நாளை முதல் கொடி பறக்கும், இனி தமிழ்நாடு சிறக்கும் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சி தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியேற்றம் நிகழ்வு குறித்து அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, சரித்திரத்தின் புதிய திசையாகவும் புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால் அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும் இயற்கையும் நமக்கு அமைத்துக்கொடுத்திருக்கும் நாள்தான் 2024 ஆகஸ்ட் 22.
நம் தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய அடையாளமான கொடி அறிமுகமாகும் நாள். தமிழ்நாட்டின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப் போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை நாளை நம் தலைமை நிலையச் செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கழகக் கொடிப் பாடலைவெளியிட்டு கழகக் கொடியை ஏற்றி வைக்கிறோம் என்பதைப் பெருமகிழ்வுடன் அறிவிக்கிறேன்.
நாளை முதல் நாடெங்கும் நமது கொடி பறக்கும். தமிழ்நாடு இனி சிறக்கும். வெற்றி நிச்சயம்.” என தெரிவித்துள்ளார்.