தி.மு.க ஆட்சியில் பாட்டிலுக்கு பத்து ரூபாய் பார்ட்டிஃபன்ட்டாக செல்வதாக தெரிவித்தீர்கள் தற்போது பாட்டிலுக்கு வாங்கப்படும் 10 ரூபாய் யாருக்கு செல்கிறது என்ற கேள்விக்கு , முன்பை போல இல்லை ஐந்து ரூபாய் மூன்று ரூபாயாக குறைந்துவிட்டது என மழுப்பலாக மதுவிலக்கு துறை அமைச்சர் விக்னேஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ்,போதையில்லா தமிழகம் உருவாக்குவது அரசின் முக்கிய இலக்காகும். அதற்காக காவல்துறையுடன் இணைந்து தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த மே 10 முதல் ஜூலை 20 வரை 2,892 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 3,845 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், 3,579 கிலோ கஞ்சா, 27 கிலோ பிற போதைப்பொருட்கள் மற்றும் 10,02,379 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஹெராயின், மெத்தாம்பெட்டமைன், கஞ்சா சாக்லேட் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. அடுத்த தலைமுறையை ஆரோக்கியமான தலைமுறையாக உருவாக்க அரசு உறுதியுடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.
டாஸ்மாக் கடைகளில் கூடுதல் தொகை வசூல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், “முன்பை விட தற்போது அந்த நடைமுறை பல இடங்களில் குறைந்துள்ளது.
மீதமுள்ள முறைகேடுகளையும் முழுமையாக ஒழிக்கும் நோக்கில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வரும் 27-ஆம் தேதிக்குப் பிறகு புதிய நடவடிக்கைகள் அறிவிக்கப்படும்” என்றார்.
நட்சத்திர ஹோட்டல்களில் மதுக்கூடங்களுக்கு நள்ளிரவு 12 மணி வரை அனுமதி வழங்கப்பட்டிருப்பது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு எடுக்கப்பட்ட முடிவு என்றும் விளக்கமளித்தார்.
டாஸ்மாக் செயல்பாடுகளை மேம்படுத்துவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் நடைபெற்றதாகவும், ரெஸ்ட்ரோ பார் தொடர்பான தகவல்கள் மட்டுமே வெளிவந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பாட்டில்களுக்கு மாற்றாக பேக் மூலம் மதுபானம் விற்பனை செய்வது குறித்து குழந்தைகளை கவரும் வகையில் இருக்கக் கூடாது என்ற கருத்துகள் முன்வைக்கப்பட்டதால், அதற்கு மாற்று வழிகள் பரிசீலனையில் உள்ளதாகவும் கூறினார்.
மேலும், மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவித்த அமைச்சர், வெள்ளலூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையப் பணிகள் விரைவில் நிறைவடையும் என்றும், வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பிரச்சினைக்கும் அடுத்த ஆண்டுக்குள் நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்தார்.