கரூரில் அறநிலையை துறைக்கு சொந்தமான கோவில் இனாம் நிலப் பிரச்சனையில் பட்டாதாரர்களுக்கான பத்திரப்பதிவு தடை நீக்க உத்தரவை வரவேற்று தமிழக முதல்வருக்கு எம்.பி ஜோதிமணி நன்றி தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டத்தில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் இனாம் நிலங்கள் தொடர்பாக முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு 1963-ஆம் ஆண்டின் இந்து சமய அறநிலையச் சட்டத்தின் கீழ், கோவில் நிலங்களில் பதிவு செய்யப்பட்டிருந்த தடை நிபந்தனைகளை (Prohibitory Module) ஆய்வு செய்து, தகுதியான நிலங்களுக்கு தடை நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, அருள்மிகு புகழிமலை பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், அருள்மிகு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோவில், குப்புச்சிபாளையம் அருள்மிகு ரவீஸ்வரர் திருக்கோவில், வெஞ்சமாங்கூடலூர் அருள்மிகு விகிர்தீஸ்வரர் திருக்கோவில் ஆகிய 4 கோவில்களுக்கு உட்பட்ட மொத்தம் 15 கிராம நிலங்களுக்கு சொந்தமான 3,084.95 ஏக்கர் பரப்பளவில், 3,390 பட்டாதாரர்கள் தொடர்புடைய பதிவுகளுக்கு Prohibitory Module-ல் இருந்து தடை நீக்கம் செய்ய கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் பரிந்துரையின் அடிப்படையில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிடப்பட்டுள்ள பிற நிலங்களுக்கும் தடை நீக்கம் செய்யலாம் எனவும், அதற்கான நடைமுறைகளை விரைந்து மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட கோவில் செயல் அலுவலர்களுக்கு அறநிலையத்துறை ஆணையர் டி.ஜி.வினய் அனுப்பிய கடிதத்தில் மூலம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி,
மக்கள் நிலம் மக்களுக்கே, கோவில் நிலம் சாமிக்கே. இதில் பாஜக பொய்யான பிரச்சாரம் செய்து வருவதாகவும், கரூர் மக்கள் இதனை நம்ப மாட்டார்கள். கரூர் மாவட்டம் சிறிய மாவட்டம், 25 ஆயிரம் கோடி கோவில் நிலத்தை தாரை வார்த்து விட்டதாக நைனார் நாகேந்திரன் கூறுவது பச்சை பொய்.
இப்பிரச்சினை தொடர்பாக 1 மாத காலமாக அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்களை சந்தித்து வைத்த கோரிக்கையின் அடிப்படையில் தனி மாவட்ட வருவாய் அலுவலரை நியமனம் செய்து கோவில் நிலங்கள் எது, வருவாய் துறை நிலங்கள் எது என ஆய்வு செய்து இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சாதாரண மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பப்பட்டு உள்ளதாக முதல்வருக்கு நன்றி தெரிவித்தார்.