News அரசியல் ஆசிரியர் தேர்வுகள் உலகம் சிறப்பு கட்டுரைகள்

என் சாவு மௌனமாக இருக்கக்கூடாது: யார் இந்த ஃபாத்திமா? 

  • April 19, 2025
  • 0

பத்தோடு பதினொன்றாக என் மரணம் இருக்கக்கூடாது. வெறும் பிரேக்கிங் நியூசாகவோ, கூட்டத்தில் ஒன்றாகவோ அல்ல. என் காலமும் களமும் கூட மறைத்துவிட முடியாதபடிக்கு தாக்கம் விளைவிக்கிற அளவுக்கு, இந்த உலகம் கவனிக்கும்படியான இறப்பு எனக்கு வேண்டும்”

Share:
என் சாவு மௌனமாக இருக்கக்கூடாது: யார் இந்த ஃபாத்திமா? 

“ஒருவேளை நான் இறந்தால், பத்தோடு பதினொன்றாக என் மரணம் இருக்கக்கூடாது. வெறும் பிரேக்கிங் நியூசாகவோ, கூட்டத்தில் ஒன்றாகவோ அல்ல. என் காலமும் களமும் கூட மறைத்துவிட முடியாதபடிக்கு தாக்கம் விளைவிக்கிற அளவுக்கு, இந்த உலகம் கவனிக்கும்படியான இறப்பு எனக்கு வேண்டும்” என்று கேட்ட பாத்திமா, கொலை செய்யப்பட்டிருக்கிறார். 

பாலஸ்தீனிய காசா பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழி தாக்குதலால் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் புகைப்படக் கலைஞரும் பத்திரிகையாளருமான பாத்திமா ஹசானா(Fatima Hassouna).

பென்பாய்ண்ட் குழுமம், அவருக்கு மரியாதை மிகுந்த இறுதி வணக்கத்தைச் செலுத்துகிறது. 

யார் இந்த பாத்திமா? 

கடந்த 18 மாதங்களாக காசா பகுதியில் நடைபெற்று வரும் வான்வழி தாக்குதல்கள் அதன் விளைவுகள் ஆகியவற்றை படம்பித்து ஆவணபப்டம் ஆக்கியவர். இதற்காக காசா பகுதியில் அவர் ஆற்றிய பணிகள் குறித்து தயாரிக்கப்பட்ட ஆவணப்படம் ஒன்றும் வெளியாகியிருந்தது. இப்படித்தான் உலகத்தின் பார்வைக்கு அறிமுகமானார் துடிப்புமிக்க இளம் பத்திரிகையாளர் ஹசானா. 

25 வயதான பாத்திமா தன் குடும்பத்துடன் காசாவின் வடக்கு பகுதியில் வசித்து வருகிறார். கடந்த புதன்கிழமை (16.04.2025) நடத்தப்பட்ட வான்வழித்தாக்குதலில் பாத்திமா மட்டுமன்றி கருவுற்றிருந்த அவரது சகோதரி உட்பட அவரது குடும்பத்தினர் 11 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இஸ்ரேல் ராணுவம் நிகழ்த்திய தாக்குதல்களை ஆவணப்படுத்தியும், போர் விதிமீறல்களை அம்பலப்படுத்தியும் வந்த ஃபாத்திமாவுக்கு இன்னும் சில நாட்களில் திருமணம் நடைபெறவிருந்தது. 

அதனினும் மேலாக, இவரது 18 மாதகால உழைப்பை, போர்க்கால பணி வாழ்க்கையை ஆவணப்படுத்தும் விதமாக வெளியான ஆவணப்படத்தை பிரெஞ்ச் சுயாதீன திரைப்பட விழாவில் திரையிடப்போவதாகவும் அறிவிப்பு வந்திருந்தது. குறிப்பிட்டுச் சொல்வதானால், தாக்குதல் நடைபெறுவதற்கு சரியாக 24 மணி நேரத்துக்கு முன் வெளியான அறிவிப்பு அது. 

ஏறக்குறைய கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு இணையாக பார்க்கப்படும் ACID Cannes திரைப்பட விழாவில், ஹசானா ஆவணப்படம் திரையிடும் என்ற அறிவிப்பு வந்து அடுத்த 24 மணி நேரத்தில் கொல்லப்பட்டிருக்கிறார் ஹசானா. 

சர்வதேச அமைப்புகள் இன்னும் சத்தமின்றிப் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றன. 

என்ன ஆவணப்படம் அது? 

Put Your Soul on Your Hand and Walk என்ற பெயரில் இயக்குநர் செபிடே ஃபார்சி ( Sepideh Farsi) இயக்கிய ஆவணப்படம் அது. காசாவில் இஸ்ரேல் தாக்குதலைத் தொடங்கிய நாளிலிருந்து பாலஸ்தீனியர்களின் அன்றாட வாழ்க்கை எப்படி இருந்தது என்பதையும் ஃபாத்திமாவின் அவதானிப்புகளையும் மையப்படுத்திய ஆவணப்படம் அது. 

https://www.instagram.com/p/DImBGDttNsi

இந்த ஆவணப்படம் திரையிடலுக்கு முன்பாக, பாத்திமாவைக் கொன்று இனிவரும் யாருக்கும் ஆவணப்படுத்தும் துணிவே வரக்கூடாது என்று மிரட்டும் விதமாக இஸ்ரேல் இதைச் செய்துள்ளது என்று சக ஊடகவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். 

ஆனால், “இஸ்ரேல் மக்கள் மற்றும் வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தொடர்புடைய நபர் மீதான, துல்லியத் தாக்குதல்தான் இது” என்று இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. 

என்ன நடக்கிறது? 

பி.இ.சி யின் 2024ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையின்படி, கடந்த 18 ஆண்டுகளிலேயே (2014-2024) மிக அதிகமான பத்திரிகையாளர்கள் கொலை செய்யப்பட்ட ஆண்டு 2024 தான். உலகம் முழுவதும் உள்ள 25 நாடுகளில் மொத்தம் 179 இதழியலாளர்களாவது 2024ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டுள்ளனர் என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. (அறிக்கையைப் பார்க்கள்: https://www.pressemblem.ch/casualties)

மத்திய கிழக்கில், குறிப்பாக காசா பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்த சம்வங்கள், இந்த ஆண்டில் முறையே யுக்ரேன், பாகிஸ்தான், மெக்சிகோ ஆகிய பகுதிகளில் இன்னும் வீரியமாக அதிகரித்துள்ளன. அதன்படி, 2024ஆம் ஆண்டின் அபாயகரமான நாடுகள் வரிசையில் டாப் 10 பட்டியலில் வருகிறது இந்தியா. 

போர்ச்சூழலில் அகால மரணங்கள் தவிர்க்கமுடியாதவை. அதனால்தான் போரையே தவிர்க்க வேண்டும் என்று மொத்த உலகமும், முதல்-உலக நாடுகளுடன் போராடிக்கொண்டிருக்கிறது. இந்த வேதனைத்தீயில் வேலாகப் பாய்ந்திருக்கிறது மேலுமொரு பத்திரிகையாளர் மரணம்.  

பத்திரிகையாளர்கள் தொடர்ந்து குறிவைத்துத் தாக்கப்படுவது ஒரு மோசமான சமூகத்தின் குறியீடு.  சர்வதேச போர்க்குற்றங்களுக்கும், சர்வதேசமனித உரிமை மீறல்களுக்கும் சகிப்புத்தன்மையை விட மிகச்சிறந்த துணை வேறெதுவும் கிடையாது. இனியும் தாமதியாமல் இஸ்ரேலின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட உலகநாடுகள் முடிவெடுக்க வேண்டியதுதான் இந்த நேரத்தின் தேவை.  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *