப்பான் மொழி படங்களை இன்னும் எத்தனை நாள் பார்த்து வியக்கப் போகிறோம்? அவன் சொல்றது பெரிய சமாச்சாரம் இல்ல. அவனோட வாழ்வினை அப்படியே காட்சியமைக்கிறான். அதை நம்மால் செய்ய முடியாதா? என தமிழ் திரையுலகின் போக்கினை தொடர்ந்து கேள்விகளால் சீரமைத்துக் கொண்டிருந்தார், பாலுமகேந்திரா.
அவரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய வெற்றிமாறன், அமீர், ராம், பாலா, சீனு ராமசாமி போன்றவர்களின் படைப்புகள் காலம் கடந்தும் பேசப்படுவதற்கு காரணம், பாலுமகேந்திரா விதைத்த விதை தான் என்றால் மிகையல்ல.
பாலுமகேந்திராவின் தனிப்பட்ட வாழ்க்கை அவருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் சில இருண்ட பக்கங்களையும் கொண்டவை. அவற்றினை பாலுமகேந்திராவும் வெளிப்படையாக பல இடங்களில் ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆரம்பக்காலக்கட்டத்தில் தன் திரைப்படங்கள் குறித்த ஊடகத்தின் விமர்சனத்தை கண்டு கோபம் கொண்டார், பாலுமகேந்திரா. “The forest will become silent if only cuckoos and parrots sang” என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு பேசிய பாலுமகேந்திரா, ”கிளிகளும், குயிலும் தான் பாட வேண்டுமென்றால் காடு நிசப்தம் ஆகிவிடும், அதுப்போல அவனுக்கு தெரிஞ்சத அவன் செய்யுறான். எனக்கு தெரிஞ்சதை நான் பண்ணிட்டு போறேன்” என தன் போக்கினை பின்னாட்களில் மாற்றிக் கொண்டார்.
ஒன்று மட்டும் நிச்சயம். இந்திய திரையுலகில், பாலுமகேந்திராவின் பெயரினை புறந்தள்ளிவிட்டு யாரும், எங்கும் ஒளிப்பதிவினை பற்றி பேசிட முடியாது. அவரது வெற்றிடத்தினை அவருடைய படைப்புகள் மட்டுமே நிரப்பும்.