அரசாணை 121: அரசின் தாமதமும் பாலியல் குற்றமே
- February 9, 2025
- 0
அரசியல் காரணங்களுக்காக, இதை அலட்சியம் செய்யும் அரசும் கூட பாலியல் குற்றத்துக்கு துணைபோவதாகவே பொருள்.
அரசியல் காரணங்களுக்காக, இதை அலட்சியம் செய்யும் அரசும் கூட பாலியல் குற்றத்துக்கு துணைபோவதாகவே பொருள்.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்ற பெருமையை, மாநில அரசும் காவல்துறையும் மாறி மாறிக் கொண்டாடித் தீர்த்த தமிழ்நாடு, தற்போது குற்ற உணர்ச்சியுடன் தலைகுனிய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
ஒன்றல்ல இரண்டல்ல, பிப்ரவரி மாதம் தொடங்கி 10 தேதிக்குள்ளாக 10க்கும் மேற்பட்ட பாலியல் கொடுமைகள். பட்டியலிட்டால் மூச்சுவிடும்படி பதற்றமளிக்கிறது பட்டியல். இதில் பள்ளிக் குழந்தைகளும் இருப்பது வேதனை என்றால், அதில் குற்றமிழைத்தவர்கள் ஆசிரியர்களாக இருப்பது இன்னும் வேதனை.
“சரி என்னதான் செய்வது? வேலியே பயிரை மேய்ந்தால் வேதனைப்படுவதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்? இதற்கு அரசுதான் என்ன செய்ய முடியும்? யாரைச் சொல்லி என்ன செய்ய?” என நம்மை நாமே நொந்து கடப்பதெல்லாம் ஆகப்பெரும் சமூக துரோகம்.
குற்றமிழைத்தவருக்கு தண்டனை வழங்கப்படும் தான். ஆனால், போதுமான தண்டனையா என்றால் அது பரிசீலனைக்குட்பட்டதே..!
அப்படியானால், இந்த நேரத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன?
அது, பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை 121-ஐ அமல்படுத்த வைப்பதும் அடுத்த நிலைக்கு நகர்த்துவதும் தான்.
முதலில் அதென்ன அரசாணை 121 என்பதைத் தெரிந்து கொள்வோம்.
ஒரு ஆசிரியர் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் அவரை பணியிடை நீக்கம்/ பணியிட மாற்றம் / பணிநீக்கம் செய்வது ஆகிய நடவடிக்கைகள் துறைசார்ந்து எடுக்கப்படும். எனினும், மீண்டும் அந்த ஆசிரியர் இன்னொரு பள்ளியில் சேர்வதற்கு வாய்ப்பு உண்டு. இது அச்சுறுத்தல் தான். முறையாக விழிப்புணர்வும் உளவியல் சிகிச்சையும் அளிக்கப்படுவது கூட மாற்றத்துக்கான வாய்ப்பு இருக்கும் நம்பிக்கையில் தானே ஒழிய, அது முழுமையான நடவடிக்கை அல்ல.
சொல்லப்போனால், இப்படி ஒரு எண்ணம் வந்த ஒருவர், அதன்பிறகு கற்பித்தலுக்கும் தகுதியுடைய நபர் அல்ல என்பதை உணர்ந்து நடவடிக்கை இருக்க வேண்டும். கற்ற கல்வி பண்படுத்தாத ஒருவர் ஆசிரியராக இருந்த பிள்ளைகளைப் பண்படுத்துவார் என்ற நம்பிக்கையும் அவசியமற்ற ஒன்றுதான். அப்படியானால், என்ன செய்யலாம்? அவர் இனிமேல், ஆசிரியப் பணிக்கே பொருந்தாதவர் என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அப்படியான நடவடிக்கையை வலியுறுத்தும் அரசாணை தான் அது.
அரசாணை 121இன் படி, “குழந்தைகளிடம் தவறாக நடந்துகொள்ளும் ஆசிரியர்களின் கல்விச் சான்றிதழ்கள் அனைத்தும் துறைசார் நடவடிக்கை மூலம் ரத்து செய்யப்பட வேண்டும்” என்ற தண்டனையும் உண்டு. அத்துடன், அரசு ஊழியர் நடத்தை விதிகள் பிரிவு 19(2)இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிமீறல் நடந்தால் அதற்கான தண்டனைகளும் சேர்த்தே உண்டு.
இந்த அரசாணை வெளியிடப்பட்டு, 22 ஆண்களாகியும் இதன்படியான தண்டனைகள் வழங்கப்படுவது குறித்து எந்தத் தெளிவும் இல்லை. அரசும் இந்த அரசாணை அமல்படுத்தப்படுவது குறித்து எந்த விளக்கமும் தரவில்லை.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிருஷ்ணகிரி, மதுரை, கரூர் திருப்பூர், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி, சென்னை என தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து பள்ளி மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளாகிய சம்பவங்கள் குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால், கடுமையான தண்டனை நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் நிறைவேற்றப்பட்ட அரசாணை என்பதால் இப்படி ஒரு அலட்சியமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை. இதுபோலப் பயிரை மேயும் வேலிகளை வேரோடு பெயர்த்தெறியும் அரசாணை அது. அரசியல் காரணங்களுக்காக, இதை அலட்சியம் செய்யும் அரசும் கூட பாலியல் குற்றத்துக்கு துணைபோவதாகவே பொருள்.