9 மாத விண்வெளிவாசத்துக்குப் பின், பூமி திரும்பியுள்ளார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இதையொட்டி, “ஒரு பெண் காப்பாற்றப்பட்டுவிட்டார்”, “இந்தியாவின் மகள் மீட்கப்பட்டு விட்டார்” “உடல்நலம் குன்றியுள்ளார்” , “டால்பின்கள் வரவேற்றன” , “சமோசா, பகவத்கீதை, கணேஷ் சிலை”
9 மாத விண்வெளிவாசத்துக்குப் பின், பூமி திரும்பியுள்ளார் விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ். இதையொட்டி, “ஒரு பெண் காப்பாற்றப்பட்டுவிட்டார்”, “இந்தியாவின் மகள் மீட்கப்பட்டு விட்டார்” “உடல்நலம் குன்றியுள்ளார்” , “டால்பின்கள் வரவேற்றன” , “சமோசா, பகவத்கீதை, கணேஷ் சிலை” “பக்கத்துவிட்டுக்காரர் பேட்டி” “உறவுக்காரர் உருகல்” என புதுப்புது செய்திக்குவியல்கள் வந்தவண்ணமே இருக்கின்றன.
அதேசமயம், சுனிதா வில்லியம்சின் பூமி வருகையையொட்டி சுற்றிச்சுழலும் செய்திகளுக்கு மத்தியில், கவனிக்காமல் விட்ட அல்லது கவனிக்க வேண்டிய செய்திகளைத் தொகுக்கிறது இந்தக்கட்டுரை.
2024 ஜூன் 5 ஆம் தேதி, பல கட்ட தாமதங்களுக்குப் பின்னர், ஃபுளோரிடாவின் கேப் கேனவெரல் விண்வெளி நிலையத்திலிருந்து ஸ்டார்லைனர் விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் வெறும் 8 நாட்கள் பயணத்திற்குப் பின்னர் ஜூன் 14-ஆம் தேதி பூமிக்கு திரும்ப திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், உந்துக்கலன் கோளாறு காரணமாக, செப்டம்பர் மாதம் வரை சரிசெய்ய முயன்றும், முடியாமல் போனதால் சுனிதாவையும் உடன் சென்ற புட்ச் வில்மோரையும் விண்வெளியிலேயே விட்டுவிட்டு பூமிக்கு திரும்பியது விண்கலம்.
இதைத்தொடர்ந்து, 286 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்த, பத்திரமாக இன்று ( 19.03.2025 ) பூமிக்குத் திரும்பியுள்ளார். ஒவ்வொரு 6 மாதத்துக்கு ஒருமுறையும் செல்லும் விண்வெளி ஓடங்களில், இந்த முறை இரண்டு காலி இருக்கைகளுடன் சென்று, வழக்கமான வேலைத் திட்டத்தின்படி ஆட்களுடன் திரும்பி வந்துள்ளது டிராகன் – ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் – விண்கலம்.
புட்ச் வில்மோர் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் சக பணியாளர்களான அமெரிக்க விண்வெளி வீரர் நிக் ஹேக், ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோருடன் இந்திய நேரப்படி நேற்று காலை 10.35 மணிக்கு, சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட அவர், 17 மணிநேர பயணத்திற்குப் பிறகு பூமியை அடைந்தார்.
சுனிதா வில்லியம்ஸ் செய்தவை என்னென்ன?
விண்வெளியில் நீண்ட காலம் தங்கிய முதல் பெண்மணி என்ற சாதனையை படைத்துள்ளார் சுனிதா.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெளியே அதிக மணிநேரம் செலவழித்த பெண் இவர்தான்.
இது சுனிதா வில்லியம்ஸின் மூன்றாவது விண்வெளிப் பயணம்.
மூன்று பயணத்திலும் சேர்த்து மொத்தமாக ஒன்பது முறை விண்வெளியில் நடந்துள்ளார் சுனிதா.
இந்தக் காலகட்டத்தில் மொத்தம் 62 மணி நேரம் 6 நிமிடங்களை அவர் விண்வெளி நடையில் செலவிட்டுள்ளார்.
விண்வெளி வீராங்கனையாக இவையெல்லாம் கவனிக்கப்பட வேண்டிய சாதனைகள் என்றால், இந்த 9 மாதகால விண்வெளிக் காலத்தின்போது, இன்னும் கூடுதலாக சுனிதா நிகழ்த்தியவை, விண்வெளித்துறையைக் கடந்து வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வுகள்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்தபடியே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்களித்தார்.
தொப்பியும் மான்கொம்பும் என இனிப்புகள் மிதக்க கிறிஸ்துமஸ் கொண்டாடினார்.
ஏற்கனவே வீட்டில் செலவிட திட்டமிட்டிருந்த கிறிஸ்துமஸுக்கு ஒரு வாழ்த்துச் செய்தியை அனுப்பியது,
செய்தியாளர் சந்திப்பை நிகழ்த்தியது என பலவற்றையும் அவர்கள் சாதித்துள்ளனர்.
இவற்றையெல்லாம் கடந்துவிட்டு அல்லது மறந்துவிட்டு சுனிதா வில்லியம்சின் சமோசாவையும் , தற்செயலாக வந்த டால்பின்களையும் பெரிதுபடுத்துவது, அறிவுமல்ல அது அறிவுடை சமூகத்துக்கு அழகுமல்ல.