பெயரிலேயே ரத்தக்கறையை உணர்த்தக்கூடிய சொல் ஒன்று இருக்குமானால் அது இனப்படுகொலை என்பதே. அதற்கு இன்று வரையிலான ஒரு எளிய வரையறை, கூட்டங்கூட்டமாக கொல்லப்பட்டு மக்கள் குவிக்கப்பட்ட படங்களும், அந்தப் படங்கள் சொல்லும் கதைகளும்தான். தமிழகத்தில் வாழ்வதால் இலங்கையின் புண்ணியத்தில்
Share:
பெயரிலேயே ரத்தக்கறையை உணர்த்தக்கூடிய சொல் ஒன்று இருக்குமானால் அது இனப்படுகொலை என்பதே. அதற்கு இன்று வரையிலான ஒரு எளிய வரையறை, கூட்டங்கூட்டமாக கொல்லப்பட்டு மக்கள் குவிக்கப்பட்ட படங்களும், அந்தப் படங்கள் சொல்லும் கதைகளும்தான்.
தமிழகத்தில் வாழ்வதால் இலங்கையின் புண்ணியத்தில் இந்த வார்த்தை ஒன்றும் நமக்கு அவ்வளவு அந்நியமானதல்ல .
ஆனால், இந்தத் தொடரில் நாம் எதிர்கொள்ளப்போகும் நிகழ்ச்சி ஒரு அகிம்சை இனப்படுகொலை. ஆம். இனப்படுகொலை தான். கத்தியின்றி ரத்தமின்றி காரணம் இருந்த காரணத்திற்காக மட்டும் நடத்தப்பட்ட இனப்படுகொலை…..அந்தக் கூட்டம் சத்தம் போடவும் சத்தின்றிச் செத்துப்போன கூட்டம். யுத்தமில்லாமல் மட்டுமல்ல. கொஞ்சங்கூடச் சத்தமில்லாமல் நடந்து முடிந்த மிகச் சாமர்த்தியமான இனப்படுகொலையும் கூட….தயாராகுங்கள்..
நேரடியாக உள்ளே நுழையும்முன் நமக்கு நாமே சில கேள்விகளை கேட்டு விடைதெளிந்து கொண்டு உள்ளே நுழையலாமா…
ஆதிமனிதன் காலந்தொடங்கி இன்று வரையில் மனிதன் பல்வேறு காரணங்களால் கொலைகளை நிகழ்த்தியுள்ளான். ஆனால் குறிப்பிட்ட சிலவற்றை மட்டும் இனப்படுகொலை என்ற சொல்லால் குறிப்பது ஏன்?
முதலில் இனப்படுகொலை என்ற சொல் எப்படித் தோன்றியது? என்று பார்ப்போம்.
முன்னொரு காலத்தில் ஆண்டவன் இந்த உலகைப்படைத்து மனிதன் கையில் கொடுத்தான். மனிதன் தன் குடும்பமாக வாழப் பழகிப்பின் கூட்டமாக வாழ்ந்தான். இப்படி ஆரம்பித்து பார்த்தோமானால் ஆனி போய் ஆடி போய் ஆவணி வந்துவிடும். வேறெங்கும் அலையாமல் நாம் தொடங்க வேண்டிய இடம் சரியாக கி.பி 1944.
1944 ம் ஆண்டு ரபேல் லெம்மின் ( Raphael lemkin) என்கிற ஆய்வாளர் தன் axis rule in occupied europe என்கிற நூலில் முதல் முறையாக இனப்படுகொலை என்பதற்கு இணையான ஆங்கிலச்சொல்லான genocide என்கிற சொல்லை பயன்படுத்துகிறார். முதன்முதலில் இந்த சொல்லைப் பயன்படுத்தியவரும் உருவாக்கியவரும் இவரே..
கிரேக்க சொல்லான genos (இனம்,இனக்குழு, கூட்டம்) மற்றும் லத்தீன் சொல்லான cide(அழிப்பு, ஒழிப்பு -mass killing) இரண்டையும் இணைத்து genocide என்று பயன்படுத்தினார். ரபேல் லெம்மின் தன் இனப்படுகொலை மாநாட்டை விட இந்த சொல்லுக்காகத்தான் பெரிதும் அறியப்படுகிறார்.
1944 ல் ரபேல் அறிமுகப்படுத்தும் முன்பு வரை இது ஓர் பெயரிடப்படாத குற்றமாகவே இருந்து வந்துள்ளது. இன்னும் சொல்வதானால் 1941 ல் இங்கிலாந்து அதிபர் வின்ஸ்டன் சர்ச்சில் , சோவியத் யூனியனில் நடத்தப்பட்ட ஜெர்மானிய படையெடுப்பு பற்றி பேசுகிறபோது பெயரில்லாத பெருங்குற்றம் (a crime without a name)என்றுதான் பேசுகிறார். அதுபோக, அழிப்பு,படுகொலை என்று பொருள்படுகிற விதமாக massacre, extermination என்றும், மனிதத்திற்கு எதிரான குற்றம் (crime against humanity) என்றும் மட்டுமே வழங்கப்பட்டது.
இனப்படுகொலை என்பது genos-cide கிரேக்க-லத்தீன் இணைப்பு வார்த்தையின் என்பதன் தமிழ்வடிவமே தவிர, genocide என்பதற்கான தமிழ் அர்த்தம் அல்ல.
இவ்வளவு பாடுபட்டு தனிச்சொல் கண்டுபிடிக்கப்பட்ட வேண்டிய காரணமென்ன? அதுவரை இல்லாத தேவை அப்போது ஏன் வந்தது?.
20ம் நூற்றாண்டின் முதல் அறிவிக்கப்பட்ட இனஒழிப்பு அர்மேனியர்களின் இனஒழிப்புதான். இன்றைய துருக்கி அன்று ஓட்டோமான் பேரரசாக இருந்தபோது, அர்மேனிய மக்கள் மீது 1915 ல் நடத்தப்பட்ட திட்டமிட்ட இனப்படுகொலை.
அதற்குப் பிறகுதான் உலகில் , கொத்துக்கொத்தாக மனித இனம் மடிவதை இன்னொரு மனித இனம் கண்கூடாகப் பார்க்கிறது. அதற்கு முந்தைய சரித்திர காலப் போர்கள் நடத்திய இன ஒழிப்புகளை எல்லாம் வீரமென்ற கூடை போட்டு மூடிவிட்டு விட்டு வேறுவேறு வேலைபார்க்க கிளம்பிவிட்டோம்.
ஆனால் இந்த படுகொலைக்கு பிறகுதான் இதனை ஒரு பெருங்குற்றமாக அறிவிக்கவேண்டும் , தண்டனை தர வேண்டும் என்கிற எண்ணம் பலருக்கும் வலுத்தது. அதுதான் அதன் முழுவலியையும் உணர்த்தும் விதமாக சொல்லொன்றைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறது. லெம்மின் இதற்கான முயற்சியில் இறங்குகிறார்.
ஐ நா – இனஅழிப்பு மாநாடு 1948
இதற்கான தனிப்பெயரிடும் முயற்சியில் பெரிதும் உதவிய மாதிரி வார்த்தைகள் tyrannicide( கொடுங்கோலனை கொல்லுதல் ), homocide(ஓரினர்களை அழித்தல் ), infanticide(சிசுக்கொலை) உள்ளிட்டவைதான் என்கிறார் லெம்மின்.[ Axis rule in occupied Europe – Raphael lemkin-1944- Chapter XI]
அதற்கு முன்பு இஷ்டத்திற்கு ஒரு பெயர் வைத்திருந்த நிலைதான்.
Denationalisation என்கிற ஒன்றுதான் பொதுச்சொல் அல்லது எந்த நாடு அடிமைப்படுத்துகிறதோ அந்த நாட்டுமயமாக்கல் என்று பொதுப்பிரயோகம் இருந்துள்ளது. அதாவது Germanization, Italianization என்று.
ஆனால் இன ஒழிப்புக்கான இரண்டு படிநிலைகளின் தாக்கத்தையும் இந்த சொற்கள் முழுமையாக விளக்குவனவாக இல்லை.
“அரைகுறையாய் புரிவதைவிட அறியாமையே மேல்” என்பார்கள். இந்த வார்த்தைகள் அப்படித்தான் ஒன்று முதல் படிநிலையை மட்டும் உணர்த்துகிறது. மற்றொன்று இரண்டாம் படிநிலையை மட்டும் உணர்த்துகிறது.
அதென்ன படிநிலைகள்.. ஆம் இன ஒழிப்பு , இன அழிப்பு, காலனியாக்கல்,நாகரிக சிதைவு என எந்த பெயரில் அழைத்தாலும் சரி. இவற்றுக்கான நிறுவலில் முக்கியமானவை இரண்டே படிகள் தான்.
அவை அடுத்த கட்டுரையில்………
– தொடரும்
Foot notes:
-Axis rule in occupied Europe – Raphael lemkin-1944- Chapter XI
-Genocide convention – article II
-Genocide A modern crime by Raphael lekin -1945 -http://lemkinhouse.org/about-us/life-of-raphael-lemkin/ -https://artsandculture.google.com/exhibit/AQJNMxJ8