இந்த தேர்தலில் நாம் தோற்று இருக்கக்கூடாது நம்முடைய அரசாங்கம் வராமல் போயிருக்கக்கூடாது நாங்கள் வெற்றி பெற்றாலும் தலைவர் மு க ஸ்டாலின் தோல்வி அடைந்தார் இது எங்களுக்கு பெரிய மனக்கஷ்டமாக இருக்கிறது, அருப்புக்கோட்டையில் சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்த தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் பேச்சு
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாழ்வாங்கி, பெரிய நாயகி புரம், சேதுராஜபுரம், ராமநாயக்கன்பட்டி, ராமலிங்க புரம், சிதம்பராபுரம், செட்டி குறிச்சி ஆகிய பகுதிகளில் தன்னை வெற்றிபெறச் செய்த தொகுதி மக்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
அப்போது இந்த நிகழ்ச்சியில் பேசிய கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்,
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நீங்கள் எனக்காகவும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் அவர்களுக்காகவும் உதய சூரியன் சின்னத்திற்கு வாக்களித்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஐந்து ஆண்டுகள் ஒரு நல்ல ஆட்சியை நடத்தினோம் எல்லோருக்கும் உபயோகமான ஒரு ஆட்சியாக அது இருந்தது. குறிப்பாக தாய்மார்களுக்கான ஆட்சியை நாம் நடத்தினோம்.
ஆனால் இன்றைக்கு நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். என்னைப் பொருத்தவரை நான் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தொடர்ந்து உங்களுடன் நல்ல முறையில் பணியாற்றுகிறேன். எனக்கு உள்ள அனுபவம் அதிகாரிகள் உடனான தொடர்பு இதன் மூலம் நமக்கு நம் ஊருக்கு தேவையான திட்டங்களை பெற்று தருவேன். அரசாங்கத்தின் மூலம் கிடைக்கும் அனைத்து சலுகைகளையும் வாங்கி கொடுப்பவனாக நான் இருப்பேன். மத்திய அரசாங்கம் 100 நாள் வேலைக்கு அனுமதி வழங்கி உள்ளது.
தமிழ்நாடு அரசாங்கம் நிதி ஒதுக்க வேண்டும் பொதுவாக 100 ரூபாய் சம்பளம் என்றால் 60 ரூபாய் மத்திய அரசும் 40 ரூபாய் தமிழ்நாடு அரசும் வழங்க வேண்டும். தற்போது உள்ள தமிழ்நாடு அரசாங்கம் இன்னும் இது குறித்து முடிவு எடுக்காமல் உள்ளனர். அவர்கள் இது குறித்து முடிவெடுக்கும் போது நம்முடைய பகுதிக்கு மாவட்ட ஆட்சியரிடம் பேசி அதிக நிதி ஒதுக்க ஏற்பாடு செய்து அதிக நாட்கள் வேலை வழங்க தேவையான பணிகளை நான் செய்து தருவேன். 100 நாள் வேலை ஆரம்பிக்கும் போது நானே நேராக வந்துவிடுவேன்.
பல இடங்களில் கருவிழி பதிவு சரியாக இல்லை என்பதால் பணி வழங்க மறுக்கிறார்கள். அதையும் மாவட்ட ஆட்சியரிடம் பேசி அனைவருக்கும் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்வேன். நான் 50 ஆண்டுகாலம் உங்களுடன் இருக்கிறேன். இன்னும் உங்களுடன் பயணிப்பேன் உங்கள் நல்லது கெட்டதுகளில் உங்களுடன் இருப்போம். இந்த தேர்தலில் நாம் தோற்று இருக்கக்கூடாது நம்முடைய அரசாங்கம் வராமல் போயிருக்கக்கூடாது நாங்கள் வெற்றி பெற்றாலும் தலைவர் மு க ஸ்டாலின் தோல்வி அடைந்தார் இது எங்களுக்கு பெரிய மனக்கஷ்டமாக இருக்கிறது.
இந்த கஷ்டம் இருந்தாலும் நாங்கள் உங்களுடன் இருப்பவர்கள் நீங்கள் எங்களை நம்பி வாக்களித்துள்ளீர்கள். வாக்களித்த அனைவருக்கும் நன்றி என பேசினார்.