அவையின் மரபு தெரிந்தவர், கனிவானவனர், கண்டிப்பானவர் என்று முதலமைச்சரால் புகழப்பட்ட மறுநாளே அமைச்சரை, ஒருமையில், அலுவல் வேளையில், பேரவைக்குள்ளேயே பேசியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. என்னதான் நடந்தது? தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பொது
அவையின் மரபு தெரிந்தவர், கனிவானவனர், கண்டிப்பானவர் என்று முதலமைச்சரால் புகழப்பட்ட மறுநாளே அமைச்சரை, ஒருமையில், அலுவல் வேளையில், பேரவைக்குள்ளேயே பேசியிருக்கிறார் சபாநாயகர் அப்பாவு. என்னதான் நடந்தது?
தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவை நிதிநிலை கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. பொது நிதிநிலை அறிக்கை, வேளாண் நிதிநிலை அறிக்கை என இரண்டும் நிறைவுபெற்ற நிலையில், மானியக்கோரிக்கை விவாதங்களும் கேள்வி பதில்களும் எதிர்வரும் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. அனல் பறக்கும் விவாதங்களோடும் அவ்வப்போது சிரிப்பலைகளோடும் நடந்து வருகிறது பேரவை.
இந்த சட்டப்பேரவையில், சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக சாஅர்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர், பெரும்பான்மை இல்லாமல் தோல்வி அடைந்தது. மூன்று முறை வாக்கெடுப்பு நடத்தியும் தோல்வியே கண்ட நிலையில், மீண்டும் தன் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை வழிநடத்தத் தொடங்கினார் சபாநாயகர் அப்பாவு.
‘அடேய்… பொறு’ – சபாநாயகர் அப்பாவு
இந்த நிலையில், இன்று மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றபொழுது அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் ரேஷன் அட்டைகள் தொடர்பாக எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்க எழுந்த அமைச்சர் சக்கரபாணியிடம், ஏற்கனவே ரேஷன் கடைகள் தொடர்பாக தான் வைத்த தன் தரப்பு கோரிக்கை ஒன்றையும் நினைவூட்டி பேசப்பணித்தார் சபாநாயகர்.
அமைச்சரோ, செங்கோட்டையன் பதில் சொல்லத் தொடங்கும் முன், சபாநாயகருக்கு விளக்கமளிக்கத் தொடங்கினார். இந்த விளக்கம் பொருத்தமற்றது என்று குறிக்கும் தொனியில், “அடேய்… பொறு” என்று அழைத்து மறுவிளக்கம் சொன்னார் சபாநாயகர். எந்த சலனமும் காட்டாமல் அமைதியுடன் அதை கேட்டுக்கொண்ட அமைச்சர் சக்கரபாணி, பின்னர் செங்கோட்டையனின் கேள்விக்கு பதிலளித்தார்.
பேரவையில் பேசலாமா?
காலை முதல் நேரலை செய்து வந்த ஊடகங்கள் இதைக் கண்டுகொள்ளவில்லை. இதில் பெரிதுபடுத்தும் அளவுக்கு ஏதும் இல்லை என்று எண்ணியிருக்கலாம். ஆனால், மரபுப்படி பேரவையை நடத்துவதில் வல்லவர் என்றும் கனிவும் கண்டிப்பும் கொண்ட நேர்த்தியான சபாநாயகர் என்றும் முதல்வர் வாழ்த்திய சபாநாயகர் ஒரு மாநில அமைச்சரை அடேய் என்று விளிப்பது எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல.
அன்பின் நிமித்தம், உரிமையின் விளைவாக, வயது மூப்பு காரணமாக என எதைச் சொன்னாலும் பேரவைக்குள் இவற்றுக்கு இடமில்லை. குறைந்தபட்சம் பேரவை அலுவல்களற்று, தனியாக பேசியிருந்தாலும் அது பொறுக்கப்படலாம். ஆனால், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்தபடி, பேரவை அலுவல் தொடர்பாக பேசும்போதே இப்படியொரு கண்ணியக்குறைவான தொனியை பயன்படுத்துவார் என்றால், இது கண்டிக்கப்பட வேண்டியதுதான்.
கனிவும் கண்டிப்பும் மிக்க ‘இந்த’ பேரவை மாண்பும் மரபும் தெரிந்த சபாநாயகரின் நிலைப்பாடு இதில் என்ன என்பதையும் அறிய வேண்டும்.