பாரதிராஜா மறைவு: தமிழ் சினிமாவின் ஒரு யுகம் நிறைவு
- June 10, 2026
- 0
தமிழ் திரைமொழியின் திசைவழியை தீர்மானித்த இயக்குநர் இதயம், இனி இளைப்பாறட்டும்... ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட மொழியை மாற்றிய அவர், என்றும் நிலைப்பார்.
கிராமிய வாழ்க்கையை தமிழ் சினிமாவின் மையமாக மாற்றியவர் இயக்குநர் இமயம் பாரதிராஜா. ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட மொழியை மாற்றிய அவரது படைப்புகள் தலைமுறைகளை கடந்தும் நினைவில் நிற்பவை…
1977 ஆம் ஆண்டு வெளியான “16 வயதினிலே” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கிய பாரதிராஜா, நகர மையக் கதைகளில் இருந்து கேமராவை கிராமங்களுக்கு கொண்டு சென்றவர். மண்ணின் மணம், மனித உறவுகள், காதல், சாதி, சமூகச் சிக்கல்கள் போன்றவற்றை இயல்பான காட்சியமைப்புடன் திரையில் பதிவு செய்து தனித்துவமான திரைப்பட மொழியை உருவாக்கினார்.
“கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “அலைகள் ஓய்வதில்லை”, “முதல் மரியாதை”, “கிழக்கு சீமையிலே”, “கருத்தம்மா” உள்ளிட்ட பல படங்கள் அவரது கலைப் பயணத்தின் மைல்கற்களாக அமைந்தன. பல தலைமுறை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் அவருக்கே உரியது.
தமிழ் சினிமாவின் முகவரியை மாற்றிய இயக்குநர்களில் முதன்மையானவராக கருதப்படும் இயக்குநர் இமயம் பாரதிராஜா, 84 வயதில் காலமானார். வயது மூப்புச் சார்ந்த உடல்நலக் குறைபாடுகளால் அவதிப்பட்டு வந்த அவர், சென்னை இல்லத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனித்த அடையாளத்தைப் பெற்ற அவர், தமிழ் திரையுலகில் அழியாத தடம் பதித்துள்ளார். அவரது மறைவு தமிழ் சினிமாவிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாக பார்க்கப்படுகிறது.
தமிழ் திரைமொழியின் திசைவழியை தீர்மானித்த இயக்குநர் இதயம், இனி இளைப்பாறட்டும்…