வயநாடு பகுதியில் நடைபெறும் மீட்பு பணிகளில் ராணுவத்துடன் இஸ்ரோவும் இணைந்துள்ளது. நவீன தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீட்புப்பணிகளை மேற்ககொண்டு வருகிறது.
கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலையில் தொடர் கனமழை காரணமாக கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சூரல்மலை, முண்டக்கை மற்றும் மேப்பாடி ஆகிய 3 கிராமங்கள் தடயமே இல்லாத அளவுக்கு உருக்குலைந்து போயுள்ளது. இந்த பகுதிகளில் இன்று நான்காவது நாளாக மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
மண் சரிவு ஏற்பட்ட மலைப்பகுதியை RESAT SAR எனும் தொழில்நுட்பம் மூலம் புகைப்படம் எடுத்து இஸ்ரோ தகவல்களை வழங்கி வருகிறது. கடந்த முறை ஏற்பட்ட மண் சரிவை விட தற்போது ஏற்பட்டுள்ள மண் சரிவு பல மடங்கு பெரியது எனவும் சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவுக்கு மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் இஸ்ரோ தனது செயற்கைக்கோள் புகைப்படங்களை வெளியிட்டிருந்தது.
முண்டக்கை பகுதியில் நிலச்சரிவில் சிக்கியிருப்பவர்களை தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பம் மூலம் தேடும் பணியை ராணுவம் மேற்கொண்டுள்ளது. தெர்மல் ஸ்கேனர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 3 மீட்டர் ஆழம் வரை புதைந்திருக்கும் உடல்களை கண்டுபிடிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது.