கி.ரா. எழுதிய வயது வந்தவர்களுக்கு மட்டும்… நூலாயணம்
November 10, 2024
0
ஆண் பெண் இருவரின் இனப்பெருக்க மண்டல படத்தைப் பார்த்து சற்று நிமிடம் நான் ஆடித்தான் போனேன். என்னது இது? இப்படி ஒரு படத்தை எப்படி பாட புத்தகத்தில் வைத்தார்கள் என்ற ஐயம் எனக்கு எழவே செய்தது.
புத்தகத்தின் பெயர்: வயது வந்தவர்களுக்கு மட்டும் ஆசிரியர் பெயர்: கி. ராஜநாராயணன் விலை: 250; பக்கங்கள்: 248
“வயது வந்தவர்களுக்கு மட்டும்” என்கிற இந்த புத்தகத்தை நான் என் வகுப்பறையில் வயது வந்த மாணவர்களிடம் அறிமுகப்படுத்தும் பொழுது அந்தப் பெயரைக் கேட்டவுடன் அவர்கள் ஒரு மெல்லிய புன்னகையை புரிந்து இருக்கையில் இருப்பு கொள்ளாமல் அமர்ந்திருந்தனர். அது எனக்கு எந்த விதத்திலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஏனெனில் இதை நான் முன்னரே அறிந்த ஒன்றே.
அந்தக் கூச்சத்தை போக்க வேண்டியது என்னுடைய கடமை என்பதை நான் புரிந்து கொண்டது அந்த புத்தகத்தை வாசித்து முடித்தவுடன் தான். ஒரு படைப்பாளரின் எழுத்து என்பது வெறுமனே பெயருக்கும் புகழுக்குமானது அல்ல. அது சமூக பொறுப்புமிக்கது. சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் அவலங்களைக் கலைக்க அவன் தனது பேனாவை கூர் நிறைந்த ஆயுதமாக மாற்றும் பட்சத்தில் மானுடம் பயன்பெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அந்த வகையில் பார்ப்போமேயானால் நவீன காலங்களில் அனைவரும் பேச நினைக்கும் ஆனால், பேச மறுக்கும் பாலியல் கதைகளை எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் தான் இதுவரை அடைந்துள்ள புகழுக்கு களங்கம் நேருமோ என்ற எண்ணாமல் வரக்கூடிய தலை முறை பாதுகாப்பான தலைமுறையாக உருவாக வேண்டும் என்கிற உயரிய நோக்கோடு கிராமங்களில் கொட்டிக் கிடக்கும் பாலியல் கதைகளை அனைவருக்கும் புரியும் விதமாகவும் குறிப்பாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையிலும் எழுதி இருப்பது தான் இப்புத்தகத்தின் சிறப்பு.
வள்ளுவரின் காமத்துப்பாலை பருவத்திற்கு ஏற்றார் போல் பாட புத்தகத்தில் இடம் பெறச் செய்யாமல் பாவம் செய்த நாம் இப்புத்தகத்தையாவது வாசித்து அதில் இருக்கக்கூடிய கதைகளை ஆபாசம் என்று பாராமல் அதனின் இன்றைய தேவை குறித்து வாசித்து விவாதித்தால் நிர்பயா போன்ற எந்தப் பெண்ணுக்கும் பாலியல் துன்புறுத்தல் ஏற்படாது என்பதை நிதர்சனம் “தடுக்கப்படும் வெள்ளத்திற்கு தான் அழுத்தம் அதிகம்” என்று கூறுகிறது பௌதீக தத்துவம் அதேபோல தான் பேச மறுக்கும் எந்த ஒரு விஷயமும் வீரியம் கொள்ளுமே தவிர விஷமற்று போகாது. ஆதலால் பேச வேண்டியதை பேசுவோம் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவோம்.
நிறை அன்புடன்: வா ஸ்டாலின் என்று கட்டுரையை முடித்துவிட முடியும் ஆனால், அதற்கும் முன்பாக ஒன்றைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கிறேன்.
நமது பாடப் புத்தகத்தில் புறம்பற்றி பேசிய அளவிற்கு அகம் பற்றி பேச வகுப்பறைகளில் அவ்வளவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக எனக்கு தெரியவில்லை. ஏனெனில் நான் பத்தாவது படிக்கும் பொழுது எங்களுக்கு வழங்கப்பட்ட அறிவியல் புத்தகத்தை ஆர்வமுடன் பிரித்து அதில் உள்ள படங்களை பார்த்துக் கொண்டு வரும் பொழுது ஆண் பெண் இருவரின் இனப்பெருக்க மண்டல படத்தைப் பார்த்து சற்று நிமிடம் நான் ஆடித்தான் போனேன்.
என்னது இது? இப்படி ஒரு படத்தை எப்படி பாட புத்தகத்தில் வைத்தார்கள் என்ற ஐயம் எனக்கு எழவே செய்தது. ஆனால் எனக்கு வந்த அறிவியல் ஆசிரியர், இந்த வயதில் இதைப்பற்றி நீ தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டுள்ளதாக கூறி அதனை நாங்கள் புரிந்து கொள்ளும் விதமாக ரொம்ப திறம்பட நடத்தினார்.
அத்தகைய ஆசிரியர் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு கிடைத்தார்களா என்றால் மிஞ்சுவது சந்தேகம் மட்டுமே. மற்ற ஆசிரியர்கள் அதை 10 மதிப்பெண் வினாக்களில் கேட்க மாட்டார்கள் என்று விட்டுவிட்டார்கள். ஆனால் எங்கள் அறிவியல் ஆசிரியரோ இது பத்து மதிப்பெணுக்காண பாடம் அல்ல உன் பதின்ம வயதை பத்திரமாக கடந்து செல்ல உதவக்கூடிய பாடம். மேலும் அவர் அதோடு மட்டும் விட்டு விடாமல் தமிழில் ஆசிரியரிடம் கேட்டு அசுத்திணையை முழுவதுமாக உள்வாங்கி படியுங்கள்.
அது உங்களை அறம் சார்ந்த மனிதனாக உருவாக்கும் என்றார். அவர் சொல்லிவிட்டு போன கல்வி இப்பொழுது குறைவதால் தான் என்னவோ தற்போது ‘செம்பி, எதற்கும் துணிந்தவன், தெறி, சித்தா என இன்னும் பல தமிழ் சினிமாக்கள் பாலியல் சீண்டல்கள் குறித்து பேச வேண்டிய காலத்தின் கட்டாயத்தில் நாம் இருக்கிறோம்.
பருவம் வந்த பெண்களிடம் அவர்கள் அம்மாக்கள் பேசும் அளவிற்கு பருவத்திற்கு வந்த ஆண்களிடம் எத்தனை அப்பாக்கள் பேசுகிறார்கள்? அப்படி பேச வேண்டும் என்று “அப்பா” என்கிற தமிழ் திரைப்படம் நமக்கு சொல்லித் தரவில்லையா? இப்புத்தகம் படிப்பதால் மட்டுமே ஒருவன் மாறிவிடுவான் என்று நான் என்று சொல்லவில்லை. இப்புத்தகமும் மாற்றத்திற்கான தேவை என்று தான் நான் சொல்ல வந்தேன். அந்த வகையில் பேச வேண்டியதை தைரியமாக பேசுவோம் நல்ல சமூகத்தை உருவாக்குவோம்.