அரசியல் சிறப்பு கட்டுரைகள் சினிமா தமிழ்நாடு

தமிழன்னை சிலையின் கைகளை எம்.ஜி.ஆர். உடைத்தாரா? 

  • February 15, 2024
  • 0

தமிழணங்கு: தமிழன்னை சிலையின் கைகளை எம்.ஜி.ஆர். நீக்கியது ஏன்? சிலை எங்குள்ளது? மொழியைத் தாயாக வணங்கும் பழக்கம் தமிழர்களிடையே தொன்று தொட்டு பயின்று வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், தாயை தெய்வமாக உயர்த்தும்போது அவளுக்கு 4 கைகளா?

Share:

தமிழணங்கு: தமிழன்னை சிலையின் கைகளை எம்.ஜி.ஆர். நீக்கியது ஏன்? சிலை எங்குள்ளது?

மொழியைத் தாயாக வணங்கும் பழக்கம் தமிழர்களிடையே தொன்று தொட்டு பயின்று வருகிறது என்பது உங்களுக்கு தெரியும். ஆனால், தாயை தெய்வமாக உயர்த்தும்போது அவளுக்கு 4 கைகளா? இரண்டு கைகளா? என்று தொடங்கிய சர்ச்சையால் தமிழகத்தில் இரண்டு இடங்களில் இரண்டு விதமாக காட்சியளிக்கிறார் தமிழன்னை. 

தமிழணங்கின் உருவம் தொடர்பாக இருவேறு ஓவியங்கள் அண்மைக்காலமாக பேசுபொருளாகியுள்ள நிலையில், 20 நூற்றாண்டின் பிற்பகுதியிலேயே தமிழன்னைக்கு இருவேறு உருவங்கள் கொண்ட சிலைகள் அமைந்தது எப்படி? 

அரசியலும் தமிழும் இணைந்ததால் அப்போது தமிழன்னைக்கு நடந்தது என்ன? 

முதன் முதலாக தமிழ்மொழியை அன்னையாக பாவித்து ஒரு சிலை செய்து கோயில் எழுப்ப வேண்டும் என்ற எண்ணத்தை கருக்கொண்டவர் காரைக்குடியைச் சேர்ந்த காந்தியவாதி சா.கணேசன். 

கம்பன் கழகங்கள் என்னும் நிறுவனம் உலகெங்கும் உருவாகக் காரணமாக முதன்முதலில் காரைக்குடியில் கம்பன் கழகத்தை நிறுவியர் இவர்தான். 

காந்தியவாதியும் சுதந்திரப்போராட்ட வீரருமான இவர், காங்கிரஸிலிருந்து பிரிந்து இராஜகோபாலாச்சாரியார் சுதந்திரா கட்சியை நிறுவியபோது, அதன் தொடக்ககால நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார். 1962ஆம் ஆண்டு தேர்தலில் வென்று காரைக்குடி எம்.எல்.ஏவாகவும் இருந்தார். 

முதல் தமிழன்னை கோயில்: 

தமிழ்மீதான பெரும்பற்றால் அரசியலும் தமிழுமாக இருந்த (கவிஞர் கண்ணதாசன், நாவலர் நெடுஞ்செழியன், கருணாநிதி உள்ளிட்ட) தலைவர்கள் பலரும் இவருக்கு அணுக்கமான நண்பர்களாக அமைந்தனர். இந்த நிலையில், தமிழ்த்தாய்க்கு கோயில் எழுப்ப வேண்டும் என்ற தன் எண்ணத்தை அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியிடம் தெரிவிக்க, மறுப்பின்றி ஒப்புதல் அளித்து 1975ஆம் ஆண்டு அதற்கான கால்கோள் (அடிக்கல்  நாட்டு விழா) நடும் விழாவும் நடத்தி முடிக்கப்பட்டது. 

ஆனால், மொத்தமாக அரசு தரப்பில் இருந்து இதை செய்தால், பின்னாட்களில் அரசே இதை திரும்ப எடுத்துக் கொள்ள வாய்ப்புண்டு என்பதால், 5 லட்ச ரூபாய் நிதியுதவி மட்டும் கருணாநிதி வழங்கினார். 

தமிழன்னை சிலை என்ற திட்டத்தை கருக்கொண்டவர் சா.கணேசன் என்றால், அதற்கு உருக்கொடுத்தவர் கணபதி ஸ்தபதி. தமிழன்னைக்கு சிலை செய்ய அப்போதையை மகாபலிபுரம் வை.கணபதி ஸ்தபதியிடம் பணி ஒப்படைக்கப்பட்டது. சிலை செய்யும் வேலைகள் நடக்கத் தொடங்கின. 

ஆனால், கோயில் திறப்பு தொடர்பாக எந்த தேதியும் குறிக்கப்படவில்லை. இந்தப் பணி கிடப்பிலேயே இருந்தது.  

எம்.ஜி.ஆரும் தமிழன்னை சிலையும்: 

1981ஆம் ஆண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவர் பாரதரத்னா எம்.ஜி.ஆர் அவர்களால் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு சனவரித் திங்கள் 4 ஆம் நாள் முதல் 10 ஆம் நாள் வரை மதுரை மாநகரில் நடத்தப்பெற்றது. 

அன்னைத் தமிழ்மொழி மேலும் பெருமை கொள்ளும் வகையில் மதுரையில் உலகத் தமிழ்ச்சங்கம் தொடங்கவும் தஞ்சையில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கவும் இம்மாநாடு வகை செய்தது.

இந்த மாநாட்டுக்கு இடையில், ஜனவரி 7ஆம் தேதி ஐந்தாம் உலகத்தமிழ் மாநாடு நடைபெற்ற  மதுரை தமுக்கம் மைதானத்தின் முன் தமிழன்னைக்கு ஒரு சிலையை திறந்து வைத்தார் எம்.ஜி.ஆர்.  ஆனால், இந்த சிலை எங்கிருந்து வந்திருக்க முடியும்? 

எங்கிருந்து வந்தது இந்த சிலை? 

காரைக்குடி சா.கணேசன் கருணாநிதிக்கு மட்டுமல்ல எம்.ஜி.ஆருக்கும் நண்பர்தான். எனவே, அடிக்கல் நாட்டப்பட்ட கோயிலுக்கு திறப்புநாள் ஏதும் இல்லை என்பதால், கணபதி ஸ்தபதி தற்போது செய்து வரும் சிலையை உலகத் தமிழ் மாநாட்டுக்காக மதுரையில் நிறுவத் தரவேண்டும் என்று கேட்டுள்ளார் எம்.ஜி.ஆர். 

இதற்கு ஒப்புக்கொண்ட சா.கணேசன் சிலையைத் தந்தார். அதே சமயம், இன்னொரு சிலையை செய்வதற்கான செலவை தம் அரசே அளிக்கும் என்றும் எம்.ஜி.ஆர் உறுதி கொடுத்து இரண்டாவது சிலை செய்யும் பணி நடைபெற்றது. 

இப்படித்தான் இந்த சிலை மதுரையில் 1981 ஜனவரி 7ஆம் தேதி அப்போதையை  இந்திய பிரதமர் இந்திரா காந்தியால் மதுரையில் திறந்து வைக்கப்பட்டது. ஆனால், திறந்த பிறகுதான் பிறந்தது புதிய பிரச்னை.

கைகளை உடைத்தது ஏன்? 

காரைக்குடியினர் கேட்டதன்படி வடிவமைக்கப்பட்ட தமிழன்னையின் சிலையில் 4 கைகள் இருந்தன. இது பெரும் சர்ச்சையை அப்போது கிளப்பியது. குறிப்பாக பகுத்தறிவாளர்கள் இதை கடுமையாக எதிர்த்தனர். அத்துடன் “கடவுள் வழிபாடு போல தமிழன்னை சிலையை நிறுவுவதா?” என விமர்சனங்களும் எழுந்தன. 

இந்த விமர்சனங்களுக்கு வினையாற்றும் விதமாக அதன்பிறகு தமிழன்னை சிலையில் இருந்து இரண்டு கைகள் நீக்கப்பட்டன. முன்னிருக்கும் அபயக்கைகள் அப்படியே வைக்கப்பட்டு பின்னே இருக்கும் கைகள் இரண்டும் ஸ்தபதியைக்  கொண்டே முறைப்படி நீக்கப்பட்டன. 

இது தொடர்பாக காரைக்குடி கம்பன் கழகத்தின் தற்போதைய தலைவரும், சா.கணேசனின் சீடருமான பழ. பழனியப்பனைத் தொடர்பு கொண்டது பென் பாய்ண்ட். அவரோ, “அரசியலுக்கு அப்பாற்பட்டு” இதில் பதிலளிப்பதாக பேசத்தொடங்கினார். 

“தமிழன்னை சிலையின் கைகளை உடைக்க வேண்டும் என்று எந்த உள்நோக்கத்திலும் அப்படி உடைக்கப்படவில்லை. ஆனால், அந்த நேரத்தில் எழுந்த அரசியல் விமர்சனங்களுக்கு எம்.ஜி.ஆர். பதிலளிக்க வேண்டி இருந்தது. அவ்வளவுதான். இப்போதும் கூட மதுரை தமுக்கம் மைதானத்தில் இருக்கும் தமிழன்னை சிலையை கவனித்துப் பார்த்தால் கைகள் நீக்கப்பட்டதற்கான தடங்கள் சிலையில் அப்படியே இருக்கும் என்று தெரிவித்தார். 

எனில் காரைக்குடி கோயில் என்னானது? 

“இரண்டாவதாக செய்யப்பட்ட சிலை தயாரான பிறகு, 1993ஆம் ஆண்டு அந்தக் கோயிலை திறக்க முடிவு செய்யப்பட்டது. அப்போது எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னான அரசியல் எல்லாம் முடிந்து, தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார் ஜெயலலிதா. ஆனால், கருணாநிதிதான் வந்து இதைத் திறக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன்.”

எனவே, நானே கருணாநிதியை நேரில் சந்தித்து அழைத்தேன். ஆனால், என்னை இப்போது அழைத்தால் பின்விளைவுகளை நீ சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் என்னை எச்சரித்தார். அதையும் மீறி அவரை அழைத்து வந்து கோயில் திறப்புவிழாவை நடத்தினோம். இதற்கு பெருமளவு உதவியவர் திரைப்பட இயக்குநரும், அப்போதைய காரைக்குடி  திமுக எம்.எல்.ஏவுமான இராம நாராயணன். 

”இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இங்கு நிறுவப்பட்ட தமிழன்னைக்கு இன்னும் 4 கைகள் உண்டு. காரைக்குடி கம்பன் மணி மண்டபத்தில் அமைந்திருக்கும் இந்த தமிழன்னை கோயிலில் நீங்கள் இப்போதும் இதைக் காணலாம்” என்கிறார் பழ.பழனியப்பன்.  

இப்படியாக அன்று முதல் இன்று வரை ஏதாவதொரு விதத்தில்,  தமிழ்நாட்டில் தமிழன்னையின் உருவம் தொடர்பான விவகாரம் எப்போதும் பரபரப்பான பேசுப்பொருளாகவே இருந்து வந்திருக்கிறது. இந்த வரிசையில், ஓவியர் சந்தோஷ் நாராயணன் வரைந்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் அண்மையில் பகிர்ந்த தமிழணங்கு என்ற பெயரிலான ஓவியமும், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பகிர்ந்த தமிழணங்கு என்ற பெயரிலான ஓவியமும் தமிழுக்கு உருவம் தரும் விவகாரத்தை மீண்டும் மையமண்டபத்துக்கு கொண்டுவந்தன.

எப்படிப் பார்க்கினும், தமிழன்னை மொழியாக இருக்க வேண்டியவள். அன்னையா தெய்வமா என்ற அலைக்கழிப்பில் ஒரு வழியாகி இருக்கிறாள்.