அதிமுக கூட்டணி தொடர்பாகவும், கூட்டணி ஆட்சி தொடர்பாகவும் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி தெளிவுபடுத்த வேண்டுமென விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பெரம்பலூரில் தெரிவித்துள்ளார்.
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தொகுதிக்குட்பட்ட மேலமாத்தூர் கிராமத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் அரியலூர் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்ற தனியார் வேலை வாய்ப்பு முகாமில் பங்கேற்று இதில் தேர்வு பெற்றவர்களுக்கான பணி நியமன ஆணைகளை வழங்கிய பின்பு செய்தியாளர்களிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் சிதம்பரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும் தொல். திருமாவளவன் அதிமுக பா.ஜக கூட்டணி வெற்றி பெற்றால் தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் என்று பா.ஜ.க தான் தொடர்ந்து பேசி வருகிறது.
ஆனால் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதுவரை இது குறித்து பேசவில்லை என்றார். மேலும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக உள்ளதா அல்லது அதிமுக தலைமையில் தான் கூட்டணியா என்பதை எடப்பாடி பழனிச்சாமி தான் விளக்க வேண்டும் என்றார்.
திமுக கூட்டணியில் பா.ம.க இணையலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில்
பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசை காங்கிரஸ் கட்சி மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை நேரில் சந்தித்து பேசியுள்ளது கூட்டணிக்காகவா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாசை காங்கரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் செல்வ பெருந்தகை நேரில் சந்தித்தது கூட்டணி குறித்து பேசுவதற்காகவா என்பது தனக்கு தெரியாது என்றும், மேலும் மரியாதை நிமிர்த்தமாக தனிப்பட்ட முறையில் மருத்துவர் ராமதாசை தான் சந்தித்ததாக அவரே தெரிவித்துள்ளாரே என்றும் தொல் திருமாவளவன் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் பா.ம.க – வில் தற்போது நிலவும் குழப்பம் தந்தை மகனுக்கிடையிலான ஒன்று அதை அவர்களே தீர்த்து கொள்வார்கள் அது குறித்து பேசுவது சரியல்ல என்றார்.