கேரளா மாநிலத்தில் இன்று பரவலாக மழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 6 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கன மழை கொட்டி வருகிறது. கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிருடன் மண்ணில் புதைந்தனர். அவர்களில் இதுவரை 357 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேரை இதுவரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும் கனமழையின் போது நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் உள்ள மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேரள கடற்கரையோரம் உயரமான அலைகள் எழ வாய்ப்பு உள்ளது என கள்ளக்கடல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.