டெய்ர் அல்-பாலா நகரில் உள்ள பள்ளியை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்தியுள்ள தாக்குதல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹமாஸ் இயக்கத்தினரை ஒழிக்க வேண்டும் என்ற திட்டத்தில் அப்பாவி மக்கள், பச்சிளங்குழந்தைகளை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்து வருகிறது. இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வந்தாலும் போரை முடிவுக்கு கொண்டு வர முடியவில்லை.
இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர் 294வது நாளை எட்டியுள்ளது. இன்றைய தினம் போர் பூமியில் நடைபெற்று வரும் பரபரப்பான விஷயங்கள் என்னென்ன என்று பார்த்தால், இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மேற்கு கரை ஹமாஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இஸ்ரேலுக்கு ஆதரவாக நிற்கும் அமெரிக்கா, பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.
இஸ்ரேலை ஈரான் தாக்கியதன் பின்னணி என்ன?
பிணையக் கைதிகளை விடுவிக்க திட்டம்
காஸாவில் சிறை பிடிக்கப்பட்டுள்ள பிணையக் கைதிகளை விடுவிக்க தீவிர நடவடிக்கைகள் எடுப்போம் என்று அமெரிக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். மறுபுறம் காஸாவில் தங்களது தாக்குதலை தீவிரப்படுத்தி கொண்டே இருக்கிறது இஸ்ரேல் ராணுவம்.
சுரங்க பாதை அழிப்பு பிளான்
சமீபத்தில் காஸாவில் இருந்த ஒரு கிலோமீட்டர் நீள சுரங்கத்தை ராக்கெட்கள் வீசி அழித்துள்ளது. இந்த சூழலில் தான் அதிர்ச்சியூட்டும் விஷயம் ஒன்று வெளியாகியிருக்கிறது. காஸாவில் உள்ள டெய்ர் அல்-பாலா நகரில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றின் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 30 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த தகவலை ஹமாஸ் சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
பள்ளிக்கூடம் மீது இஸ்ரேல் தாக்குதல்
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், அந்த பள்ளிக்கூட வளாகத்திற்குள் தான் ஹமாஸ் படையினர் பதுங்கி இருக்கின்றனர். ஆயுதங்களை பதுக்கி வைத்துள்ளனர். தாக்குதல் சம்பவங்களுக்கு பல்வேறு திட்டங்களை தீட்டி வந்தனர். எனவே தான் தாக்குதல் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர். ஆனால் அங்கு அப்பாவி பாலஸ்தீனிய மக்கள் பலரும் இருந்ததால் பெரும் உயிர்சேதம் ஏற்பட்டு அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.