அரசியல் தமிழ்நாடு

கோவையில் முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைது

  • September 11, 2024
  • 0

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த இஸ்லாமியர் அல்லாத பெண்களிடம், ஹிஜாப் அணியச் செய்து, அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் போலீசார்

கோவையில் முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைது

கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் நடைபயிற்சிக்கு வந்த இஸ்லாமியர் அல்லாத பெண்களிடம், ஹிஜாப் அணியச் செய்து, அதை வீடியோ எடுத்து யூடியூப் சேனலில் வெளியிட்டதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கோவை மாநகர காவல் துறையின் சைபர் கிரைம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சர்ச்சைக்குள்ளான இந்த வீடியோவும் யூடியூப் தளத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்த கைது நடவடிக்கைக்கு, எதிர்ப்பும் ஆதரவுமாக இரு தரப்பு விவாதங்கள் எழுந்துள்ளன. இதற்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல்.முருகனும் எதிர்வினையாற்றியுள்ளார்.

கோவை மாநகரின் இதயப்பகுதியான ரேஸ் கோர்ஸ் (Racecourse) பகுதியில் செப்டம்பர் 3-ஆம் தேதி அன்று, இந்த சர்ச்சைக்குரிய ஹிஜாப் சேலஞ்ச் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வீடியோவை ‘இந்திய இளம் பெண்களிடம் ஹிஜாப் சவால்–முதல் முறையாக ஹிஜாப் முயல்கிறேன்!’ (Hijab Challenge with Indian Girls) என்ற தலைப்பில் ‘அல் ஹஸ்வா’ என்ற யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளனர். ஹிஜாப் அணிந்த முஸ்லிம் அல்லாத மாற்று மத பெண்கள் தங்களது அனுபவங்களை கூறும் வகையில் அந்த வீடியோ உள்ளது. அதன் முகப்பில், ஓர் இளம்பெண் டிராக் சூட், டி சர்ட் உடன் இருக்கும் படத்துடன், ஹிஜாப் அணிந்துள்ள படத்தையும் இணைத்து ‘முன்னர் பின்னர்’ (Before, After) என்றும் பதிவேற்றியுள்ளனர்.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் பரவியதும், இந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் அதற்கு எதிராகக் கருத்துகளைப் பதிவிட்டனர்.

பாரத் சேனா என்ற அமைப்பின் நிர்வாகியான எஸ்.ஆர்.குமரேசன் என்பவர் கோவை சைபர் க்ரைம் பிரிவில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் அடிப்படையில், ‘அல் கஸ்வா யூடியூப் சேனல்’ பங்குதாரரான 22 வயது இளைஞர் அனஸ் அஹமது, கடந்த 6 ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.