உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்த 10 மசோதாக்கள் என்னென்ன?
April 8, 2025
0
ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதலும் அளித்துள்ளது.
மசோதாக்களை சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பி வைத்தால் ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுமென்றே கிடப்பில் போடுவதாக ஆளும் தரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கும் பதிவு செய்திருந்தது.
ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது.
இதனை நீதிபதிகள் ஜே.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன் அடங்கிய அமர்வு பிறப்பித்தது. இதில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன. இந்த தீர்ப்பில்,
அரசியலமைப்பு சட்டப்பிரிவு 200ன் படி ஆளுநர் நடவடிக்கை எடுக்க என்ன வாய்ப்பு உள்ளது என்பதை ஆராய வேண்டும்.
இந்த சட்டப்பிரிவின் கீழ் சுயேட்சையாக ஆளுநர் நடவடிக்கை எடுக்க முடியுமா?
இரண்டாவது முறையாக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்களை குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்தது சட்டப்படி தவறா? என முடிவு செய்ய வேண்டும்.
மசோதாக்களை தான் நிறுத்தி வைக்காமல் குடியரசு தலைவர் முடிவு செய்ய ஆளுநர் அனுப்ப முடியுமா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
மாநில அரசின் அறிவுரைப்படி மட்டும் தான் ஆளுநர் செயல்பட முடியுமா? அல்லது சுயேட்சையாக முடிவு செய்ய அதிகாரம் உள்ளதா? என்பதை முடிவு செய்ய வேண்டும்.
கூடிய விரைவில் என்ற வாக்கியத்திற்கு என்ன பொருள்?
மசோதாக்களுக்கு ஒப்புதல் தர ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க வேண்டுமா? என்பது குறித்து முடிவு செய்ய வேண்டும்.
ஆளுநரின் செயல்பாடுகள் அரசியலமைப்பு சட்டப்படி வரையறுக்கப்பட்ட நோக்கத்திற்கு எதிரானதாக உள்ளது.
அத்துடன், சட்டமன்றத்தில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு ஒரு மசோதா அனுப்பி வைக்கப்பட்டும் அதை நிறைவேற்றுவது குறித்து சிந்திக்காமல், குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டவிரோதமான செயல் என்று தீர்ப்பளித்துள்ளது உச்சநீதிமன்றம்.
அதனினும் கூடுதல் அதிரடியாக, ஆளுநர் நிறுத்தி வைத்த மசோதாக்களில் 10 மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றமே தன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி ஒப்புதலும் அளித்துள்ளது.
இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாநில ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு விதித்ததும், தானே முன்வந்து ஆளுநர் வழங்காத ஒப்புதலை வழங்குவதும் நிகழ்ந்துள்ளது என்று உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கே.எம்.ராஜன் தெரிவித்துள்ளார்.
10 மசோதாக்கள் என்னென்ன?
ஏற்கெனவே பதினைந்தாவது சட்டமன்றப் பேரவையில் 8.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 9.1.2020 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட, 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 2/2020)
9.1.2020 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட, 2020-ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 12/2020)
பதினாறாவது சட்டமன்றப் பேரவையில், 25.4.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 24/2022)
5.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 10.5.2022 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022 ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 29/2022)
9.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 10.5.2022 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம், சென்னை (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 39/2022)
10.5.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 40/2022)
18.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 19.10.2022 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் சட்டங்கள் (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 48/2022)
19.10.2022 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2022-ஆம் ஆண்டு தமிழ்ப் பல்கலைக்கழக (இரண்டாம் திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 55/2022)
19.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 15/2023)
20.4.2023 அன்று அறிமுகம் செய்யப்பட்டு, 21.4.2023 ஆம் நாளன்று ஆய்வு செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத் (திருத்தச்) சட்டமுன்வடிவு (சட்டமன்றப் பேரவை சட்டமுன்வடிவு எண் 18/2023)
எளிமையாகப் புரிந்து கொள்வதானால், இதுதான் மசோதாக்களின் பட்டியல்.
2020-இல் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் மற்றும் கால்நடைப் பல்கலைக்கழகங்களில் ஆய்வு நடத்தவும், விசாரணை செய்வதற்கும் அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் இரு சட்டத் திருத்த மசோதக்கள் ஒப்புதலுக்காக ஜனவரி அனுப்பப்பட்ட மசோதா.
2022-இல் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைப்பது தொடர்பான சட்டத் திருத்த மசோதா ஒன்றும் நிலுவையில் உள்ளது.
2022-இல் நிறைவேற்றப்பட்ட, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்குவது தொடர்பான மசோதா.
தமிழ்நாடு சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்தை உருவாக்குவது தொடர்பான மசோதா.
மதுரை, கோவை, திருப்பூர், ஒசூர் நகர வளர்ச்சிக் குழுமங்கள் உருவாக்குவது தொடர்பான தமிழ்நாடு நகர ஊரமைப்பு திட்ட மசோதா.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்க அதிகாரம் அளிக்கும் மசோதா.
தமிழக சட்டப்பேரவையில் ஆங்கிலோ இந்தியன் உறுப்பினரை தேர்வு செய்வதை நிறுத்திவைப்பதற்கான மசோதா.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் மாற்றுத் திறனாளி உறுப்பினரை தேர்வு செய்வதை தடுக்கும் சட்டத்தை திருத்துதல்.
தமிழ்நாடு அடுக்குமாடிக் குடியிருப்பு உரிமையாளர் சட்டம் மசோதா.
இவற்றுள் உச்சநீதிமன்றமே நிறைவேற்றிய மசோதாக்கள் எவை எவை என்பன குறித்த விவரங்கள் தீர்ப்பு விவரங்கள் வெளியானபின் தெளிவாக்கப்படும்.