சிறப்பு கட்டுரைகள் சினிமா

பார்த்துப் பார்த்து காய் நகர்த்தும் விஜய்… வெற்றியா? வீழ்ச்சியா?

  • March 9, 2024
  • 0

நடிகர்கள் அரசியலுக்கு வருவதொன்றும் தமிழ்நாட்டு அரசியல் பரப்பில் புதியதல்ல. ஆனால், வென்ற உதாரணங்களை விட வீழ்ந்த உதாரணங்களை அதிகம் கொண்டதாகவே கடந்த கால வரலாறு இருக்கிறது. எம்.ஜி.ஆர். ஈட்டிய பெருவெற்றி ஒன்றையே முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரும் நடிகர்கள்

நடிகர்கள் அரசியலுக்கு வருவதொன்றும் தமிழ்நாட்டு அரசியல் பரப்பில் புதியதல்ல. ஆனால், வென்ற உதாரணங்களை விட வீழ்ந்த உதாரணங்களை அதிகம் கொண்டதாகவே கடந்த கால வரலாறு இருக்கிறது. எம்.ஜி.ஆர். ஈட்டிய பெருவெற்றி ஒன்றையே முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரும் நடிகர்கள் நேரடி அரசியலை நேர்கொள்ள முடியாமல், காலப்போக்கில் கழகங்களோடு கரைந்து போனதும் உண்டு. காணாமல் போனதும் உண்டு.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் முதல் நடிகர் சரத்குமார், கார்த்திக் என இந்த பட்டியல் நீளும். அந்த வரிசையில் கொஞ்சம் தப்பிப்பிழைத்து தடுக்கி விழுந்த கதை தேமுதிகவுக்கு சொந்தமானது. நடிகர், அரசியல்வாதி என இரண்டிலும் வெற்றி பெற்ற ஒருவராக எம்.ஜி.ஆருக்கு பிறகு தேமுதிகவின் முன்னாள் தலைவர் விஜயகாந்தைச் சொல்லலாம். இந்த வரிசையில் புதிதாக இந்த பட்டியலில் சேர்ந்திருக்கிறார் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான விஜய்.

தமிழக வெற்றி கழகம் என்று தப்பும் தவறுமாக தமிழிலணக்கம் கொண்ட அறிக்கையுடன் தலைமைக் கழக அறிவிப்பு வெளியானது. ’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற வாசகத்தை முன்னிறுத்தி தன் கட்சிப் பெயரை வெளியிட்டார் விஜய்.. ஆனால், பெரிதாக வரவேற்போ உற்சாகமோ பொதுவெளியில் இல்லை. காரணம், பொத்தாம்பொதுவாக அவசரத்தில் அரசியலுக்கு வரும் நடிகர் என்ர எண்னத்தில்தான் தொடக்கத்தில் விஜயை தமிழ்நாடு எண்ணியது. ஆனால், அடுத்தடுத்த நகர்வுகள் கவனிக்க வைத்தன.

அறிக்கையில் தான் மொழிப்பிழையே தவிர, அறிவிக்கப்பட்ட செய்தி அதிர்வைக் கிளப்பத் தவறவில்லை. நடிப்பைக் கைவிட்டு முழுநேர அரசியலைக் கைக்கொள்ளப்போவதாக அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது ஏராளமான வாதப்பிரதிவாதங்களைக் கிளப்பியது.