பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னாரா? உண்மை என்ன?
பிரதமர் நரேந்திர மோதி, ஒடிசா மாநிலம் பூரி ஜெகந்நாதர் கோயில் சாவியை கண்டுபிடிக்கவே தமிழ்நாட்டில் தியானம் செய்ய உள்ளதாக, பாஜக தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை சொன்னதாக சமூக வலைதளங்களில் ஒரு பதிவைப் பார்க்க நேர்ந்தது.
ஏராளமான சமூக வலைதளக் கணக்குகள் இந்த பதிவை பரப்பியிருக்கும் நிலையில், ஒரு உதாரணமாகவே கீழுள்ள பதிவை இணைக்கிறோம்.
பின்னணி என்ன?
இந்தியாவில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுடன் ஒடிசா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற்று வருகிறது. எனவே மாநில விவகாரங்களுக்கு அதிக முக்கியத்துவத்துடன் கட்சிகள் பிரசாரம் செய்து வருகின்றன. இங்கு பிரசாரம் செய்த பிரதமர் நரேந்திர மோதி, “ பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூலத்தின் சாவி எங்கே என்பதில் ஒடிஷா மக்கள் ஆளும் அரசு மீது கோபமாக உள்ளனர். அந்தக் கருவூல அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டதா?தமிழ்நாட்டுக்கு அனுப்பியவர்கள் யார்? தமிழ்நாட்டுக்கு பூரி ஜெகந்நாதர் கோவில் கருவூல சாவியை அனுப்பியவர்களை மன்னிப்பார்களா மக்கள்?” என பேசியிருந்தார்.
இதற்கு, “பொறுப்பான இடத்திலிருக்கும் பிரதமர் இப்படி பொத்தாம்பொதுவாக ஒரு மாநிலத்தின் மீதே குற்றம் சாட்டுவதா?” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
ஒடிசாவில் கடந்த 5 முறையாக வென்று ஆட்சி செய்து வருகிறது நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் கட்சி. ஆனால், இந்த முறை, முதலவர் நவீன் பட்நாயக்கைவிட அதிகம் கவனிக்கப்படும் நபராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒடிசா கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கார்த்திகேய பாண்டியன் இருக்கிறார். ஐ.ஏ.எஸ். பொறுப்பை ராஜினாமா செய்து விட்டு பிஜு ஜனதா தளம் கட்சியில் இணைந்த அவர், அக்கட்சியின் மூத்த தலைவர்களுக்கும் மேலாக மதிக்கப்படுவதாகவும் அவர்தான் முதலமைச்சரை இயக்குவதாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த பின்னணியில் தான் இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா “ஒடிஷாவை தமிழர் ஒருவர் ஆளுவதா” என்று பேசினார்.
இதே தொனியில்தான் பூரி ஜெகந்நாதர் ஆலய பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டதா என்றும் ஆதாரமற்ற அவதூறு பேசினார் பிரதமர். இதற்கும் கண்டனங்கள் எழுந்தன. ஆனால், அவரோ எதையும் பொருட்படுத்தவில்லை.
இந்த நிலையில், “நான் ஒரு மனிதப்பிறவியே அல்ல என்றும் பரம்பொருள் அனுப்பி வைத்தவன் நான்” என்று அவ்வப்போது காரணமற்று பேசி வந்தார். அதன் தொடர்ச்சியாக, கன்னியாகுமரி கடல் நடுவே நான் தியானம் செய்யப்போகிறேன் என்று அறிவித்தார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்துதான், பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறை சாவியை தொடர்பு படுத்தி தமிழ்நாடு பாஜக தலைவரை இணைத்து செய்திகள் பரவி வருகின்றன.
உண்மை என்ன?
“ஜெகந்நாதர் ஆலய கருவூல சாவியைக் கண்டுபிடிக்கவே தியானம். மூன்று நாட்கள் தியானம் முடிந்து வரும்போது கருவூல சாவியோடுதான் பிரதமர் மோதி வருவார்” என்று அண்ணாமலை பேசியதாக பரவும் தகவல் குறித்து ஆய்வு செய்ய, குறிப்பிட்ட தேதியில் தினமலர் அப்படி ஏதும் செய்தி வெளியிட்டதா என்பதை தேடிப்பார்த்தோம். அப்படி ஏதும் இல்லை.
ஆனால், அதே படத்துடன் வேறு ஒரு செய்தியை தினமலர் வெளியிட்டிருகிறது. அந்த படத்தைத்தான் மேற்கூறிய பொய்யான தகவலுடன் பரப்பியுள்ளனர். நாம் எடுத்துக்காட்டாக எடுத்துள்ள படத்திலிருந்து பார்க்கப்போனால், இதைப் பரப்பியவர் திமுக ஆதரவு பதிவராக இருப்பதை அறிய முடிகிறது.
அவர்தான் இதனை மாற்றிப் பதிவிட்டாரா என்பதை உறுதி செய்ய இயலவில்லை. எனினும், ஒன்றை எந்தவிதமான கருத்தும் இன்றி பகிர்வது என்பதும் அதை ஒப்புக்கொண்டதாகவே பொருள்படும். இந்த பதிவர், அப்பதிவை ஏற்றுக்கொண்டு அதுகுறித்து கருத்தும் இட்டு பரப்பியுள்ளார்.
எனவே, இந்த வார பொய் பொய்யப்பன் பட்டம் @Ashok_7007 என்ற எக்ஸ் கணக்குக்கு வழங்கப்படுகிறது. அத்துடன், இதே தகவலை பகிர்ந்த அனைத்து கணக்குகளும் பொய் பொய்யப்பன் பட்டத்துக்கு தகுதியானவர்களே!