டெல்லியில் ஜூலை 27ல் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி ஆளும் மாநில முதல்வர்கள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.
ஏற்கனவே, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
ஒன்றிய பட்ஜெட்டை கண்டிக்கும் வகையில், பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புறக்கணிப்பதாக அறிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்களான சித்தராமையா, ரேவந்த் ரெட்டி, சுக்விந்தர் சுகு ஆகியோரும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். மேலும் சில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், “தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட் பாரபட்சமானது மிகவும் ஆபத்தானது. இந்த பட்ஜெட் மத்திய அரசு பின்பற்ற வேண்டிய நேர்மையான கூட்டாட்சி கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரானது. இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் காங்கிரஸ் ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பார்கள். ” என அறிவித்துள்ளார்.