பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் எம்பி, செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில்,
“கூடங்குளம் அணுமின் நிலையத்தின் மிக முக்கியமான மற்றும் சென்சிடிவ்வான தரவுகள் கசிந்து, ‘டார்க் வெப்’ இணையதளத்தில் பரவி வருவது அதிர்ச்சியளிக்கிறது. இது மிகவும் ஆபத்தான, கடுமையான தேசியப் பாதுகாப்பு மீறலாகும். நாட்டின் புதிய தரவுப் பாதுகாப்புச் சட்டம் எங்கே போனது என்றே தெரியவில்லை.
அரசாங்கத்திடம் இருக்க வேண்டிய முக்கியத் துறைகளை ரிலையன்ஸ் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களின் தனியார் மேலாண்மையிடம் ஒப்படைக்கும்போதே இந்த ஆபத்து தொடங்விவிட்டது. மோடி அரசின் இத்தகைய மெத்தனப் போக்கு இந்தியாவின் பாதுகாப்பிற்கே அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இது குறித்து விரிவான விசாரணை நடத்தக் கோரி பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளேன். வரும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரிலும் இந்த விவகாரத்தை காமராஜர் மண்ணிலிருந்து ஓங்கி ஒலிப்பேன்.”
“மத்திய அரசு இஸ்ரோ உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயமாக்கத் துடிப்பதால், நாட்டின் பாதுகாப்புப் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இஸ்ரோ போன்ற உலகப் புகழ்பெற்ற விண்வெளி ஆராய்ச்சி அமைப்பிலிருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட தகுதிவாய்ந்த விஞ்ஞானிகள் வெளியேறி வருவது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. நேரடியாகப் பிரதமரின் கட்டுப்பாட்டில் வரும் இந்தத் துறை குறித்து, நாடாளுமன்றத்தில் கேபினட் அமைச்சரும் பிரதமரும் உரிய விளக்கமளிக்க வேண்டும்.”
“மேகதாது அணைத் திட்டம் என்பது தமிழ்நாட்டின் ஜீவாதார உரிமையைப் பாதித்து, தமிழகத்திற்கு வர வேண்டிய தண்ணீரைத் தடுத்து நிறுத்தக்கூடிய திட்டமாகும். கர்நாடகாவில் உள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து அரசியல்வாதிகளும் அணை கட்டுவோம் என்றுதான் பேசுவார்கள். ஆனால், நாம் அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ‘டீம் தமிழ்நாடு’ என்ற ஒற்றைக் குரலில் டெல்லிக்கு நம் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்.
அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறியுள்ள யோசனையை வரவேற்கிறேன். தமிழக முதலமைச்சர் அவர்களின் தலைமையில், நீர்வளத்துறை அமைச்சர் மற்றும் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு குழுவை அமைத்து, டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரை நேரில் சந்தித்து நம் எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனையை ஏற்றுத் திருத்தங்களுடன் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது நல்ல பண்பான முன்னெடுப்பு.”
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்தும், ‘முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலின் தங்கம், தற்போதைய முதலமைச்சர் விஜய் இரும்பு’ என்று மல்லை சத்யா விமர்சித்துள்ளது குறித்தும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
“தமிழக மக்கள் வரிசையில் நின்று, தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றி 1 கோடியே 70 லட்சம் வாக்குகளைப் பதிவு செய்து ஒரு புதிய அரசைத் தேர்ந்தெடுத்து, தங்களது தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். அதை விடுத்து, ‘நான் தங்கம், நான் வைரம், நான் வைடூரியம்’ என்று இன்னும் பழைய நினைவுகளிலேயே பேசிக் கொண்டிருப்பது ஒட்டுமொத்த மக்களின் தீர்ப்பை அவமானப்படுத்தும் செயலாகும். மல்லை சத்யாவுக்கு எவ்வளவு விசுவாசம் இருந்தாலும், மக்களின் தீர்ப்பை அவர் மதித்து நடக்க பழக வேண்டும்” என்றார்.
“நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு போராட்டமும் நடத்தக் கூடாது, கேள்விகள் கேட்கக் கூடாது என பள்ளி மாணவர்களைப் போலக் கட்டுப்படுத்த மோடி அரசு முயல்கிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரானது. மக்கள் எங்களை மக்களின் பிரச்சினைகளைப் பேசத்தான் டெல்லிக்கு அனுப்பியுள்ளனர். நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் அஞ்சு குழந்தைகள் இறந்து போயுள்ளனர்; இதுபற்றி விவாதிக்கக் கல்வி அமைச்சருக்கு மனமில்லை. கூடங்குளம், இஸ்ரோ, நீட் போன்ற மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கவில்லை என்றால், நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கடுமையான போராட்டங்களை முன்னெடுப்போம்.”
‘தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திற்குள் 5-க்கும் மேற்பட்ட லாகப் மரணங்கள் (விசாரணைக் கைதிகள் மரணம்) நடந்துள்ளதே, அதுபற்றி விஜய் ஏன் மௌனம் காக்கிறார்?’ என்ற மத்திய அமைச்சர் எல்.முருகனின் விமர்சனத்திற்குப் பதிலளித்த அவர்:
“மத்திய இணையமைச்சராக இருக்கும் எல்.முருகன், தமிழ்நாட்டில் நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட 5 ஏழைக் குழந்தைகளின் மரணத்திற்கு இதுவரை வாயே திறக்கவில்லை. பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு இவ்வளவு சுயநலமாகப் பேசக் கூடாது. கோயம்புத்தூர், சேலம், தர்மபுரி என நம் வீட்டுப் பிள்ளைகள் இறந்து கிடக்கும்போது, அதற்குக் காரணமான நீட் தேர்வை ஒழிக்க வழியில்லாத மோடி அரசின் அமைச்சர் அவர்.
அதே நேரத்தில், தமிழகத்தில் நடக்கும் லாகப் மரணங்கள் என்பவை ஒட்டுமொத்தக் காவல்துறைக்கும் அரசுக்கும் பெரும் களங்கத்தை ஏற்படுத்துபவை. இது ஆங்கிலேயர் காலத்திலிருந்தே தொடரும் ஒரு கட்டமைப்புப் பிரச்சினை. சில அதிகாரிகளின் தவறான அணுகுமுறையால் ஒட்டுமொத்தத் துறையும் பாதிக்கப்படுகிறது. காவல்துறை உடனடியாகச் சீரமைக்கப்பட வேண்டும். எல்.முருகன் அவர்கள் முதலில் டெல்லியால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்விற்குப் பதில் சொல்லிவிட்டு, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் இல்லங்களுக்குச் சென்று ஆறுதல் கூறட்டும்” என்று எம்பி மாணிக்கம் தாகூர் தெரிவித்தார்.