ஜெலான்ஸ்கி அழைப்பினை ஏற்று பிரதமர் நரேந்திர மோடி வரும் 23ஆம் தேதி அரசு முறை பயணமாக உக்ரைனுக்கு செல்கிறார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் மூன்று ஆண்டுகளைக் கடந்து நடைபெற்று வருகிறது. போரில் உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா கைப்பற்றியது என்றபோதிலும், ரஷ்யாவுக்கு இணையாக தாக்குதல்களை தொடுத்து வருகிறது உக்ரைன்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “உக்ரைன் பிரதமர் ஜெலான்ஸ்கி அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக இந்த வார இறுதியில் 23ஆம் தேதி உக்ரைன் நாட்டுக்கு செல்கிறார். பிரதமரின் உக்ரைன் பயணம் ஒரு மைல்கல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணமாகும்.
நாம் நமது தூதரக உறவுகளை ஏற்படுத்திய பிறகு, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின் உக்ரைன் தலைநகர் கீவ்-க்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடிதான். ரஷ்யா உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தையை இந்தியா ஆதரிக்கிறது” என்று தெரிவித்துள்ளது.
ரஷ்ய அதிபர் புடின் உடனான பிரதமர் மோடியின் சந்திப்பை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். உலகின் மிக ரத்தம் தோய்ந்த ஒரு கொலை குற்றவாளியை உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் கட்டித் தழுவுகிறார் என்று சாடியிருந்தார். இந்த நிலையில்தான் ஜெலான்ஸ்கி அழைப்பை ஏற்று உக்ரைனுக்கு செல்கிறார் பிரதமர் மோடி.
ரஷ்யா – உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி உக்ரைன் செல்வது உலக அரங்கில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.