ஆசிரியர் தேர்வுகள் இந்தியா தலையங்கம்

தலையங்கம்: காஷ்மீரில் உண்மை திணறுகிறது… கொஞ்சம் பொறுங்கள்

  • April 23, 2025
  • 0

இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பயங்கரவாதம் என்பது ஆயுதங்கள் தாங்கிய தாக்குதல்கள் மட்டுமல்ல. அரைகுறைச் செய்திகளால் பதற்றத்தை உருவாக்குவதும் பயங்கரவாதமே!

Share:
தலையங்கம்: காஷ்மீரில் உண்மை திணறுகிறது… கொஞ்சம் பொறுங்கள்

அன்புள்ள நண்பர்களே!

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் நடந்த தாக்குதல் சம்பவத்தில் பலியானவர்களுக்காக கனத்த மனதுடன் அஞ்சலி செலுத்துகிறோம். அதேசமயம் அன்புள்ள ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைதள நாயகர்(!)களுக்கும் கோரிக்கை ஒன்றை பென்பாய்ண்ட் வைக்க விரும்புகிறது.

இந்தியா இன்றிருக்கும் சூழலில் உங்கள் பரபரப்பு எந்த எல்லையில் இருக்கும் என்பதை நன்கறிவேன். அத்துடன், 24 மணிநேர செய்தி தொலைக்காட்சிகளின் இன்றைய நெருக்கடியையும் எங்களால் புரிந்து கொள்ள முடிகிறது.

தொழில்முறைப் போட்டி, வாரந்திர, மாதாந்திர கணக்கீட்டுப் பட்டியல்களின் தரவரிசை, நிர்வாகமும் ஆசிரியர் குழுவும் கொடுக்கும் அழுத்தம் என ஊடகங்களின் உச்சகட்ட நெருக்கடியை புரிந்து கொள்ள முடிகிறது. கடுமையான அழுத்தங்களுக்கு உட்பட்டுத்தான் பணியாற்றுகிறீர்கள். அதற்காக, நாம் மன்னிக்கப்பட மாட்டோம் என்பதை மட்டும் புரிந்து கொள்ள வேண்டும்.

எதைக் கடந்தும் தாம் அறத்தின் பக்கம் நிற்பதாய் ஒவ்வொரு ஊடக நிறுவனமும் நினைக்கும். நாம் செய்வது சரிதான் (தவறு அல்ல) என்ற எண்ணமோ அல்லது முதலில் முந்தித் தந்தோம் என்ற அற்பமகிழ்ச்சியோ இருக்கும்.

தொடர்ச்சியாக மக்களுக்கு செய்திகளைக் கொண்டு செல்லும் உங்கள் பணி இல்லாவிட்டால், உள்ளபடியே செய்திகள் வந்து சேராதுதான். இன்னும் சுற்றுலா சென்ற எத்தனை பயணிகளின் குடும்பங்கள் பதறிக்கொண்டுள்ளனரோ தெரியாது. உங்கள் தொடர் சேவை அவசியம்.

ஆனால், குறைந்தபட்ச எழுத்தறத்தை கைவிடலாமா?

கண் முன் தன் கணவன் சுடப்பட்டு வீழ்ந்திருக்கிறார். துயருற்று நிற்கும் அந்தக் குடும்பத்தின் கதையை செய்தியாக்கும்போது, “ஒளிமயமான எதிர்காலம்” என்று தலைப்பிட்டு விளையாடுவது என்ன மாதிரியான மனநிலையோ?

ஒருபக்கம் மதவாதப் பிரச்னையாக இது மாற்றப்பட்டுவிடுமோ என்ற மனவேதனை பென்பாய்ண்ட்க்கு உள்ளது. “ பெயரைக் கேட்டார்கள்”, “மதத்தை கேட்டார்கள்”, “சுன்னத் சோதனை செய்தார்கள்” என்று ஆதாரமற்ற போலிச்செய்திகளை அடிப்ப்டையாக வைத்து உள்ளூர் மதவாதிகள் வெறுப்பரசியலைத் தொடங்கிவிட்டார்கள்.
இஸ்லாமியர்களை ஏறக்குறைய குற்றவாளிக் கூண்டில் ஏற்றும் மெல்லிய உளவியல் பயங்கரவாதம் இந்தியா முழுக்க இன்று அரங்கேற்றப்படலாம்.

மறுபக்கம், பாதுகாப்பு அச்சுறுத்தல் விவகாரத்தில் இஷடத்துக்கு கருத்து சொல்லும் அரைகுரை சோஷியல் மீடியா நிபுணர்கள்.

இதற்கிடையில் “ஏன் இந்த சம்பவம்?” என்ற கேள்விக்கான உண்மை இப்போது வரையிலும் கிடைக்கவில்லை. அதற்குள்ளாகவே ஆயிரம் கருத்துகள். இந்தச் செய்தி வந்ததும், இதுகுறித்து அடிக்கடி அப்டேட்ட் செய்யும் செய்திகள் வெளியிடக் கூடாது என்று முடிவெடுத்தது பென்பாய்ண்ட். உடனடியாக செய்திகள், கதைகள் எழுதுவதற்கு நம்மிடம் இடமில்லை. சொல்லப்போனால், உண்மைக்கான இதழியலில் பொறுமையும் நிதானமும் எப்போதும் அவசியம் என்பது நம் நம்பிக்கை. இந்தத் தலையங்கம் எழுதப்படும் நேரம் வரை எந்த அமைப்பும் காஷ்மீர் பஹல்காம் தாக்குதலுக்கு பொறுப்பேற்கவில்லை.

சம்பவ இடத்திலிருந்து பேசுவோர் சொல்லும் செய்திகள் ஒன்றுகூட இந்த கூறுகளுடன் பொருந்தவில்லை. ஆனால், அவசர அவசரமாக கருத்துச் சொல்ல வேண்டிய அவசியம் வந்துவிட்டதாக சமூக வலைதளங்கள் உணர்கின்றன. சமூக வலைதளங்களில் ஒரு பொய்யான கருத்து பரவுவதற்கு பெரிய கால இடைவெளியெல்லாம் தேவையில்லை. ஆனால், அது பொய்யென்று நிரூபணமாகிவிட்டால், அதுகுறித்த ‘உண்மைத் தெளிவு’ அவர்களைச் சென்று சேர்வது குதிரைக்கொம்பு.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நாட்டுக்குள் பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவாகும்படியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. அவ்வளவுதான் செய்தி. மற்றவையெல்லாம் அதைச் சுற்றியிருக்கும் கதைகள் மட்டுமே. இனி அந்தப் பாதுகாப்பு அச்சுறுத்தலை போக்கும்படி, உள்துறை நடவடிக்கைகள் இருக்க வேண்டும். ஆனால் நடந்தவை அப்படியா இருந்தன?

வரையப்பட்ட உத்தேச ஓவியங்களை வெளியிடுகிறது அரசு. அடுத்த சில மணிகளில் உண்மையான புகைப்படம் என்ற பெயரில் குழு புகைப்படம் ஒன்றையும் வெளியிடுகிறது அரசு. உண்மையில், அரசு இதை வெளியிடலாமா? அரசே வெளியிட்டாலும் இந்தச் சூழலில் ஊடகங்கள் வெளியிடலாமா?

இதுபோன்ற அசாதாரணச் சூழல்களில் பயங்கரவாதம் என்பது ஆயுதங்கள் தாங்கிய தாக்குதல்கள் மட்டுமல்ல. அரைகுறைச் செய்திகளால் பதற்றத்தை உருவாக்குவதும் பயங்கரவாதமே!

கொஞ்சம் பொறுங்கள்… உங்கள் அவசர கருத்துகளுக்கு மத்தியில் உண்மை திணறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *