கலாஷேத்ராவில் மீண்டும் பாலியல் புகார்… பேராசிரியர் கைது! அதிர்ச்சியில் மாணவிகள்
- April 25, 2024
- 0
மீண்டும் மீண்டும் இதுபோன்ற வழக்குகள் வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு முறைமைப்படுத்த வேண்டியது அவசியம்.
மீண்டும் மீண்டும் இதுபோன்ற வழக்குகள் வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு முறைமைப்படுத்த வேண்டியது அவசியம்.
சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா நடனப்பள்ளியில் 15 ஆண்டுகளுக்கு முன்னர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் அளித்த புகாரின் அடிப்படையில் முன்னாள் நடன ஆசிரியர் ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். என்ன நடக்கிறது கலாக்ஷேத்ராவில்?
காவல்துறைக்கு டிஜிட்டல் புகார்
திருவான்மியூரில் உள்ள ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரியை மத்திய அரசின் கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வருகிறது. இங்கு சென்னை மட்டுமின்றி, பல ஊர்களில் இருந்து வரும் மாணவிகள் தங்கி, பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்தக் கல்லூரியில் 1995 – 2007 ஆண்டு காலகட்டத்தில் பயின்ற மாணவிகள் இருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் இரு தினங்களுக்கு முன் புகார் ஒன்றை அளித்தனர். அதில், அக்கல்லூரியில் பணியாற்றிய ஸ்ரீஜித் கிருஷ்ணன் என்ற நடன பேராசிரியர், தங்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் குற்றம்சாட்டினர்.
மாணவிகளின் புகாரின் அடிப்படையில், நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், அவர்களிடம் காணொலிக் காட்சி மூலம் விசாரணை மேற்கொண்டனர். அதில், 15 ஆண்டுகளுக்கு முன் தங்களுக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை ஸ்ரீஜித் அளித்தார் என அம்மாணவிகள் தெரிவித்தனர். இதையடுத்து, காவல்துறையினர் விசாரணையைத் துரிதப்படுத்தியதில், ஸ்ரீஜித் தற்போது அந்தக் கல்லூரியில் பணியாற்றவில்லை என்றும், அடையாறு பகுதியில் தனியாக நடனப்பள்ளி நடத்தி வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து வழக்குப் பதிவு செய்த காவலர்கள், அவரை ஏப்ரல் 22-ம் தேதி கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
ஏற்கனவே கடந்தாண்டு இதே கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஹரி பத்மன் என்பவர் உட்பட 4 பேராசிரியர்களை, மாணவிகளின் கடும் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை கைது செய்துள்ள நிலையில், தற்போது அதே போன்றதொரு சம்பவம் கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
தற்போதைய நிலை என்ன?
கலையுணர்வை கனவில் சுமந்துவரும் மாணவிகளுக்கு நடைபெறும் இதுபோன்ற பாலியல் சீண்டல்கள் அவ்வளவு எளிதில் கடந்துவிடக்கூடியது அல்ல. கடந்த ஆண்டும் இதே போல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் இதே கல்லுரியில் இருந்து வந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம், ஓய்வு பெற்ற நீதிபதி கண்ணன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து ஆய்வு செய்தது.
மிகவும் ஆதிர்ச்சியளிக்கும் விதமான அந்த குழுவின் அறிக்கை, வலிமையான பரிந்துரைகளை முன்மொழிந்தது. அவற்றை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. தற்போது வந்திருக்கும் வழக்கு 2007க்கு முற்பட்ட ஆண்டுகளில் நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
நீதிமன்ற உத்தரவின்படி, கண்ணன் குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டுள்ளனவா என்று அறிந்துகொள்ள கல்லூரி நிர்வாகத்தை தொடர்பு கொண்டோம். ஆனால், பதில் இல்லை. ( 12 மணி நேர அவகாசத்திற்கு பிறகே இத்தகவல் எழுதப்படுகிறது. இதுவரை பதில் இல்லை).
கல்லூரியின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இருக்கும் விதிமுறைகளிலும் பாலியல் ரீதியான பாதுகாப்புக்கென எந்த விதிகளும் இல்லை. குறிப்பாக கண்ணன் குழு பரிந்துரைத்த பணியிட பாதுகாப்பு, பாலியல் குற்றங்கள் தடுப்பு சட்டம், போக்சோ சட்டம் உள்ளிட்டவற்றை முதன்படுத்தி உருவாக்கப்பட வேண்டிய கொள்கைகள் குறித்து தகவல் இல்லை.
2024ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, ஆசிரியர்கள் தனி வகுப்புகள் நடத்தக்கூடாது என்ற அறிவிப்புடன் கூடிய வழிகாட்டு நெறிமுறைகள்
2018இல் புதிதாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு, அவையும் இன்னும் அங்கீகரிக்கப்படாத (Approval Awaited) என்ற நிலையிலேயே உள்ளன. (https://kalkbuckmedi21.s3.ap-south-1.amazonaws.com/pdf/regulations/Regulations-Draft.pdf )
மீண்டும் மீண்டும் இதுபோன்ற வழக்குகள் வரும் நிலையில், தமிழ்நாடு மற்றும் இந்திய அரசு உடனடியாக தலையிட்டு முறைமைப்படுத்த வேண்டியது அவசியம்.