தமிழக வெற்றிக் கழகத் தலைவரின் சுமார் ஒரு மணி நேர பேச்சு அவர் பாணியில் சொன்னால் எதார்த்தமாகவே இயல்பாகவே இருந்தது.
ஒத்திகைப் பார்க்காத, எழுதி வைத்ததை வாசிக்காத, மிகையில்லாத வட்டார வழக்குமொழி பேச்சு இது.
பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய அவர்களே..அவர்களே..
என்று ளே..ளே..என்று இழுத்து இழுத்துப் பேசும் அட்டப் பழசு மேடைக் கலாசாரத்தை நன்றாகவே சாடினார்.
நான் குழந்தைதான். அரசியல் என்னும் பாம்மை கையிலே பிடித்துள்ளேன்.
எனக்குப் பயமில்லை என்ற நோக்கு சிறப்பான அறிமுகம்.
பேச்சு முழுக்க ஐயன் திருவள்ளுவரின் பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என்ற வரிகள் ஆக்ரமித்தன.
மாற்று சக்தியெல்லாம் நான் இல்லை. அலங்கார ஆடம்பர அரசியலோ புள்ளிவிபர அரசியலோ நான் செய்யப்போவதில்லை.
மாற்று சக்தி அந்த சக்தி இந்த சக்தி என்று பத்தோடு பதினொன்றாக எக்ஸ்ட்ரா லக்கேஜாக நான் இருக்கப்போவதில்லை என்றார்.
யாரையும் தாக்கி வெறுப்பரசியல் செய்யப்போவதில்லை என்று சொல்லிவிட்டு தற்போதைய திராவிட மாடல் அரசை குடும்பமாய் கொள்ளையடிக்க வந்த கூட்டம் என்று சீண்டினார்.
பாசிசம் .. பாசிசம் என்று எவ்வளவு நாள்தான் அரசியல் செய்வீர்கள்.?
அவர்களுக்கு பாசிசம் என்றால் உங்களுக்கு பாயாசமா என்றது நெத்தியடி.
ஏ டீம், பி டீம் என்று எங்களை சொல்வதோ ஏதே ஒரு கலரை என்மீது பூசுவதோ எவ்விதத்திலும் என்னை பாதிக்காது என்கிறார்.
என் வருகையின் நோக்கம் ..
எல்லாருக்கும் எல்லாம் வேண்டும். வாழ்வதற்கு வேலை, வசிப்பதற்கு வீடு, வயித்துக்குச் சோறு. எல்லாருக்கும் வேண்டும் என்பது எனது அரசியல் வருகை நோக்கம் என்று தெளிவுபடுத்தினார்.
கல்வி, மருத்துவம் மேம்படல். பெண்கள், குழந்தைகளுக்கு தனித்துறை. தகவல் தொழில்நுட்ப கல்விக்கு தனிக்கல்லூரி , மதுரையில் தலைமைச் செயலகம் என்ற அறிவிப்புகள் வரவேற்கத் தக்கதே..
மாநில உரிமைகளைச் சீண்டும் ஆளுநர்
பதவி எதற்கு என்று ஆளுநரை ஒரு போடு போடவும் தவறவில்லை.
எதற்குப் பெரியார்.?
எதற்கு அம்பேத்கார்.?
எதற்கு வேலுநாச்சியார்.?
எதற்கு அஞ்சலை அம்மாள்.? ஒரு நீண்ட விளக்கவும் கொடுத்து அவர்களின் கொள்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என்கிறார்.
ஆமாய்யா..
நான் கூத்தாடிதான்.
அதற்கு என்ன இப்போ.?
கூத்தின் மகத்துவம் தெரியுமா.? எம்ஜிஆரும்.என்டிஆரும் கூத்தாடிதான். திராவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிதும் கூத்தின் மூலம்தானே..தெளிவாகப் பேசியது இரத்தம் – தக்காளிச் சட்டினி மொமன்ட்.
மீம்ஸ் போட்டு டட்ரோல் செய்து கலாய்ப்பவர்களுக்கு அந்த நண்டு சுண்டுகளுக்குப் பதில் சொல்ல எனக்கு நேரமில்லை. எனக்கு நிறைய வேலை இருக்கு என்கிறார்.
சேர, சோழ, பாண்டியர் கட்அவுட் பார்த்து எங்கடா பல்லவர் என்று கேட்டவர்கள் யோசிப்பார்களோ..
நான் சிறுவன்தான்.
அரசியலில் பழம் தின்று கொட்டைப் போட்டவர்களை நான் எவ்வாறு எதிர்ப்பேன் என்ற கேள்வியை அவரே கேட்டு பதிலையும் அவரே கூறினார்.சிறுவயதில் தன்னை எதிர்த்த பகையரசர்சகளை முறியடித்து அரியணை ஏறிய பாண்டியன் நெடுஞ்செழியனின் வரலாற்றை சங்க இலக்கியத்தில் படியுங்கள் என்று அறிவுறுத்தினார்.
எனது கொள்கைகளை ஏற்று என்னிடம் வரும் மாற்றுக் கட்சியினரை வரவேற்பேன். அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருவேன் என்று அவர் கூறியது பல கட்சிகளை யோசிக்கவைக்கும்.
சினிமாவில் எனது கேரியரின் உச்சத்தை விட்டுட்டு, மிகப்பெரும் ஊதியத்தை தவிர்த்துவிட்டு உங்களை நம்பி உங்களுக்காக வந்துள்ளேன்
என்று அவர் கூற..
ஆர்ப்பரித்து ஆமோதித்ததது வந்திருந்த பெருங்கூட்டம்.
இந்த பெருங்கூட்டம் காசு கொடுத்து வரவழைக்கப்படவில்லை என்பது மிகப் பெரும் மாற்றத்திற்கான அறிகுறி.
ஆக…
2026 தேர்தல் களத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் வரவு தவிர்க்கமுடியாத ஒன்றாக இருக்கும்.
முடிவு என்ன என்பதை தமிழக வாக்காளப் பெருமக்கள் தீர்மானிப்பார்கள்.
கருத்தாளர்: மா.மாரிராஜன்.
1 Comment
[…] […]
Comments are closed.