08/09/2026
News அரசியல் தமிழ்நாடு

முதல் முறை MLA… ஆனாலும் ராஜிநாமா – யார் இந்த தாராபுரம் சத்யபாமா?

  • September 7, 2026
  • 0

எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கை நட்சத்திரம் தவெகவின் தளபதியாக மாறியது எப்படி? பின்னணித் தகவல்களுடன் விளக்கும் கட்டுரை

முதல் முறை MLA… ஆனாலும் ராஜிநாமா –  யார் இந்த தாராபுரம் சத்யபாமா?

கட்சி தொடங்கிய மூன்றே ஆண்டுகளில் தவெக ஆட்சியைப் பிடித்ததோர் அதிர்ச்சி என்றால், அதைவிட பேரதிர்ச்சி, வாக்களித்து வெற்றி பெற வைத்த சட்டமன்ர உறுப்பினர்கள் சுடச்சுட ராஜினாமா செய்து அன்றைய தினமே தவெகவில் இணைந்தது. 

அந்த வரிசையில் முன்னணியில் இருப்பவர் தாராபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் வென்ற பி.சத்யபாமா. 

எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையை வென்று, 2026 தேர்தலில் களமிறக்கப்பட்ட புதுமுகமான இவர், தற்போது தவெகவின் தாராபுரத் தளபதி. 

யார் இவர்?  மாவட்டப் பஞ்சாயத்து முதல் 2026 இடைத்தேர்தல் வரை இவர் கடந்து வந்த பாதையைப் பார்ப்போமா? 

1975-ஆம் ஆண்டு பிறந்தவர் பி. சத்யபாமா. தாராபுரத்தில் உள்ள செயின்ட் அலோசியஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1990-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு முடித்துள்ளார்.

தேர்தல் பிரமாணப் பத்திரத்தின்படி, விவசாயத் தொழிலில் ஈடுபட்டு வரும் சத்யபாமாவின் நிகர சொத்து மதிப்பு சுமார் 10 கோடியே 70 லட்சம் ரூபாய்.

அதிமுகவின் தீவிர உறுப்பினராக செயல்பட்டு வந்த சத்யபாமா, திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அதிமுகவின் இணைச் செயலாளராகவும் பொறுப்பு வகித்துள்ளார்.

ஆனால், சட்டமன்ற அரசியலுக்கு வருவதற்கு முன்பே அவருக்கு உள்ளாட்சி நிர்வாகத்தில் மாவட்ட ஊராட்சித் தலைவராகவும் அவர் பணியாற்றி இருக்கிறார். இந்த உள்ளாட்சி அரசியல் அனுபவம்தான், 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவின் புதிய முகங்களில் ஒருவராக அவரை முன்னிறுத்துவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தாராபுரம் தனித் தொகுதியில் அதிமுக சார்பில் களமிறக்கப்பட்டார் சத்யபாமா.

அப்போது அவர் அரசியல் ரீதியாக ஒரு புதுமுகம் தான். ஆனால், தேர்தல் முடிவு அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது.

மொத்தம் 81 ஆயிரத்து 100 வாக்குகள் பெற்று, சரியாக 16 ஆயிரத்து 727 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதன்முறையாக சட்டமன்ற உறுப்பினரானார் சத்யபாமா.

தேர்தல் அரசியலுக்குள் நுழைந்த முதல் முயற்சியிலேயே சட்டமன்றத்துக்குள் நுழைந்தார். அதிமுக தலைமையின் நம்பிக்கையையும் பெற்றார்.

ஆனால்…

இந்த வெற்றி நீண்ட காலம் அதிமுகவுடன் நீடிக்கவில்லை.

தேர்தல் முடிவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சிப் பரபரப்பின் போது, சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புதுச்சேரியில் தங்கியிருக்குமாறு கட்சித் தலைமை அறிவுறுத்தியதாக சத்யபாமா கூறுகிறார்.

அந்த நேரத்தில் நடந்த சில பேச்சுவார்த்தைகள்தான் அவருடைய அரசியல் முடிவையே மாற்றியுள்ளன. 

குறிப்பாக, திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக
பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அவர் கூறியுள்ளார்.

திமுகவை எதிர்ப்பதற்காகவே உருவான அரசியல் இயக்கத்துடன் இணைந்து ஆட்சி அமைப்பது என்ற எண்ணத்தில் தனக்கு உடன்பாடு இல்லை என்பதே சத்யபாமாவின் நிலைப்பாடு. 

இந்த காலகட்டத்தில், எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம், சி. விஜயபாஸ்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் பல்வேறு ஆலோசனைகளை வழங்க, 

தனது வெற்றிக்கு எஸ்.பி. வேலுமணியின் ஆலோசனையின் பேரில் பொறுமை காத்தார் சத்யபாமா. 

ஒருபுறம் பேச்சுவார்த்தை மூலம் மீண்டும் இணைவதற்கான வாய்ப்பு இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு. 

மறுபுறம் கட்சித் தலைமை எடுத்த கடுமையான நிலைப்பாடு.

இந்த சூழலில்தான் சத்யபாமாவின் அரசியல் முடிவுவேறொரு பாதையை நோக்கித் திரும்பியது.கட்சியின் விதிமீறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமியின் அறிவித்தது, சத்யபாமாவை ராஜினாமா முடிவுக்குத் தள்ளிது. 

பதவியைத் தக்க வைத்துக் கொண்டு காத்திருப்பதைவிட,
பதவியையே ராஜினாமா செய்து வெளியேறுவது என்று முடிவு செய்தார்.

2026 மே 25.

இந்த நாள் சத்யபாமாவின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமான திருப்புமுனை. முதல்முறையாக, தான் வென்ற தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார்.

அதோடு கதை முடிந்துவிடவில்லை.

அதே நாளில் சென்னை பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்துக்குச் சென்று தவெகவில் இணைந்தார்.

அதாவது…

காலையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்.
மாலையில் தவெகவின் முக்கிய அரசியல் முகங்களில் ஒருவர்!

இப்போது அந்தத் தொகுதிக்கு அக்டோபர் 6, 2026 அன்று இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த இடைத்தேர்தல் அல்ல. தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நடைபெறும் முக்கியமான முதல் தேர்தல் சோதனைகளில் ஒன்று.

அதனால்…

தாராபுரம் இடைத்தேர்தல் முடிவு தவெகவுக்கு ஒரு அரசியல் அங்கீகாரத் தேர்வாகவும் பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்,  2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி. சத்யபாமாவே, தவெக சார்பில் மீண்டும் தாராபுரத்தில் களம் இறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.

அதிமுகவின் புதிய முகம்…
எடப்பாடியின் நம்பிக்கை…
81 ஆயிரம் வாக்குகளுடன் வென்ற சட்டமன்ற உறுப்பினர்…
பதவியை ராஜினாமா செய்தவர்…
அதே நாளில் தவெகவில் இணைந்தவர்…

இப்போது…

தாராபுரத்தின் தவெக முகம்!

சத்யபாமாவின் அடுத்த அரசியல் நகர்வு என்ன? அக்டோபர் 6-ஆம் தேதி தாராபுரம் மக்கள் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்களா? தாராபுரத்தின் அடுத்த அரசியல் அத்தியாயம் எப்படியிருக்கப் போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *