பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் முழு மானியத்தில் வீடு கட்டி கொடுக்கப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு ரூ.50 ஆயிரம் என மூன்று கட்டங்களாகவும் நான்காவது கட்டமாக ரூ.60 ஆயிரம் என ரூ.2.10 லட்சம் வழங்கப்படுகிறது.
இதே போன்று தென்காசி மாவட்டம் மேலகரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 42 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வீடுகள் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் மீதமுள்ள 2 தவணைத் தொகையினை தமிழக அரசு பயனாளிகளுக்கு வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து பேரூராட்சி அதிகாரிகளிடம் பயனாளிகள் பலமுறை கேட்டும் தவனைத் தொகை வழங்கப்படாததால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் பா.ஜ.கவை சேர்ந்த மேலகரம் பேரூராட்சி மன்ற உறுப்பினர் மகேஷ்வரன் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோரிடம் மனு கொடுத்ததுடன் தங்களுக்கான தவணைத் தொகை உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.