நில மோசடி விவகாரத்தில் தேடப்பட்டு வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளாவில் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கரூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் முறைகேடான வகையில் பத்திரப்பதிவு செய்ததாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி கையிலெடுத்து விசாரித்த வந்தது. இவரது முன் ஜாமீன் மனு கரூர் நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், 5 தனிப்படைகள் அமைத்து தேடப்பட்டு வந்தார்.
வட மாநிலங்களில் தலைமறைவாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் தீவிரமாக தேடினர். இந்நிலையில் கேரளாவில் இருப்பதாக தகவல் கிடைத்தது. உடனே அங்கு தனிப்படை போலீசார் சென்றனர். கடந்த சில நாட்களாக நோட்டமிட்டு வந்த நிலையில் இன்று காலை அதிரடியாக கைது செய்துள்ளனர். இதில் மேற்கு மண்டல சிபிசிஐடி அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இவர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கரை தமிழகம் கொண்டு வருவதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.