சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை நாளை நேரில் ஆஜர்படுத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தது. இதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்ட செந்தில்பாலாஜி ஒரு வருடத்திற்கும் மேலாக சிறைவாசம் அனுபவித்து வருகிறார்.
அதே சமயம் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு விசாரணை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி அல்லி முன்பு நடைபெற்று வருகிறது. குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார். இதனிடையே குற்றச்சாட்டுப் பதிவை தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது. அதனை நிராகரித்த நீதிபதிகள் “செந்தில் பாலாஜியை குற்றச்சாட்டு பதிவுக்காக நாளை நேரில் ஆஜர்படுத்த வேண்டும். அப்படி ஆஜர்ப்படுத்தவில்லை எனில் காணொலி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்” என்று தெரிவித்தார். மேலும், செந்தில்பாலாஜியின் நீதிமன்றக் காவலை நாளை வரை 53வது முறையாக நீட்டித்து ஆணையிட்டுள்ளார்.