திமுக அரசுக்கு எதிராக வரும் 24ஆம் தேதி மதுரையில் உண்ணா விரதப் போராட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையின் கீழ் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக் கல்வித்துறைக்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. இதற்கு அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இந்த முயற்சியை திமுக அரசு உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்த சூழலில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளின் நிர்வாகத்தை பிற்படுத்தப்பட்டோர் நலத் துறையிடமிருந்து பறித்து, உள்நோக்கத்தோடு பள்ளிக் கல்வித் துறைக்கு மாற்ற முயற்சிக்கும் விடியா திமுக அரசைக் கண்டித்து ஏற்கனவே அறிக்கை வெளியிட்டேன்.
கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளின் நிர்வாகத்தை மாற்ற முயற்சிக்கும் நடவடிக்கைகளை விடியா திமுக அரசு உடனடியாகக் கைவிடாவிடில் பாதிப்புக்குள்ளாள்ளாகிய கள்ளர் சமுதாய மக்களின் கோரிக்கையை வலியுறுத்தி, அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து நடத்தும் என்று எச்சரித்திருந்தேன்” என்று சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து, “பேனா சிலை வைப்பதிலும், 100 ரூபாய் நாணயம் வெளியிடுவதிலும், அதனை விளம்பரப்படுத்துவதிலும் மட்டுமே ஈடுபாடாக உள்ள திமுக அரசு, மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகள் குறித்து எந்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுத்ததாக வரலாறு இல்லை. அதேபோல், தற்போதும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளில் நிர்வாக முறையை மாற்றத் துடிக்கும், தன்னுடைய மக்கள் விரோதப் போக்கில் இருந்து மாறுவதாகத் தெரியவில்லை” என்று குற்றம்சாட்டினார்.
ஆகவே, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள் மற்றும் விடுதிகளை உள்நோக்கத்தோடு முடக்க முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், பள்ளிக் கல்வித் துறையோடு இணைக்கும் முயற்சியினைக் கைவிட வலியுறுத்தியும், அதிமுக மதுரை, திண்டுக்கல், தேனி ஆகிய வருவாய் மாவட்டங்களின் சார்பில் வரும் 24ஆம் தேதி காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, மதுரை மாவட்டம், செக்கானூரணி பேருந்து நிலையம் அருகில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.