திமுக தொழில்நுட்ப அணி கூட்டத்தில் கலந்துகொள்ள திருநெல்வேலி வந்திருந்த தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா, செய்தியாளர்களிடம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி குறித்து விரிவாகப் பேசினார்.
வரலாற்றில் இல்லாத அளவிற்கு தமிழகத்தில் மகத்தான தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும், முதல்வர் மு.க. ஸ்டாலின் இந்த வளர்ச்சியை உறுதி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத்திற்காக முதன்முதலில் அறிவிக்கப்பட்ட சிப்காட் இடத்தைத் தேர்வு செய்யும் பணியை நேற்று பார்வையிட்டதாக அமைச்சர் கூறினார். மேலும், திருநெல்வேலி கங்கைகொண்டான் சிப்காட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் வரவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் டைடல் பார்க்கள் மூலமாக புதிய நியோ டைடல் பார்க்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தமிழக இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கும் முயற்சியில் முதல்வர் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். தமிழகத்தின் முதல் நியோ டைடல் பார்க் அமைக்கும் பணி கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தொழிற்சாலைகளை உருவாக்க முடியாததால், சுற்றுலா சார்ந்த தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சப்ளை செயின் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் செயல்பாடுகள் தமிழகத்தில் தாவோஸ் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வு குறித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர், “அவரிடமே கேளுங்கள்” என்று கூறிச் சென்றார்.