கட்டுரையாளர்: முத்துநாகு, எழுத்தாளர்
அடாங்கா பிடாரி …… கொண்டி (கொன்றி – செருக்கு) , மூழி அலங்காரி, அறுங்காட்டை உழுதவனும் அடங்கா பிடாரிய கட்டியவனும் அழிஞ்சான். (பாங்காடு : கருங்காடு : Core zone forest) ) ஆங்காளி, தலைய விரிச்சு தலைவிரி கோளமா திரியுறா கண்ணகி கணக்கா யார் கருவருக்கப்போராளோ ” இந்த பழமொழி கேட்டுக் கடந்திருப்போம்.
இவைகளுக்கான பின்புலம், தொன்மம், வரலாறு, வழக்காறு என்ன என்பதை ஆய்வு செய்துள்ள நூல். இதில் பறையர் குலத்தினர் பின்புலப்படுகிறார்கள். அதிலும் சிலப்பதிகாரம் முதல் சமணர் மரபுடன் கலந்தது என கட்டியம் கட்டியுள்ளது இந்நூல்.
மீனாட்சி திருக்கல்யாணத்தில் பார்ப்பன பூசகர்கள் மீனாட்சியம்மனுக்கு தாலி கட்டுவதைப்போல் பிடாரி தெய்வத்திற்கு பறையர் குலத்தினர் தாலி கட்டுகிறார்கள். இந்த பிடாரி -ன் தோற்றம் குறித்து கல்வெட்டு, தொன்மக் கதைகள், வழக்காறு, நடப்பு இவைகள் குறித்து முழு ஆய்வாக யாரும் தொடுத்திடவில்லை. இப்பணியை செய்துள்ளார் செல்வக்குமார்.
பிடாரி குறித்து 12 பழமொழிகளை சேகரித்துள்ளார் அதில் “அதிர அடித்தவனுக்கு ஐயனார் -ம் இல்லை, பிடாரியும் இல்லை” . “ஐயனார் கோயில் மண்ணை மித்தித்த அத்தனை பேரும் பத்திரகாளி ” என்ற பழமொழிகள் -யை தனி ஆய்வு செய்திட வேண்டியதாக உள்ளது.
தமிழ் சமூகத்தில் பட்டியல் குழுக்களாக பார்க்கப்படும் பறையர் குலத்தினர் மருளாடி (பூசகர்) (அ) சாமியாடி (அ) அருளாடியாக இருக்கும் கோயில்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் வழிபாடு நடத்துகிறார்கள்.
வட தமிழகத்தில் வன்னியர் = பறையர் குலத்தினை வைத்து வாக்கு வாங்கி அரசியல் போட்டி நடக்கிறது. ஆனால் பிடாரி அம்மனுக்கு பறையர் குலத்தினர் தாலி கட்டும் சடங்குடன் பூசாரியாக பறையர் குலத்தினர் இருக்க வழிபடுபவர்கள், வன்னியர் & படையாச்சி குலத்தினார். இவ்வளவு நெருக்கமான ஒற்றுமை இன்றும் உள்ளது.
பல கோயில்களில் இந்த தாலி கட்டும் மரபானது கங்கணம் கட்டுவதாக மாற்றப்பட்டும் சில பகுதிகளில் பார்ப்பன பூசாரிகளை நியமித்து தாலி கட்டும் மரபு அவர்கள் கைக்கு மாறிவிட்டதை கள ஆய்வு செய்து கொடுத்துள்ளார் நூலாசிரியர். (கூத்தாண்டவர் கோயில் உள்பட)
தாய் தெய்வ வழிபாடு பின்னுக்கு தள்ளப்பட்டது எப்படி, சைவக் கோயில்களில் பிடாரி துணை தெய்வமாக உள்ளதன் காரணம். சமணத்திற்கும் பிடாரிக்குமான தொடர்பு அதற்கான சான்றுகள், கன்னிமார்கள் சமண குறியீட்டில் எப்படி நேர்கோட்டில் வருகிறது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.
பிடாரி குறித்து துவக்க கால ஆய்வு செய்த அயோத்திதாசர் பெளத்தத்துடன் – மாரியம்மன் வழிபாட்டுடன் இணைத்து எழுதியதை சான்றுகளை மறுத்ததுடன் பறையர் குலத்தினர் பெளத்தத்துடன் தொடர்புபடுத்தி அயோத்திதாசர் முதல் நிகழ்காலம் வரை ஆய்வுகள் நிகழ்வதை நாகரீகமாக சான்றுகளுடன் மறுத்து பறையர் பூர்வ சமணர்களே என தொடர்பு கண்ணிகளை சான்றுடன் தொடுத்து அறுதியிட்டுள்ளது இந்நூல்.
நூலில் ஒளவை வழிபாடும் சமணத் தொடர்பும் குறித்த சேகரிப்பு வியக்க வைக்கிறது.
துறவு மறுத்து இல்லற (அ) ஆண் – பெண் பாலியல் உறவு குறித்து பிடாரியின் முகங்களை சுட்டி “தாலி கட்டும் கடவுளுடன் விளையாடுதல் என்ற சொல் கலவிக்கு ஒப்பானது ” என நகர்கிறது நூலில், பெருங்கோயில்களில் உள்ள ஆண் – பெண் கலவி சிற்பம் போல கிராம தெய்வங்கள் ஆண் – பெண் பாலியல் உறவு கொள்வது போல சிறு சிலைகள் செய்து புணர்வதையே விழாவாக நிகழ்வதை வளமை, செழுமை குறியீடாகவும், சமூக வேளாண், உற்பத்தியின் குறியீடாக கள ஆய்வில் மெய்பட வைத்துள்ளது நூல். இது குறித்து விரிவாக ஆய்விட்டால் புதிய ஆய்வுகள் வெளிச்சப்படலாம்.
பிடாரி தமிழகத்தில் எங்கெங்கு உள்ளது என கள ஆய்வு செய்த ஆய்வேடுகளை சேகரித்து அதன் வழி நடந்து களத்தில் சேகரித்த செய்திகளை ஒப்பிட்டு, பிடாரி குறித்த பல ஆய்வு கட்டுரைகளையும், சில நூல்களை பொய்யென சான்றுகளுடன் தள்ளுபடி செய்துள்ளது மெச்சும்படியாக உள்ளது.
மாரியம்மாளுக்கும் பிடாரிக்கும் தாலிகட்டுதல் பறையர் குலத்தினர். கன்னிமார் சாமி குறிப்பிடும் செய்தி என்ன.?
பிடாரி, காளி, மாரி, ஒளவை இவைகளின் ஒற்றுமை, வீரம், போர், இதில் தெய்வ பலம் என்ற மனபலத்தை எப்படி போர் வீரர்கள் போர்காலங்களில் பெற்றார்கள். பல்லவ அரசர்களுக்கு வள்ளுவர்களே குலக்குருவாக இருந்த சான்றுகளோடு, 12 -ம் நூற்றாண்டில் தஞ்சையில் கட்டப்பட்ட பிடாரி கோயிலுக்கு தூண் செய்த மன்னர் யார், தொழுத மன்னர்கள் யார், கோயில் மானுவ நிலங்கள் எவ்வளவு, பூசாரி இன்று வரை பறையர் குலமே என சான்று சொல்லும் நூல், எப்படி பறையர் குலம் கீழ்நிலை ஆக்கப்பட்டார்கள் என தொன்மத்திலிருந்து – நிகழ்காலம் வரை வரலாற்று சான்றுடன் பட்டியலிட்டுள்ளது இந்த நூல்.
நந்தனின் பிள்ளைகள் (Nandanar’s Children) என்ற நூல் மட்டுமல்ல பிற நூல்களும் பறையர் தொன்மம் குறித்து இறுதி முடிவை வழுவாகக் கொடுக்கவில்லை. அப்படியே எழுதியது அனைத்தும் திட்டமிடப்பட்டு (Assignment) எழுதியதாகவே எனது வாசிப்பில் உணர்கிறேன்.
தென் தமிழகத்தில் ஆட்டுதலைக்கு குசவன் பறந்தது போல என்பது போல, ஆட்டுதலைக்கு வண்ணான் பறந்த போல என்ற பழமொழி இன்றும் வழக்கில் உள்ளது. இப்பழமொழி பிடாரிக்கு பூசாரியாக உள்ள மற்றொரு குலமான உவச்சர் -க்கும் தஞ்சை பகுதியில் உள்ளது. ஆனால் வட தமிழகத்தில் சிற்சில இடங்களில் மட்டுமே வண்ணார் குலத்தினர் கெங்கம்மா போன்ற தெய்வங்களுப் பூசாரியாக உள்ளனர். இது குறித்தும் ஆய்வு செய்தால் சமூகங்களின் கீழ் நிலையாக்கம் எப்போது துவங்கியது என்ற செய்தியை சமூகத்தில் மீது வைப்பதன் மூலம் சமூக இழிவுகளை கழிவாக்கிட உதவும்.
குளத்து மீனும், கொம்பு புளியும் குடிபடைக்கு சொந்தம் என்பது தென்னக பாண்டியர் கால வழக்காறும், விஜய நகர செப்பேடும் உள்ளது. இதே பழமொழி தஞ்சை கடலூர் பகுதியில் குளத்து மீன் உச்சவனுக்கு சொந்தம் என்றும், அதற்கு வரிகட்டிய கல்வெட்டும் இக்குலத்தினர் மேலாதிக்கத்தை காட்டுவதை சுட்டுகிறது நூல்.
இசை கருவி :
மொடா மத்தளம், மட்டுகம், போன்ற இசைக்கருவிகள் சைவக் கோயில்களிலும், பிடாரிக்கும் வாசிக்கப்படுகிறது. இதை வாசிப்பவர்கள் பறையர் குல பூசாரிகளே.
மட்டுகம் இசை கருவி கோயில் கொடியேற்ற திருநாளில் இக்கருவிக்கு முதலில் பூசை செய்த பின்னரே இதர வழிபாடு துவங்குவது கவனிக்கத் தக்கது. (இது குறித்து பேரா. ஞான குலாம்பிகையின் *தமிழர் * நடன மரபு” என்ற நூல் நல்விளக்கம் தந்துள்ளது.
பறையர் – பார்ப்பனர் பகையை பறையர் வழக்காறுகள், எழுத்துகளில் தொன்மச் சான்று உள்ளன. ஆனால் பார்ப்பனர் நூல்கள் (அ) வேறு நூல்களில் இல்லை. ஆனால் சமணர் – பார்ப்பனர் மோதல் குறித்த தரவுகள் உள்ளதற்கான சான்றுகளை கவனிக்க சொல்கிறது இந் நூல்.
வேதாந்திகள் பார்ப்பன ஆகம விதிகளை உடைத்திட முயற்ச்சித்தனர். இதில் பறையர் குலத்தில் உள்ள வள்ளுவ குழுக்களும் பங்கெடுத்துள்ளது. வேதாந்த மடத்தின் சீடராக சகஜனாந்த போன்றோர் உருவானது போல் பலரும் வரலாற்றில் இருந்ததை பதிவு செய்திட நூல் அடிகோடிட்டுள்ளது.
கம்பன், வள்ளுவன் பெயர்களில் பறையர் குலப் பிரிவுகள் உள்ளதையும் நூல் கவனப்படுத்துடன் அதன் தொன்மம் வரலாறு, வழக்காறுகளை சான்று வழங்கியுள்ளது இந்த நூல்.
மொத்தத்தில் எவரும் ஆய்விடாத களத்தில் நூலாசிரியர் களம் புகுந்து #களவெற்றி சூடிவிட்டார் என்பதை துணிவுடன் நான் பறைசாட்டுகிறேன்.
28.01.2026
நூல் விவரங்கள்:
ஆசிரியர் : முனைவர் செல்வக்குமார்.
வெளியீடு பாரதி புத்தகாலயம்