பீகார் தேர்தலில் வாக்காளர் பட்டியல் திருத்தம் என்பது மிகப்பெரிய தவறு… அவர்கள் செய்த அனைத்து வேலைகளும் வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது.. சிங்கம்புணரியில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் மாநிலங்களவை உறுப்பினருமான ப. சிதம்பரம் பேட்டி!!!
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அரசு தலைமை மருத்துவமனையில் மாநிலங்களவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 65 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட இரத்த சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து வைத்த பின் ப. சிதம்பரம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்…
மகாராஷ்டிராவில் போலி வாக்காளர்களை சேர்த்தார்கள்… இனிமேல் அது போன்ற தில்லுமுல்லுகளை செய்ய முடியாது என்பதால் அதே பயனை பீகாரிலும் அடைவதற்காக வாக்காளர்களை நீக்குகிறார்கள்…
தேர்தலுக்கு 25 நாட்களுக்கு முன்பு படிவங்களை கொடுத்து பூர்த்தி செய்ய சொல்லுகிறார்கள் இதுபோன்று பல மோசமான கதைகளை கேட்க வேண்டியதாக உள்ளது…
இன்றைய தினம் இந்து பத்திரிக்கையில் வெளியிட்டிருக்கும் ஒரு செய்தியில் பீகாரில் தொலைபேசி வழியாக நானூறு வாக்காளர்களிடம் எடுக்கப்பட்ட ஒரு சர்வேயில் ஒருவர் கூட எங்களுக்கு படிவம் இன்னும் கிடைக்கவில்லை என்று தெரிவித்து இருக்கிறார்கள்..ஆனால் தேர்தல் ஆணையமோ 98 சதவீதம் படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு விட்டது எனவும் இன்னும் ஒரு லட்சத்திற்கும் குறைவான விண்ணப்பங்களே வர வேண்டி இருக்கிறது என்றும் சொல்லுகிறார்கள் இது மிகப்பெரிய தவறு மிகப் பெரிய மோசடி…
இதில் என்ன தவறு இருக்கிறது? இது வழக்கமான நடைமுறை தானே என்று தேர்தல் ஆணையம் சொல்லுகிறதே? என்ற கேள்விக்கு பதில் அளித்த ப.சிதம்பரம் குடியேற்றம் நிரந்தர குடியேற்றம் என்று சொல்கிறார்கள் அந்த மாநில தொழிலாளர்கள் வேலை வாய்ப்பிற்காக இந்தியாவிற்கு உள்ளே பல மாநிலங்களுக்கு செல்கிறார்கள் அவர்கள் வாக்களிக்க தங்களது சொந்த மாநிலத்திற்கு திரும்பத் தானே போகிறார்கள்? அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நிரந்தரமாக தங்கி விட்டால் நிரந்தர குடியேற்றம் என்று சொல்லலாம் சொந்த நாட்டிற்குள்ளேயே வேலை வாய்ப்புக்காக வெளி மாநிலங்களுக்கு சென்றால் அதை எப்படி நிரந்தர குடியேற்றம் என்று சொல்ல முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.
இறந்த வாக்காளர்களை பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்… இறந்து போன வாக்காளர்களை ஏன் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் வாக்காளர் பட்டியலில் அவர்களது பெயருக்கு அருகிலேயே இறந்தவர் என்று குறிப்பிட்டு விட்டால் அவரது பெயரில் வேறு ஒருவர் வாக்கு செலுத்த வந்தால் எளிதில் கண்டறிந்து விடலாம்.. நாடாளுமன்ற தேர்தலில் அந்த நடைமுறை தானே இருந்தது நாடாளுமன்ற தேர்தலுக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும் இடைப்பட்ட 12 மாத காலத்திலா 22 லட்சம் பேர் இறந்து போய்விட்டார்கள்? என்றார்.