தென்காசி காசி விசுவநாதர் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பான வழக்கில் நீதிபதி நிஷா பானு , ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த இறுதி உத்தரவு.
தமிழகத்தில் பல கோவில்களில் புனரமைப்பு பணிகள் முழுமை பெறாமலேயே கும்பாபிஷேகம் நடத்தப்படுகிறது . ஆண்டுக்கு இவ்வளவு எண்ணிக்கையில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்து கார்ப்பரேட் கம்பெனி போல் அறநிலையத்துறை செயல்படுகிறது .
இதனால் கோவில் நிர்வாகமும் கும்பாபிஷேக தேதியை முன் கூட்டியே முடிவு செய்து புனரமைப்பு பணிகளை அவசரகதியில் செய்கின்றன. இது போன்ற இலக்குகளால் கும்பாபிஷேகத்தின் உண்மையான நோக்கம் சிதைகிறது கோவில்கள் வெறும் கட்டடங்கள் அல்ல , குடியிருக்கும் தெய்வங்களின் அங்கம்.
அதை உணர்ந்து இந்து அறநிலையத்துறை செயல்பட வேண்டும் புனரமைப்பு பணிகள் துவங்கும் முன் சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையிடம் கோவிலில் உள்ள பாதிப்புகள் சேதங்கள் குறித்து விரிவான திட்ட அறிக்கை பெற வேண்டும் .
புனரமைப்பு பணிகளின் போது கனரக இயந்திரங்களை தவிர்த்து அத்துறையால் அனுமதிக்கப்பட்ட பொருட்கள் ரசாயனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .
பணிகள் முடிந்த பின் அத்துறையிடம் தகுதிச் சான்று பெற வேண்டும் , பின் கட்டமைப்பு பொறியியல் நிபுணர் , தொல்பொருள் நிபுணர் , பாதுகாப்பு நிபுணர் , பாரம்பரிய ஸ்தபதி , இரு ஆகம நிபுணர்கள் அடங்கிய மாநில நிபுணர் குழுவிடம் பணி முடிந்ததற்கான சான்று பெற வேண்டும் .
கோவிலில் அவற்றை பக்தர்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் அதன் பின்னரே கும்பாபிஷேகத்திற்கு நாள் குறித்து , கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். நன்கொடையாளர் சார்பில் நடத்தும் புனரமைப்பு பணிகளை மாநில நிபுணர் குழு கண்காணிக்க வேண்டும் என வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.