கடலூர் மாவட்ட நீர்நிலைகளில் பாதரசம் கலந்துள்ளது என செய்திகள் வெளியான நிலையில், அது குறித்த சோதனை அறிக்கை இன்னும் அதிர்ச்சியூட்டும் விதத்தில் வெளியாகியுள்ளது. குடிநீரில் பாதரசம் கலந்திருக்கும் நிலையில், இது குறித்து தமிழ்நாட்டின் பிரதான சுற்றுச்சூழல் செயல்பாட்டு அமைப்பான பூவுலகின் நண்பர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கை சொல்வது என்ன?
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியமானது NLC நிறுவனத்தால் கடலூர் மாவட்டம் நெய்வேலி சுற்றுவட்டாரத்தில் இயக்கப்பட்டு வரும் அனல் மின் நிலையங்கள் மற்றும் சுரங்கங்களை ஒட்டிய பகுதிகளில் உள்ள நீர்நிலை, மண், நிலத்தடி நீர் மாதிரிகளை சோதனைக்குட்படுத்தி அதன் அறிக்கையைத் தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் சமர்ப்பித்துள்ளது.
இவ்வறிக்கையின் மூலம் மனித ஆரோக்கியத்திற்குப் பேராபத்தை விளைவிக்கக் கூடிய பாதரசமானது நீர்நிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 115 மடங்கு அதிகமாகவும் நிலத்தடி நீரில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 62 மடங்கு அதிகமாகவும் இருப்பது தெரிய வந்துள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் 17.12.2024 அன்று நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சேகரிக்கப்பட்ட நீர் மற்றும் மண் மாதிரிகளில் அபாயகரமான அளவில் பாதரசம், நிக்கல், லெட், காட்மியம் உள்ளிட்ட கன உலோகங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது. இம்மாதிரிகளில் செலினியம் ஆய்வுக்கு உட்படுத்தப்படவில்லை. ஆனால், நெய்வேலி பகுதிகளில் செலினியம் அதிகமிருப்பது பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் ஏற்கெனவே தெரிய வந்திருந்தது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் ஆய்வு மேற்கொண்ட 17 நீர்நிலைகளில், 15 இடங்களில் பாதரசம் பாதுகாப்பான அளவுகளை விட அதிகமாக (0.0012 mg/l to 0.115 mg/l) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாகப் பக்கிங்காம் கால்வாயில் பாதுகாப்பான அளவை விட 115 மடங்கு பாதரசம் அதிகமாக இருப்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. இந்நீர்நிலைகளில் பாதரசம் மிக அதிகமாக இருந்தும் இவை IS 2296 Class E என வகைப்படுத்தப்பட்டதால் அதாவது குடிக்கவோ நீர்ப்பாசனத்திற்கோ தகுதியில்லாத நீர்நிலை என்பதால் பாதரசத்தின் அபாயகர அளவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என மாசு கட்டுப்பாடு வாரியம் தனது அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது.

மக்கள் பயன்பாட்டில் உள்ள வளையமாதேவி கூட்டுக்குடிநீர் திட்டம், பரவனாறு, வாலஜா ஏரி, அய்யன் ஏரி ஆகிய நீர்நிலைகளை எப்படி குடிநீர் ஆதாரமாகக் கருதாமல் இருக்க முடியும்? இயற்கையாக ஒரு நீர்நிலையில் பாதரசம் உள்ளிட்ட கன உலோகங்கள் தோன்றாது என்கிற நிலையில் இந்நீர்நிலைகளில் எப்படி கன உலோகங்கள் கண்டறியப்பட்டுள்ளன? இவை மாசடைந்த நீர்நிலைகள் என்றால் மாசுபாட்டிற்கு யார் காரணம்? இந்நீர்லைகளில் நீர் அருந்தும் கால்நடைகளுக்கும் நீர்நிலைகளில் உள்ள மீன்களுக்கும் பாதரசத்தால் பாதிப்பு ஏற்படாதா? என்கிற கேள்விகளுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் பதிலளிக்க வேண்டும்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் சோதனைக்கு உட்படுத்திய 9 நிலத்தடி நீர் மாதிரிகளில் 6 இடங்களில் பாதரசம் இருப்பது தெரிய வந்துள்ளது. பாதரசத்தின் அனுமதிக்கப்பட்ட அளவானது 0.001 mg/l என்கிற நிலையில் 6 இடங்களில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரிகளில் பாதரசம் 0.0025 mg/l முதல் 0.0626 mg/l வரை கண்டறியப்பட்டுள்ளது (இது அனுமதிக்கப்பட்டதைவிட 2.5 முதல் 62 மடங்கு அதிகம்) குறிப்பாக வானதிராயபுரம் பகுதியில் எடுக்கப்பட்ட நிலத்தடி நீர் மாதிரியில் பாதரசம் அனுமதிக்கப்பட்ட அளவைவிட 62 மடங்கு இருப்பது தெரியவந்துள்ளது.

அப்பகுதி மக்கள் அனைவரும் இந்த நிலத்தடி நீரைத்தான் நீண்ட காலமாக குடிநீராகப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வளவு அபாயகரமான அளவுகளில் பாதரசம் கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களின் உடல்நிலை மற்றும் ஆரோக்கியத்தைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவக் குழுவை நியமித்து பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்.