அரசியல் இந்தியா தமிழ்நாடு

நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த சம்மன்… நெல்லை விரையும் தாம்பரம் போலீஸ்

  • April 24, 2024
  • 0

கடந்த 22-ம் தேதி, நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது வழக்கறிஞர் ஜெயிக்கர் டேவிட் பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தார்.

Share:
நயினார் நாகேந்திரனுக்கு அடுத்த சம்மன்… நெல்லை விரையும் தாம்பரம் போலீஸ்

சென்னையில் ரூ.4 கோடி பணம் சிக்கிய விவகாரத்தில் நயினார் நாகேந்திரனின் உறவினரிடன் நடத்தப்பட்ட விசாரணையில் சில தகவல்கள் வெளியாகியுள்ளதால் அவருக்கு 2-வது முறையாக சம்மன் அனுப்ப காவல்துறை முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, கடந்த 6-ம் தேதி தாம்பரம் ரயில் நிலையத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனையிட்டதில், ரயில் மூலம் ரூ. 4 கோடி பணத்தை எடுத்துச் சென்ற 3 பேரை கைது செய்து, பணத்தையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம் என, வாக்குமூலம் அளித்தனர்.

இதன் அடிப்படையில், தாம்பரம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்ட நிலையில், கடந்த 22-ம் தேதி, தாம்பரம் காவல் நிலையத்தில் ஆஜராக நயினார் நாகேந்திரனுக்கு சம்மன் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரது வழக்கறிஞர் ஜெயிக்கர் டேவிட் ஆஜராகி பத்து நாட்கள் கால அவகாசம் கேட்டு கடிதம் கொடுத்தார்.

இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு நாளை மீண்டும் சம்மன் அளிக்க தாம்பரம் போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் உணவகம் நடத்தி வரும் நயினார் நாகேந்திரனின் உறவினர் முருகனிடன் காவல்துறையினர் விசாரித்தனர். அதில், தனக்கும் அந்த பணத்திற்கும் எந்த விதமான சம்பந்தமும் இல்லை என்றும், நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன், மூன்று நபர்கள் பணம் எடுத்து வருவதாகவும், அவர்களுக்கு இரண்டு நபர்களை பாதுகாப்புக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டதின் அடிப்படையில், தன்னிடம் பணி செய்யும் ஜெய்சங்கர் மற்றும் ஆசைத்தம்பி ஆகியோரை ரயில் நிலையத்திற்கு தான் அனுப்பியதாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து, ஏற்கனவே கால அவகாசம் கேட்ட நயினார் நாகேந்திரனுக்கு, 10 நாட்கள் கழித்து ஒரு தேதியை நியமித்து, அந்த தேதியில் நயினார் நாகேந்திரன் மற்றும் அவரது உதவியாளர் மணிகண்டன் இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என தாம்பரம் போலீசார் சம்மன் அளிக்க உள்ளனர்.