அரசியல் ஆசிரியர் தேர்வுகள் தமிழ்நாடு

பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?

  • April 23, 2024
  • 0

அவர் பகிர்ந்திருக்கும் காணொலியும் நேரடியாக உறவினர்களின் வீடியோவாக மட்டுமில்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டதாக இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.

Share:
பொய்… உண்மை… பொய்: கடலூர் பெண் மரணத்தில் நடப்பது என்ன?

கடலூர் அருகே தேர்தலின் போது பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் அவரது உறவினர்கள் வாக்குமூலம் அளித்த வீடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார். பாஜகவுக்கு வாக்களித்ததால் திமுகவினரால் அடித்துக் கொலை என்று செய்தி வெளியிட்ட அண்ணாமலை, காவல்துறையின் விளக்கத்துக்குப் பிறகும் இது கொலைதான் என்று நிரூபிக்க முயற்சிக்கும் விதமாக காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பின்னணி என்ன?

தமிழ்நாட்டில் கடந்த 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. அன்றைய தினம் கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அடுத்த பக்ரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார், அவரது மனைவி கோமதி, மகன்கள் ஜெயபிரகாஷ், சதீஷ்குமார் மற்றும் ஜெயக்குமாரின் தம்பி ஜெய்சங்கர் ஆகியோர் வாக்களித்துவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து வந்த 11 பேர் கொண்ட மர்ம கும்பல் கத்தி மற்றும் கட்டையால் அவர்களை கொடூரமாக தாக்கியது. இதில் 5 பேரும் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி கோமதி உயிரிழந்தார். முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக காவல் துறை தரப்பு கூறியது. ஆனால், பாஜகவிற்கு வாக்களித்ததால் தான் அவர்கள் 5 பேர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக சமூக வலைதளங்களில் குற்றம் சாட்டி பதிவுகள் வெளியாகின.

இப்படி பதிவிட்ட, ‘வட இந்தியர்’ எனும் பெயர் கொண்டசமூக வலைதளக் கணக்கின் மீதும் பொய் பரப்பிய குற்றச்சாட்டில் புகார் பதிவு செய்யப்பட்டது.

கொலை செய்யப்பட்ட கோமதி

காவல்துறை விளக்கம்

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து கடந்த 21-ம் தேதி பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எக்ஸ் வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில், இந்த தாக்குதலை திமுகவினர் நடத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். ஆனால் கோமதி கொலைக்கும் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என காவல்துறை தகவல் தெரிவித்த நிலையில், இந்த சம்பவத்தில் திமுகவினரை தொடர்புபடுத்தி பேசியதாக அக்கட்சி சார்பில் அண்ணாமலை மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட கோமதி குடும்பத்துடன் பாஜகவினர் உரையாடும் வீடியோ ஒன்றை எக்ஸ் வலைதளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

மேலும் அந்த பதிவில், “சகோதரி கோமதி திமுக கூட்டணி கட்சிக்கு வாக்களிக்காத காரணத்தினால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவத்தை கண்டித்துப் பதிவிட்டதற்கு, என் மீது காவல்துறையினரை ஏவி விட்டு, பாசிச திமுக அரசு ஒரு வழக்கை பதிவு செய்திருப்பதாக அறிகிறேன். திமுக மறைக்கத் துடித்த உண்மை இதோ. பாஜகவுக்கு வாக்களித்த காரணத்தால்தான் கோமதி கொலை செய்யப்பட்டார் என்பதை, அவரது கணவர் ஜெயக்குமார் மற்றும் உறவினர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். முன்விரோதம் என்பது திமுகவின் சப்பைக்கட்டு நாடகம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “ஊழல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, பொதுமக்களுக்காக நாங்கள் முன்னெடுத்த மக்கள் போராட்டங்களுக்கு, என் மீது பல வழக்குகள் தொடுத்திருக்கிறார்கள். அவ்வளவு ஏன்? முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே என் மீது இரண்டு வழக்குகள் தொடுத்திருக்கிறார். இவ்வாறு பொய்யான வழக்குகள் தொடுத்து எங்கள் குரல் வளையை நசுக்கி விடலாம் என்று திமுக பகல் கனவு கண்டு கொண்டிருக்கிறது. உங்கள் பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை மறந்து விட வேண்டாம்” எனவும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

குறிப்பு: பொய் என்று அரசு சொல்ல, மீண்டும் மீண்டும் அது உண்மை என்று சொல்லிவருகிறார் அண்ணாமலை. அவர் பகிர்ந்திருக்கும் காணொலியும் நேரடியாக உறவினர்களின் வீடியோவாக மட்டுமில்லாமல், படத்தொகுப்பு செய்யப்பட்டதாக இருப்பதையும் நம்மால் கவனிக்க முடிகிறது.