இந்திரா காந்தியிடம் மன்னிப்பு கேட்டாரா சீதாராம் யெச்சூரி? உண்மை என்ன?
September 14, 2024
0
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அகில இந்திய் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி டெல்லியில் கடந்த வியாழனன்று (12.09.2024) காலமானார். கட்சி வேறுபாடின்றி ஒரு மூத்த தலைவரின் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா
Share:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அகில இந்திய் பொதுச்செயலாளர் சீதாரம் யெச்சூரி டெல்லியில் கடந்த வியாழனன்று (12.09.2024) காலமானார். கட்சி வேறுபாடின்றி ஒரு மூத்த தலைவரின் மரணத்துக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வந்த நிலையில், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி சீதாராம் யெச்சூரி ஆகிய இருவரும் இருக்கும் புகைப்படம் ஒன்று பகிரப்பட்டது.
சந்தேகப்படும்படியான தகவலைக் கொண்டிருந்த அப்படம் குறித்ததுதான் இன்றைய பொய் பொய்யப்பன் தொடரின் பகுதி.
கீழே இருக்கும் இந்தப் படத்தைப் பாருங்கள். இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் சீதாராம் யெச்சூரி எதையோ வாசிக்கிறார். முன்னே இளைஞர்கள்/மக்கள் கூட்டம் அமர்ந்திருக்கிறது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தப் படத்தில் அவர் என்ன வாசிக்கிறார்? முன்னாள் பிரதமரே முன்னின்று நடத்தி வைக்கும் அளவுக்கு என்ன சம்பவம் அது?
இதுதான் அந்தச் சம்பவம் என்று விளக்குகிறது கீழ்க்கண்ட பதிவு.
மேலே உள்ளபடி, “1975. அவசரநிலை காலம். ஜவாகர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்குள் காவல்துரயுடன் நுழைந்த இந்திரா காந்தி, அப்போது மாணவர் சங்க தலைவராக இருந்த சிபிஐ தலைவர் சீதாரம் யெச்சூரியை அடித்து, அவரை பதவி விலகவும் மன்னிப்பு கோரவும் கட்டாயப்படுத்தினார். இதுதான் கம்யூனிஸ்டுகளைக் கையாளும் இரும்புக்கரம் என்று அழைக்கப்படுகிறது . இவருக்கு (இந்திரா காந்திக்கு) முன் அமித்ஷா ஒரு துறவியை போல தெரிகிறார்” என்று அப்பதிவில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் உண்மை என்ன? இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆராய்ந்தது நம் குழு. ஏற்கனவே இந்த படமும் இந்த தகவலும் பலமுறை பரவி பல்வேறு தளங்கள் இது ஒரு பொய்ச்செய்தி என்றும் வெளியிட்டுள்ளன. ஆனால், இந்தப் படத்தின் உண்மையான பின்னணி என்ன? அது எங்கே ஆவணப்படுத்தபட்டுள்ளது? அதிகாரப்பூர்வ தகவல் என்ன என்பவை வெளியிடப்படவில்லை. அதைத் தேடிப் பதிவு செய்வதுதான் இந்தக் கட்டுரையின் நோக்கம்.
அவசரநிலைப் பிரகடனம் 1977இல் முடிவுக்கு வந்தது. அதன்பிறகான மக்களவைத்தேர்தலிலும் இந்திரா காந்தி தோல்வியுற்றார். ஆனாலும், டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பொறுப்பை அவர் தொடர்ந்து வைத்திருந்தார். இதனைக் கண்டித்து நிகழ்ந்த மாணவர் போராட்டம் அது. நிகழ்ந்த இடம் பல்கலைக்கழக வளாகம் அல்ல. இந்திரா காந்தியின் இல்லம். இந்திரா காந்தியை அந்த வேந்தர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யக்கோரி சுமார் 500 மாணவர்கள் அவரது இல்லத்தை முற்றுகை இட்டுள்ளனர்.
அங்கு தான் மாணவர்களிடையே இறங்கி வந்து, தீர்மானத்தை வாசிக்க கேட்டுள்ளார் இந்திரா காந்தி.
இந்த சம்பவத்தை சீதாராம் யெச்சூரியே ஒரு நேர்காணலின் போது நினைவுகூர்ந்தார். அவர் கூறுகையில்,”நாங்கள் 500 பேர் அங்கு இருந்தோம். இந்திரா காந்தியின் உதவியாளர் எங்களிடம் வந்து, உங்களில் 5 பேரை மட்டும் இந்திரா காந்தி சந்திக்க விரும்புகிறார் என கூறினார். ஆனால், அவரை வெளியே வரும்படி நாங்கள் கோரிக்கை வைத்தோம், அவரே கீழே வந்தார். அவருக்கு எதிரான எங்களின் தீர்மானத்தை நாங்கள் வாசித்தோம். ஆனால் அவர் அதை நிதானமாக கேட்டார். நான் அவரிடம் எங்களின் தீர்மானத்தை கொடுத்தேன், அதை அவர் பொறுமையாக பெற்றுக்கொண்டார். இரண்டு நாள்களில் அவர் ராஜினாமா செய்தார்” என்றார்.
இதுகுறித்து ஜிஸ்ட் நியூஸ் தளத்துக்கு சீதாராம் யெச்சூரி வழங்கிய நேர்காணலின் இணைப்பு : சீதாராம் யெச்சூரி நேர்காணல் – இந்திரா காந்தி பதவி விலகல்
பரவும் இந்த படம் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒரு மாணவர் போராட்டத்தின் உறுதிக்கு கிடைத்த வெற்றியையும், மாணவர் போராட்டங்களை மதித்த அரசியல் தலைவரின் மாண்பையும் ஒருசேரக் காட்டும் புகைப்படம்.
இதன்மீது அவதூறுகளைக் கட்டியமைக்கும் மனநோய்க்கு என்னவென்று மருந்து சொல்வது?உள்நோக்கத்தோடு பகிரப்படவில்லை என்று காரணங்கள் சொன்னாலும், உண்மை என்று உறுதி செய்யப்படாத எதையும் பகிரக்கூடாது என்பதே அடிப்படை அறிவு.
அதிலும் குறிப்பாக. இறந்த தலைவர் குறித்து அன்றைய தினமே பரப்பப்படும் ஒரு பொய்செய்திக்கு உள்நோக்கம் இல்லாமல் இருக்க வாய்ப்புகள் குறைவுதான்.
இந்தத்தொடரின் பொய் பொய்யப்பன் என்ற பட்டத்துக்கு தகுதி வாய்ந்தவர்கள், மேலே குறிப்பிட்ட பொய்யை பரப்பும் ஒவ்வொருவரும் என்பதே சரி.